சனி, 22 அக்டோபர், 2011

சந்தோசம்

அனைவருக்கும் போல என்னுடைய குழந்தை பருவமும் எனக்கு சந்தொசத்தைமட்டுமே அதிகமாக தந்தது. என்னுடைய ஏழ்மையும் கிராம சூழ்நிலையும் சேர்ந்து எனக்கான சந்தோசத்தை நிர்ணயத்ததும் இல்லாமல் அதற்க்கான வசதியை நானேதான் உருவாக்கிகொள்ளவேண்டும் என்பதையும் கற்றுத்தந்தது.
 
அத்தியாவசிய தேவை அனைத்தும் போதுமான அளவிற்கு இருந்தது/கிடைத்தது. உணவு - வீட்டைவிட்டால் உறவினர்கள் (அக்கம்பக்கத்தினர் உள்ப்பட), பள்ளி, தோட்டம், காடு என பல இடங்களில் கிடைத்தது. பசிக்கான உணவு வீடுகளிலும் பள்ளியிலும் கிடைத்தது. ருசிக்கான உணவு தோட்டத்திலும் காடுகளிலும் கிடைத்தது. உறைவிடம் - ஒரு விவசாய குடும்பத்திற்கு தேவையான அனைத்தும் உள்ள அழகான ஓட்டு வீடு. நான் உண்ண, உறங்க, வெளியில் விளையாட செல்லமுடியாத நேரத்தில் சகோதரகளுடன் விளையாட அல்லது சண்டைபோட போதுமான இடம். என்னுடைய உலகம் வீட்டுக்கு வெளியில் இருந்தது. உடை - நான் கூச்சபடாத அளவிற்கு தேவையான உடை. உடையின் தேவை அந்த அளவிற்கு தெரியாத காலம்.



எதுவாக இருந்தாலும் என் தம்பி மற்றும் அண்ணன் இருவரின் விருப்பு வெறுப்புகளை தாண்டியே எனக்கு வந்துசேரும். அதனால் என்னுடைய எதிர்பார்ப்புகளை அது ஏறக்குறைய முழுவதுமாக அழித்து ஏமாற்றம் அற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது.

முதலீடு இல்லாத பல கிராமத்து விளையாட்டுக்கள்  என்னை சூழ்ந்து என் வயதுக்கு சவால்விட்டுக்கொண்டிருந்தது. விளையாட்டின் வெற்றியோ தோல்வியோ என் சந்தோசத்தை அவ்வளவாக நிர்ணயக்கவில்லை. என்னுடைய  திறமையின் உச்சத்தை தீண்டினாலே போதும். என்னுடைய சந்தொசத்திர்க்கான தேடல்கள் என் வீட்டிலும், தோட்டத்திலும், தெருவிலும், எங்கள் ஊர் கிணற்றிலும், காட்டிலும் இருந்தது. தோல்வி வெற்றி என என் தேடலுக்கு ஏதுவும் இல்லை. ஒவ்வொரு தேடலின்போதும் ஒரு அடி முன் சென்றாலே போதும்.

என் நண்பர்களின் சந்தோசமும் என்னுடைய சந்தொசத்திலிருந்து வித்தியாசப்படவில்லை. எங்களைவிட பணத்தளவில் உயர்ந்தவர்களுடன் (போம்மை வாங்கி விளையாடுபவர்கள் அல்லது  வீட்டுக்குள்ளேயே விளையாடுபவர்கள் அல்லது பெற்றோர்கள் சொல்லித்தர விளையாடுபவர்கள்) அதிகம் சேர்ந்ததில்லை. வீட்டிலேயே விளையாடுவதை கேவலமாக கருதியதால் அவர்களிடமிருந்து தள்ளியே இருந்தோம்.


