ஞாயிறு, 15 ஜூலை, 2012

பெண் தேடல் - III

என் பெற்றோர்களின் பிடிவாதம் மாறுவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.  அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற எப்போதும் தயாராக இருப்பேன். அது என்னை மாற்றாமல் இருக்கும் வரை. ஒரு விசயத்திற்காக, இந்த அளவிற்கு மோதிப்பார்ப்பது இதுதான் முதல்முறை. இது அந்த பெண்ணிற்கான சண்டை மட்டும் அல்ல. பொதுவாகவே, என் பெற்றோர்கள் என்னை முட்டாளாக நினைக்கும் அளவிற்கு யாரும் என்னை நினைத்ததில்லை. அவர்கள் என்னை நம்பாத அளவிற்கு யாரும் என்னை நம்பாமல் இருந்ததில்லை. என் முடிவு சரியானதுதான் என்பதற்காகவும், சில விஷயங்களில் அவர்கள் மாறவேண்டும் என்பதற்காகவும் இந்த incident மூலமாக வெளிப்பட்டது.

பிடித்த பெண், பிடித்த வேலை (different topic) இதையெல்லாம் என் குடும்பத்தின் விருப்பதிற்காக மாற்றிக்கொள்ளவேண்டும் என்றால் அவர்கள் கொடுத்த வாழ்க்கையே வேண்டாம் எனத்தோன்றியது. தூக்கத்தையும் சேர்த்து வாழ்நாளில் 90% இவ்விரண்டோடுதான் கழிக்கவேண்டியிருக்கிறது. ஆறறிவு உள்ள ஒரு செல்ல நாயாக இருக்க என்னால் முடியவில்லை. ஐந்தரிவு மட்டும் இருந்திருந்தால்கூட அவர்கள் நினைக்கும்படி இருந்திருப்பேன்.

பலரிடம் என் அப்பாவின் பெருமையை வாய் கிழிய பேசி இருக்கிறேன். இப்போதுதான் அவர் தூரத்திலிருந்து மட்டும் உதவுபவர் என தெரிந்தது. அவர் அதே பெருமை என்ற மாயைக்குள் மாட்டிக்கொண்டிருக்கிரார் என தெரிந்தது. என்னை மாற்ற எவ்வளவு பொய், unfair game என்னிடமே. எதற்கு? எவ்வளவு? என கேட்க்காத என்  குடும்பத்தில், வழக்கத்திற்கு மாறாக, அம்மா என்னிடம், வரவு, செலவு கணக்கு கேட்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்தவர்களிடம் பெருமையாக சொல்ல / அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற போலித்தனமான வாழ்க்கைக்கு வழியை காட்டும் என் பெற்றோர்கள். இந்த பெருமைக்காக வாழும் வாழ்க்கை வெறுப்பானது. என் வாழ்க்கை என் விருப்பபடி வாழமுடியாமலே போய்விடும் என தோன்றியது. எனக்கு இந்த gold plated வாழ்க்கை தேவையில்லை என தோன்றியது.

ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெறமுடியும் என்ற நிலைக்கு வந்ததை உணர்ந்தேன். 'sentimental lock' போன்ற ஒரு பெரிய எதிரி/துரோகி இருக்க முடியாது என தோன்றியது. அவர்கள் கொடுத்த படிப்பு, அதனால் வந்த வேலை, பணம் அனைத்தையும் கொடுத்துவிட்டு போய்விடலாம் என முடிவுசெய்து (அவர்கள் invest செய்ததற்கு, நல்ல returns கொடுத்திருப்பேன் என நம்புகிறேன்), அண்ணனுக்கு மெயில்-ம், வீட்டுக்கு call  செய்தும் மேலுள்ளவைகளை சொன்னேன். (நான் அதிகம் பேசமாட்டேன் என்பதால் அவர்களுக்கு என்னுடைய seriousness தெரியாமலே இருந்திருக்கும் என்பதால் சொல்லாமல் செல்ல விருப்பமில்லை.) நான் அழுதுக்கொண்டே பெற்றோர்களிடம் பேசியது அப்போதுதான் முதல்முறை. அவர்கள் அதைவிட நானே முக்கியம் என உன் விருப்பபடியே செய் என இறங்கிவந்தனர். எதிர்பார்த்ததுதான் என்றாலும், நான் அதை எதிர்ப்பார்த்து சொல்லவில்லை. எப்போதும் mailக்கு பதில் அனுப்பாத அண்ணனிடமிருந்து உடனே call  வந்தது. நேரில் பார்த்து பேசலாம் என்று. அண்ணனின் இருப்பிடத்திற்கு (பெங்களூர்) செல்லும்முன் பெற்றோர்களையும் வரச்சொன்னேன், முடிவை ஒருமனதாக எடுத்துக்கொள்ளலாம் என.  

