ஹைதராபாத்திலிருந்து சென்னை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டு சென்னை வந்தேன். பல யோசனைகளுக்கு பிறகு, நண்பர்
பிரேம் அண்ணன் வீட்டுக்கு அருகிலேயே வீடு பார்ப்பது என முடிவெடுத்து
மடிப்பாக்கத்தில் வீடு தேடினேன். பிரேமுடன் பார்த்த வீடுகள், என்
எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் இல்லாமல், அவருடைய வீடு திரும்பும் முன், அவருடைய
நண்பர் தயாளன் அண்ணனை பார்பதற்காக அவருடைய வீட்டுக்கு சென்றோம். பல
வளைவு பாதைகளை கடந்து, ஒரு மேடு பள்ளம் நிறைந்த வழியையும் கடந்து அவரது வீடு இருந்தது. இந்த பக்கம் மட்டும் வீடு பார்க்கக்கூடாது என மனதுக்குள்
நினைத்துக்கொண்டேன்.
பல நாள்
தேடலுக்கு பிறகு, தயாளன் வீட்டின் முதல் மாடி காலியாகப்போகிறது என்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு தரமாட்டார்கள் என்றும், ப்ரேமுடைய நண்பர் என்பதால்
எனக்கு மட்டும் தருவதாக சொன்னார்கள். அட்வான்ஸ் & ரென்ட் எல்லாம், இதற்க்கு முன்
இருந்தவர்கள் கொடுத்ததுதான். நானும் வேறு வழி இல்லாததால் அந்த
வீட்டுக்கு வாடகைக்கு சென்றேன்.
வீடு தனியாக
எடுப்பது எனக்கு புதிது. திருமணம் ஆகாதவனுக்கு தேவையான அத்தியாவசிய
பொருட்கள் மட்டும் என்னிடம் இருந்தது. தயாளனின் அம்மா, பால் காச்சலயாப்பனு
கேட்க்க, அதெல்லாம் பழக்கம் இல்லை என பதிலளித்தேன். என்னப்பா நீ எனக்கூறி,
ஒரு சிறு சாமி புகைப்படமும், பால் காச்ச தேவையான பாத்திரங்களும் எடுத்து
வந்து கொடுத்து, பால் காச்சிவிட்டு, எனக்காக கடவுளிடம் வேண்டிவிட்டு சென்றார்கள்.
ஒரு பெரிய
வரவேற்ப்பு அறை, இரண்டு படுக்கை அறை, ஒரு சமையல் அறை, ஒரு படுக்கை
அறையுடன் சேர்ந்த குளியலறை, மற்றொரு குளியல் அறை வரவேற்ப்பரையின்
ஓரத்தில், ஒரு பால்கனி (பால்கனியில் உட்க்கார்ந்து நான் பார்பதற்கு ஒன்றும் இல்லை).
நல்ல வசதியான வீடு, கிரானைட் கல்லால் ஆன தரை. அப்போதுதான் அந்த
வீட்டையே பார்க்கிறேன். என் வீட்டிலிருந்து யாராவது வந்தால் தங்குவதற்கு
வசதியாக, நான் தனியாக வீடு எடுத்திருந்தேன்.
ஒரு அறையை
பார்த்து அதில் என் போருட்க்களை வைத்துக்கொண்டு அங்கேயே என் படுக்கையையும்
போட்டுக்கொண்டேன். முதல் நாள் இரவு. என் தனிமையைப்போக்கும் லேப்டாபை எடுத்தேன்.
புதிதாக வந்த வீடு என்பதால், என் கவனம் லேப்டாபை நோக்கியும் போகவில்லை, தூக்கமும்
வரவில்லை. பல சிந்தனைகளுடன் லேப்டாப்பில் ஏதோ தட்டிக்கொண்டு இருந்தேன்.
அமைதியான
அந்த இரவில், நோயாளியின் முனகல் கேட்டது. முனகல் சத்தம்
பயப்படும்படியாக கொஞ்சம் சத்தமாக இருந்ததால் உள்ளுக்குள் ஒரு பயம்.
எங்கிருந்து வந்திருக்கும் என யோசனை. திரும்ப திரும்ப சில நிமிடத்திற்கு.