என்னுடைய இளமையின் ஏழ்மையை (பணத்தால்) என்னுடைய கிராமம் இனிமையாய் மாற்றித்தந்து. இளமை, ஏழ்மை, கிராமம் - இந்த மூன்றும் சேர்ந்த சிறுவயது அனுபவத்தை வேறெந்த combination-உம் இந்த அளவிற்கு சந்தோசத்தை (எனக்கு) தந்திருக்காது என நினைக்கிறேன்.

குறைவான ஆபத்து, அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பெற்றோர்கள், இருப்பதை ஏற்று இல்லாததை அறிந்துக்கொள்ளாமல் / மறந்து வாழும் மனப்பான்மை,  முதலீடு இல்லாத பல சந்தோசங்கள், ஒத்த மனப்பான்மை உள்ள நண்பர்கள், சந்தோசத்தை மட்டுமே தேடி அலையும் குழந்தை பருவம், முக்கியமாக தன்னுடைய சந்தோசத்தை தான் மட்டும் முடிவுசெய்யும் குழந்தை பருவம்.  என என் சிறுவயது சந்தோசத்திற்கு காரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

பள்ளி பருவமும் வெளி உலகத்தை அதிகம் எனக்கு காட்டவில்லை. சந்தோசமும் துக்கமும் சரியான கலவையில் என்னை சுற்றி சுழன்றுக்கொண்டிருந்தது.

கல்லுரி சென்றவுடன் என்னுடைய பார்வை விரிவடைந்தது. பல புதிய சந்தோசங்கள் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன . எனக்கு ஒருவருட செலவுக்கென்று கிடைத்த பணம் இருமுறை சந்தோசமாக ஊரை சுற்றினாலே  தீர்ந்துவிடும்.

செலவில்லாத சந்தோசங்களை தேட ஆரம்பித்தேன். பல இருந்தன. சந்தோசத்தின் அளவு பணத்தால் அளக்கப்பட்டதால், அதையும் மீறி வெகு சில மட்டுமே நண்பர்களால் அங்கீகரிக்கப்பட்டன. அங்கீகரிக்கப்படாத சந்தோசங்களை என்னக்குள்ளாகவே கொண்டாடிக்கொண்டேன்.

ஒரு சிலர் மட்டும் என்னைப்போல் ஏழ்மையானவர்கள். பலர் பணம் படைத்தவர்கள். அதில் பலர் குணம் படைத்தவரும் கூட. பல நேரம் அவர்கள் அழைத்தும், செலவுகூட அவர்களே செய்யக்கூடியவர்களாக இருந்தும், சில காரணங்களை சொல்லி ஒதுங்கி இருந்தேன். என்னுடைய பங்களிப்பு (பணத்தளவில்) இல்லாமல் என்னால் அவரகளுடன் சந்தோசத்தை அனுபவிக்க முடியாது என்பதால். பெரும்பாலும் என்னை சோம்பேறியாக்கிக்கொண்டேன். இருந்தும் சில நண்பர்களுக்கு என் மேல் உரிமை இருந்தது, அவர்களுடன் போவதை நான் தவிர்ப்பதில்லை.

படிப்பு முடிந்தது. கடமை வந்தது. சந்தோசங்களை தள்ளிப்போட்டுவிட்டு வேலை தேட ஆரம்பித்தேன். சில காலங்களுக்கு பிறகு, சந்தோசத்தை தள்ளிபோடுவதர்க்கும் வேலை கிடைப்பதற்கும் என்ன சம்பந்தம் என தோன்றியது. எப்படி இருந்தாலும், பணம் இல்லாமல் பெரிதாக எந்த சந்தோசத்தையும் நான் பெறமுடியாது. ஆனால் என் மனத்தின் இருக்கத்தை குறைத்துக்கொள்ளலாம் என தோன்றியது. தனிமையும் கனவுகளும் சந்தோசமாக மாறிக்கொண்டிருந்தன.