நான் இருக்கும் அறைக்கு கீழ் இருக்கும் அறையிலிருந்துதான் வந்தது என யூகிக்க
முடிந்தது. தயாளனின் மனைவி, அம்மா, இரண்டு குழந்தைகள் - இவர்களை
மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அவருடைய அப்பாவாகத்தான்
இருக்கவேண்டும் என யூகிக்கமுடிந்தது.
அவர்களுடைய
வரவேற்ப்பறையில் இருந்து பார்த்தால் ஓரளவிற்கு அந்த அறை தெரியும். ஆனால்
எப்போதும் ஏறக்குறைய கதவு மூடியே இருக்கும். அவரை பார்க்க வேண்டும் என
என்னுவேன். அனால் கட்டில் மட்டும்தான் லேசாக தெரியும். அவர்களும் உடல்நிலை
சரியில்லாதவர் என்பதால் எனக்கு அறிமுகப்படுத்தவும் இல்லை.
அவர்களிடம்,
அவரை பற்றி கேட்டால் தப்பாக நேனைத்துக்கொல்வார்களோ என நினைத்தேன். சத்தம்
கேட்க்காமல் இருக்க, ரேடியோ கேட்க்க ஆரம்பித்தேன். சில நாட்க்களுக்கு பிறகு பிரேமிடம்
தயாளனின் அப்பாவைப்பற்றி கேட்டேன். அவர் சில வருசங்களாக கை கால்
வராமல் படுக்கையிலயே இருப்பதாகவும், எவ்வளவு வைத்தியம் செய்தும்
சரியாகவில்லை எனவும் சொன்னார். என்னுடைய அப்பா நோயாளியை பார்ப்பதை எப்போதுமே
தவிர்த்துவிடுவார். அவர் கண்டிப்பாக இங்கே இருக்கமாட்டார் என தோன்றியது.
இரவில் என்னுடைய ரூமுக்கு நடந்து வருவது மிகவும் கடினமாக இருக்கும். மழைக்காலங்களில் - வழி நெடுக்க தண்ணீர், தவளையின் சத்தம், ஒரு சில இடங்களில் வெளிச்சம். எல்லாம் சேர்ந்து ஒருவித பயத்தை ஏற்படுத்தும். மற்ற நாட்களில் – வழி நெடுக்க இருக்கும் நாய்கள் பயமுறுத்தும். எந்த நாயும் கொளைக்கவில்லை என்றால் நிம்மதியாக வீட்டை போய் சேரலாம். இல்லையேல், உள்ளுக்குள் பயத்துடன், வெளியில் தைரியத்துடன் நாயை விரட்டிக்கொண்டே போக வேண்டும். பிரேமுடன் அலுவலகத்தில் இருந்து வந்தால் என்னை அவரே வீட்டீல் விட்டுவிட்டு செல்வார். காலையிலும் அவரே அழைத்துக்கொண்டு செல்வார்.
இரவில் என்னுடைய ரூமுக்கு நடந்து வருவது மிகவும் கடினமாக இருக்கும். மழைக்காலங்களில் - வழி நெடுக்க தண்ணீர், தவளையின் சத்தம், ஒரு சில இடங்களில் வெளிச்சம். எல்லாம் சேர்ந்து ஒருவித பயத்தை ஏற்படுத்தும். மற்ற நாட்களில் – வழி நெடுக்க இருக்கும் நாய்கள் பயமுறுத்தும். எந்த நாயும் கொளைக்கவில்லை என்றால் நிம்மதியாக வீட்டை போய் சேரலாம். இல்லையேல், உள்ளுக்குள் பயத்துடன், வெளியில் தைரியத்துடன் நாயை விரட்டிக்கொண்டே போக வேண்டும். பிரேமுடன் அலுவலகத்தில் இருந்து வந்தால் என்னை அவரே வீட்டீல் விட்டுவிட்டு செல்வார். காலையிலும் அவரே அழைத்துக்கொண்டு செல்வார்.
ஊரிலிருந்தோ,
அலுவலகத்திலிருந்தோ தனியாக வரும்போது (பொதுவாக நள்ளிரவில்தான்
வருவேன்), பிரேமை நள்ளிரவில் தொந்தரவு
செய்யக்கூடாது என, என்னுடைய தைரியத்தை பரிசொதித்துக்கொல்வேன்.
மேலும் இது
போல சில காரணங்கள், தண்ணீர் பிரச்சனை என அந்த வீட்டை காலி செய்வது
என முடிவெடுத்து, அவர்களிடம் முன்னதாக சொல்லிவிட்டு கிளம்பினேன். திருமணம்
ஆகப்போகும் நண்பன் ஸ்டாலின் வீட்டில் சில மாதம் தங்கி வீடு தேடிக்கொடிருந்தேன்.
என்னுடைய சோம்பேறித்தனத்தால் வீடு கிடைக்கும் முன்னதாகவே அவனுடைய
திருமணம் வந்துவிட்டது.
வேறு
வழியில்லாமல் மடிப்பாக்கத்தில் உள்ள பழைய வீட்டுக்கே வந்தேன். என்னுடைய
பழைய வீட்டில் பிரேமின் சொந்தக்காரர் வாடகைக்கு குடுமபத்துடன்
தங்கி இருந்தார்கள். அதற்க்கு மேலே மொட்டைமாடியில் பாதி இடத்தில், ஒரு
அறை, படுக்கை அறை, ஒரு சமையல் அறை என ஒருவருக்கு ஏற்றார் போல் அழகான
வீடு கட்டிமுடிக்கப்பட்டிருந்தது. நான் இருக்கும்போதே தயாளன், அவருக்காக
அதை கட்டிக்கொண்டிருந்தார். ஏதோ காரணத்தால், எனக்கு அந்த வீட்டை வாடாகைக்கு கொடுத்தனர்.
தயாளன்
அப்பாவின் அறைக்கு மேலே இரண்டாவது அறையில் தான் இப்போதும் படுக்கை அறை இருந்தது. முதல் நாள் இரவு, அவரின் சத்தம் கேட்குமா
என எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். கேட்கவில்லை. ஒரு வேலை இரண்டாவது மாடி
என்பதால் சரியாககேட்க்கவில்லையா என காதை கூர்மையாக்கி கேட்டேன். சத்தம்
ஏதும் இல்லை. என்னவாகயிருக்கும் என பதைபதைத்தது. வழக்கம் போல் அவர்களிடம் கேட்கவில்லை.
இப்போதெல்லாம் எனது தைரியத்தை சோதிப்பதில்லை. பிரேமின் பொறுமையை
சோதித்துக்கொண்டிருக்கிறேன். எந்த நேரமானாலும் பிரேமின் வீட்டுக்கு சென்று வண்டி
வாங்கிக்கொண்டு செல்கிறேன். நானும் அதனால் நன்றாக பைக் ஓட்டவும்
பழகிக்கொண்டேன். அப்படியே பிரேமின் வீட்டில் காலையும் இரவும்
சாப்பாடு, தேவையான போதெல்லாம் அவருடைய வண்டி என உரிமை எடுத்துக்கொண்டேன்.
அவருடைய வீட்டிலும் என்னை வேறு ஆளாக பார்ப்பதில்லை என நம்புகிறேன். என்னை
(யும்) நம்பும் இன்னொரு நல்ல குடும்பம்.
ஒரு முறை தயாளன்
அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, தயாளனின் அப்பாவின் உடல்நிலை பற்றி கூறினார். அப்போது தயாளனும் பிரேமும்
மைசூர் சென்றிருந்தார்கள். இவன் ஊருக்கு போனால் அவருக்கு உடல் சரி இல்லாமல் போய்விடுகிறது
என போலம்பினார். தயாளன் அண்ணன் மேல் சிறிது கோபம், உடம்பு முடியாத
பெரியவர்களை விட்டு விட்டு எப்படி போக தோனுகிறது என்று. இருந்தும், வேலை,
முடியாத அப்பா, அம்மா என தன்னை பல வருடமாக இருக்கிகொள்ள முடியாது.
இந்த இயந்திர உலகத்தில் கொஞ்சமாவது ரிலாக்ஸ் செய்யாமல் இருக்க முடியாது
என தோன்றியது. தயாளன் அம்மாவிடம் பேசுகையில் அவருடைய உடல்நிலை இன்னும் மோசமாகி உள்ளது
என தெரிந்தது. அவரிடம் இருந்து வந்த முனகலும் முற்றிலுமாக குறைந்திருந்ததாக
சொன்னார். தயாளன் சித்தப்பா இவர்களுக்கு உதவுவதற்கு வந்திருந்தார்.