எனக்கு நெருக்கமானவர்கள் ஒரு சிலரே, வேலை இல்லாமல் எப்படி கவலை இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறான் என கேவலமாக பேச ஆரம்பித்தனர். கவலைப்படுவது தீர்வாகாது என அவர்களுக்கு விளக்கும் நிலைமையில் நான் அப்போது இல்லை. அதற்காக என்னை மாற்றிக்கொள்ளவும் விரும்பவில்லை. வேலை தேடலில் விரக்தி அடைந்தாலும், எனக்கான வேலையை என் வழியில் தேடிக்கொண்டிருந்தேன்.

ஒருபுறம், பணம்கொண்டு வாங்கும் சந்தோசத்தின் மேல் வெறுப்பானது. மனம் அதற்க்கான காரணங்களை சொல்லிக்கொண்டிருந்தது. வியாபாரிகளிடம் சந்தோசம் மாட்டிக்கொண்டிருப்பதாக தோன்றியது. நான் எது செய்தால் எனக்கு சந்தோசமாக இருக்கும் என்பதை  அவர்கள் யார் சொல்வது? அடுத்தவர் என் சந்தோசத்தை அங்கீகரித்தால்தான்  சந்தோசமா? என கேள்விகள் கேட்டது.

வேலை கிடைத்தது. என் தகுதிக்கு குறைவான வேலை/சம்பளம் என்பதை எனக்கு மேல் வேலைசெய்பவர்களை பார்த்து தெரிந்துக்கொண்டேன். வேலைகிடைத்த சந்தோசம் குறைய ஆரம்பித்தது. என்னுடைய பொறாமை ஏமாற்றம் போல் தோற்றமளித்தது. போராட்டங்களுக்கு பிறகு அடுத்த வேலை. அங்கும் அதே நிலை. எங்குபோனாலும் அதே பிரச்சனை என்றால் என்னுள்தான் பிரச்சனை என்பதை உணர்ந்தேன். ஏதோ ஒருவகையில் அவர்கள் என்னைவிட உயர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. முடிந்த அளவுக்கு என்னை சரிசெய்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

இதநிடையே சந்தோசத்தை அவர்களுக்கு காமிப்போம் என்ற நம்பிக்கையில் எங்களுடைய பெற்றோர்கள் எங்கள் பின்னால். அவர்களுக்கு பின்னலும் இதைப்போல் ஒரு சந்தோஷ கதை. அமைதியான கிராம சுழலில் இருக்கும் அவர்களுக்கு பரபரப்பான எந்திர உலகத்தை காண விரும்பும் அவர்களது மனது. அமைதியான சுழலை தேடும் எங்களுடைய மனது. அவரவர் வயதிற்கேற்ற எதிர்பார்ப்பு அவரவர்களிடம். எதிர்மாறான சந்தோசங்கள்.  பெற்றோர்களை விட்டுவிட்டு சந்தோசப்பட விரும்பாத மனம். இருவரும் சந்தொசப்படாமல் இருப்பதற்கு, சிலநாள் அவர்களுக்காக செலவழித்தால் இருவரும் சந்தோசமாக இருக்கலாம் என முடிவுக்குவந்துள்ளேன்.
சரியோ தவறோ, என் வாழ்வில் நான் அறிந்த சந்தொசத்திர்க்கான வரையறை:
  1.  பணம்  கொண்டு பெறுவது மட்டும் சந்தோசம் அல்ல. சந்தோசம் பணத்தால் அளக்கப்படுவதும் அல்ல. மனம் சென்று அடையும் அனைத்துமே சந்தோசம்தான்.
  2.    உன்னுடைய சந்தோசத்தை அடுத்தவர் அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால் ஒருவர் சந்தோசம் அடுத்தவருக்கும் போருந்தகூடியது அல்ல.
  3. சந்தோசத்திற்கு பின்னால் இருக்கும் உழைப்பு/கஷ்டம்/துக்கம் தான் சந்தோசத்தின் அளவை நிர்ணயிக்கும்.
  4. சந்தோசம் வெற்றியில் மட்டும் இருக்ககூடியது அல்ல. நம் திறமையின் உச்சத்தை தொடுவதில்தான் இருக்க வேண்டும்.