தயாளன்
சித்தப்பாவின் வரவு அதிகரித்தது. அவர் வந்தால் தயாளன் அப்பாவிற்கு உடல்நிலை
மோசமாக இருக்கிறது என தெரிந்துக்கொள்வேன்.
மொட்டை மாடியில் தனியாக படுத்துக்கொள்வார். என்னுடைய அறையில்
படுத்துக்கொள்ளுங்கள் என்றாலும், இல்லப்பா,
இங்க தான் நல்லா (நல்ல) காத்து வரும் என்பார். கொஞ்சம் வசதி குறைவானவர்
என நினைக்கிறேன். அதனால்தான் இயற்கையோடு ஓரளவிற்கு ஒன்றி இருக்கிறார்.
தயாளன் மனைவி – ஆர்த்தி, தயாளன் அப்பாவை இன்னொரு குழந்தையாக பார்த்துக்கொள்வார். நான் வியந்த ஒரு மருமகள்.
எங்க மாமனார் 5 மணிக்கெல்லாம் எழுந்து குளிச்சுட்டு வாக்கிங்
போயிட்டு, பால் வாங்கிட்டு
வந்துடுவார். எப்பவும், சுறு சுறுப்பாதான் இருப்பார். கல்யாண ஆன புதுசுலிருந்து அத்தை தான் எதாச்சு என்னை திட்டுவாங்க. மாமா தான் எப்படியெல்லாம்
நடந்துக்கணும்னு பொறுமையா எடுத்து சொல்லுவார். அப்பா போல
பார்த்துக்கொள்வார். இப்பதான் இப்படி ஆயிடுச்சி. என பிளாஷ் பாக்குடன்
புலம்புவார். அடிக்கடி, மாமா இன்னக்கி ரெண்டு பிஸ்கட் சாப்பிட்டார், ரெண்டு
இட்லி full-அ சாப்பிட்டார், ஒரு தோசை சாப்பிட்டார், என சந்தோசமாக
சொல்லுவார்.
தயாளன்
அம்மா,
எல்லாம் விதி இவர இப்படி பார்க்கனும்னு இருக்கு. அந்த
மருவத்தூர் அம்மா கொஞ்சம் கண்ண தெறந்து பார்க்ககூடாதா? போகாத டாக்டர்
இல்ல? அம்மாவையும் வேண்டிக்கொண்டுதான் இருக்கிறேன். என்ன பண்றது. நல்லா செலவு
பண்ணுவார், எல்லாரையும் நம்புவர், எல்லாருக்கும் நல்லதுதான்பன்னார். ஏன்
அம்மா
இப்படி சொதிக்குதுனு தெரியல? என கடவுளுடன் கலந்து சோகத்தை சொல்வார்.
எப்போதாவது அவரை வெளியே மருத்தவமனை அல்லது கோயிலுக்கு அழைத்து
செல்வார்கள். அவரு, புது வேட்டி, சட்டை போட்டுட்டு வெளிய போயிட்டு வந்தார்
தெரியுமா, என பெருமையாக அனைவரிடமும் சொல்லி சந்தோசப்படுவார்.
தயாளன்,
அதிகமாக அனைவரிடமும் புலம்பாத ஆணின் குணம். குடும்ப தலைவர் பொறுப்புடன், தந்தையின் வெளியுலக உதவி அனைத்தும் பார்த்துக்கொள்வார்.
ஒரு நாள்
அவசரமாக அலுவலகத்துக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன். தயாளன் அப்பா அறையில்
கூட்டமாக இருந்தது. உள்ளே சென்றேன். அப்பா, மாமா, தயாளன் அப்பா
(தயாளன் அம்மாவின் குரல்), அண்ணா என கத்தி
கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அவரை நேராக பார்த்தேன். பல
வருடம் உடல்நிலை சரியில்லாதவர் என்பதால், உடல் இளைப்பின் எல்லையை தொட்டு
இருந்தார். குளிப்பாட்டிட்டு சாப்பாடு குடுக்கலாம்னு லேட் ஆகிடுச்சு அதான், என
சொல்லிவிட்டு அசைவின்றி இருக்கும் அவரை திரும்ப கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
தயாளனுக்கு
அடுத்தவர்கள்
பார்த்து பரிதாபப்படுவது பிடிக்காது என நினைக்கிறேன். என்
பார்வையிலிருந்து அவருடைய அப்பாவை மறைத்துக்கொண்டார். சிறிது நேரத்தில்
அறையை விட்டு அவர் வெளியே வந்ததால் நானும் அவரோடு வெளியே
வரவேண்டியதாகிவிட்டது. ஒண்ணும் இல்ல சரியாகிடும் என அதே காரணத்தை
சொன்னார். தோசை, பாலுக்கு பதிலா, கொஞ்சம் ஜூஸ் போல நீராகரமா கொடுங்கணா என
சொல்லிவிட்டு அவரை சங்கடப்படுத்தாமல் அலுவலகம் கிளம்பினேன்.
தயாளன்
வெளிநாடு சென்றிருந்த நேரம், திரும்பவும் உடல்நிலை சரியில்லை என பிரேமுக்கு
தகவல் வர. அவரும் மருத்துவரை வீட்டுக்கு அழைத்துவந்து பார்த்துவிட்டு
சென்றார். அடுத்த தகவல் தயாளன் அண்ணனிடம் இருந்து அவருடைய இறப்பு
செய்திதான் வந்தது. அலுவலகத்திலிருந்து, பிரேமுடன்
வீட்டுக்கு நேராக வந்தோம்.
வீட்டுக்கு
முன்னால் பந்தல், லைட், சேர் எல்லாம் போடப்பட்டிருந்தது. அமைதியான
முகத்துடன் தயாளனுடன், சில ஆண்கள் வெளியில் நின்றுக்கொண்டிருந்தனர்.
தயாளன், உள்ளே சென்றுபாருங்க என சொன்னார். உள்ளே தயாளன் அப்பாவின் உடலுக்கு
அருகில் அமர்ந்து இருந்த தயாளன் அம்மா, பிரேமின் கையை பிடித்து அழ
ஆரம்பித்தார். பிறகு என் கையையும் பிடித்தும் சில நொடிகள் அழுதார். ஆறுதல் கூற
முடியாத ஒரு விஷயம் இறப்பு என்பதால், பேசாமல் சிறிது நேரம் அங்கு அமர்ந்துவிட்டு
வெளியில் வந்தோம்.
வீட்டுக்கு
வெளியில் அந்த அளவிற்கு சோகம் இல்லை. யார் யாருக்கு சொல்லி அனுப்புவது? எப்போது
எடுப்பது? எரிப்பதற்கான ஆயுத்தம் அனைத்தும் கலந்தோலோசித்து அதற்க்கான வேலைகளில்
ஈடுபட ஆரம்பித்தனர்.
சாவுக்கு
மாமாவ கூப்பிடு, அம்மாவோட சமாதானப்படுத்திடலாம். சாவுன்னு தெரிஞ்சா அவரா
வரக்கூடாதா? .... உள்ளூர் சங்குகாரற கூப்புடுங்க, அப்பத்தான் பிரச்சன பண்ணமாட்டாங்க....
என சில பிரச்சனைகளும் அங்காங்கே கேட்டது. ஐஸ் போட்டியில் உடலை
வைத்துவிட்டு இரவு ரெண்டு மணிப்போல் பிரேம் வீட்டுக்கு தூங்க கிளம்பினோம்.
என்னுடைய ரூமில் தயாளனின் சொந்தக்காரர்கள் ஆக்கரமித்துக்கொண்டார்கள்.
காலையில்
திரும்ப வரும்போது கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. எதிர்ப்பார்த்த
சோகம் ஒருவர் முகத்திலும் தெரியவில்லை. பலகாலம் கழித்து சந்தித்தவர்கள்
பலர் தொழிலைப்பற்றி பரிமாறிக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் ரியல் எஸ்டேட்
பற்றியே இருந்தது. நான்கு வருடம் என்பதால் அவருடைய
இறப்பை ஏற்றுக்கொள்ள அனைவரும் தயாராகவே இருந்தார்கள். ஒரு பாட்டி மட்டும்
வீட்டை நெருங்க நெருங்க நடக்கும் வேகத்தையும் அதிகரித்துக்கொண்டே
போனார்கள்.
ஒருவர், போறதப்பாத்தா சத்தமா அழவும் போல இருக்கு என்றார். நகரத்தில்
சத்தமாகக்கூட அழக்கூடாது போல.
சவ
ஊர்வலத்திற்கு தயார் செய்யும் வேலைக்காரர்கள் வாங்கிய முன் பணத்தில் சரக்கு
போட்டுக்கொண்டு வந்து சேர்ந்தனர். அவரவர் வேலையை செய்யும்போது தன்னுடைய
வேலையின் நேர்த்தியை அப்பப்போது சொல்லிக்காட்டிகொண்டார்கள். எல்லாம் பணம்
கேட்கத்தான் என அறிந்தவர் சிலர் முணுமுணுத்தனர். ஒருவர் வேலைக்காரர் தன்
வேலையை பற்றி சொல்லி, கொஞ்சம் போட்டு குடுப்பா என சில நிமிடத்திலேயே அதை உறுதிப்படுத்தினார்.
நகரம்
என்பதால் அக்கம்பக்கத்து வீட்டார்களின் தலைக்கு மட்டும் எட்டிப்பார்க்க
அனுமதி
கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். சில தலைகள் அப்பப்போ வெளியில்
எட்டிப்பார்த்தது. அதில் ஒரு தலை, எங்க வாசல் முன்னாடி இதெல்லாம் வச்சி
வேலை செய்யாதிங்கனு நகரத்தின் நாகரித்தோடு சொன்னது. சில இளம் ஆண்கள்
மட்டும் ஆட்சேபனை இன்றி சிறு உதவிகள் செய்தார்கள்.
கேட்டப்பணத்திற்கு
மேல் கேட்க்கும் வேலைக்காரர்களுடன் பேரத்துடன் சவ ஊர்வலமும் சிதை எரிப்பும்
முடிந்தது. கடைசிவரை தயாளனின் கண்ணில் கண்ணீரை நான்
பார்க்கமுடியவில்லை. அவர் தந்தையின் இத்தனை வருட கஷ்டத்திர்க்கான
விடுதலை என்பதால் இருக்கலாம். வீடு வந்தவுடன், தயாளன், இதோட முடிக்கமாட்டாங்க.
டெய்லி 15 நாளைக்கு பெண்கள் அழனும்.
முஸ்லிம், கிறிஸ்டியன் தான் இதுல பெஸ்ட். தன் அம்மாவின் உடல்நிலையையும், நகர வாழ்க்கைக்கு ஒத்து வராது என்பதையும் மனதில்
வைத்து சொல்லிருப்பார் என நினைக்கிறேன். இறந்தவரின் பெருமைகளை
நினைவுகூறும்வகையில் அவருடைய சில நிகழ்வுகளை பாட்டாக பாடி அந்த 15 நாட்கள் அழும்
பெண்களை எங்கள் கிராமத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கு விளக்கம்
சொல்லும்
நேரம் அது அல்ல என்பதால் அமைதியாக ஆமோதித்தேன்.
ஆர்த்தி, இவர் தான் மேலே இருக்கும் அறையில்
வசிப்பவர். பிரேமின் நண்பர் என என்னுடைய அறையை உபயோகித்தவர்களிடம் அறிமுகப்படுத்தினார். ரொம்ப நன்றி தம்பி என்பதையெல்லாம் கேட்க்காமல்,
அறிமுகத்திர்க்கோ பெருமைப்படவோ இது நேரம் அல்ல என, பரவாயில்லைங்க என விரைவில் அந்த
இடத்தை கடந்தேன். அந்த நாளும் பிரேமின் வீட்டில்தான் உறக்கம்.
அடுத்த
நாள் அஸ்தியை கடலில் கரைத்துவிட்டு வீடு வந்ததும், எங்களுக்கான உணவு
தயாராக இருந்தது. உணவருந்த அமர்ந்தோம். இதற்க்கு முன் ஒரு சிலமுறை
அவர்களுடைய வீட்டில் உணவருந்தியிருக்கிறேன்.
வழக்கம்போல் என் கண்கள் என்னை அறியாமல் தயாளன் அப்பாவின் அறை பக்கம்
திரும்பியது. இழப்பை உண்மையில் அப்போதுதான் உணர்ந்தேன். கண்ணீரை வெளியேற்றாமல் சோகத்தை மறைத்து சாப்பிட்டுவிட்டு வெளிவந்தேன்.