பெற்றோர்கள் வரும் முன்னரே பேச ஆரம்பித்தோம். பெண், வேலை இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான் என்பதால் பெண்ணின் விஷயத்திலிருந்து ஆரம்பமானது. இந்த வயதில் எனக்கான பெண்ணை என்னால் அடையாளம்காண முடியவில்லை என்றால், நான் திருமணம் செய்துக்கொள்வதே அர்த்தமற்றது என ஆரம்பித்தேன். அண்ணன் procedure -லாக ஆரம்பித்தான். நாம் பார்க்க ஆரம்பித்தது , 1. பெண் appearance, 2. Her character, 3. என் பெற்றோர்களின் விருப்பம், 4. family background - வசதி, 5. ஜாதகம். என வரிசைபடுத்தினான்.  கடைசி மூன்றும் ஒத்துவரவில்லை விட்டுவிடலாம் என்றான்.

கடைசி இரண்டும் என் எதிர்பார்ப்பு இல்லை. வீட்டில் இருப்பவர்களின் விருப்பம் அதில் இருப்பதால் மூன்றாவதும் எனக்கெதிராக இருந்தது. அதை முன்கூட்டியே விசாரிக்க சொல்லியிருந்தேன் (arranged marriage  என்பதால் தேவை இல்லாத conflict -ஐ தவிர்க்க). சரியாக செய்யாதது அவர்களுடைய தவறு. பெண்ணை மட்டுமே பார்க்கவேண்டும் என நினைப்பவன் நான். வசதி, சாதி, including  பெற்றோர்கள் -இவைகளுக்காக ஒரு பெண்ணை  நிராகரிக்கமுடியாது. இதையெல்லாம் பார்க்ககூடாது என பலரிடம் சொல்லியிருப்பேன். என் collage life ல், என் நண்பர்கள் இதைப்போல நினைத்திருந்தால் எந்தனை நல்ல நண்பர்களை இழந்திருப்பேன் தெரியுமா? அதையே நான் என் வாழ்க்கையில் follow செய்யவில்லை என்றால்? எனக்கு பிடித்திருக்கிறது. அவர்களிடமும் இரண்டாவதுமுறையாக பேசும் முன்பே வீட்டில் முடிவிலிருந்து திரும்ப வருவதில்லை என்பதை சொல்லிவிட்டேன். முதல் இரண்டில் ஏதாவது பிரச்சனை என்றால் சொல் என்றேன்.

தம்பி மிரட்டி பெற்றோர்களை சம்மதிக்கவைத்துவிட்டான் என்றான். பெண்ணைப்பற்றியும் அவளின் குடும்பம்பற்றியும் அந்த அளவிற்கு தெரியாது என்றான். அதற்குமேல் விசாரிக்கமுடியாது என்றேன். Risk  வேண்டாம் என்றான், மூன்றாவதாக ஒன்று போனாலும் அதே risk இருக்கிறது என்றேன்.

உனக்கு புரியவில்லை, அனைத்தும் meet  ஆகிறமாதிரி பெண் கிடைக்கும் ஏன் அவசரப்படுகிறாய்? 31 வயது பெரிய வயதல்ல, typical தமிழ் பையன் போலவே யோசிக்கிறாய் என்றான். என்னுடைய தேவை இவ்வளவுதான், அதற்குமேல் எனக்கு வேண்டாம். better -ஆன option என்றும் இருந்துக்கொண்டுதான் இருக்கும். தேடிக்கொண்டே போனால் என்றும் முடியாது. தமிழ் பெண்ணை மணக்கவேண்டும் என்றால் typical தமிழ் பையன் மாதிரிதான் யோசிக்கவேண்டும். உனக்காக கல்யாணம் செய்துக்கொள்ளாமல் காத்திருக்கலாம். இந்த காரணங்களுக்காக காத்திருக்க முடியாது.

ரெண்டு வருசமெல்லாம் பொண்ணு பார்த்துகிட்டிருக்காங்க தெரியுமா?அமாம், இப்பதான் reason தெரியுது. சில பேர் எதுக்கு ஓடிப்போராங்கணும் தெரியுது.

அன்றைக்கு அம்மா எவ்வளவு அழுதார்கள் தெரியுமா? என்றான். இது அழுகின்ற போட்டியல்ல. யாரு அதிகம் அழறாங்களோ அவுங்க சொல்றத கேட்கறதுக்கு என்றேன்.

நீ, அந்த வீட்டிற்க்குள் போகவே யோசிச்சேன் என்றதும் எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது தெரியுமா? என்றான். நம் சொந்தத்திலும் அதுபோல் வீடுகள் இன்றும் இருக்கின்றன. ஏன்? நாமும் இதற்குமுன் மழையில் ஒழுகும் வீட்டில்தான் இருந்தோம். திருமணத்திற்கு சென்று, தெருவில் தூங்கி இருக்கிறோம். பார்த்தவுடன் தோன்றியது, இருந்தாலும், நான் வீட்டோடு மாப்பிளையாக இருக்கபோவதில்லை.

சொந்தகாரர்களிடம் பேசாத நான் உனக்காக மாமா, பெரியப்பாவிடம் பேசினேன். அவர்களும் சரிவராது என சொல்லிவிட்டார்கள் என்றான். unopposed president family யில் பிறந்த, என் மாமாவின் அக்கா, தங்கைகள் பலர் வசதி இல்லாத குடும்பத்தில் நல்லவர்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக திருமணம் செய்துகொடுத்த அவர் ஏன் அப்படி சொன்னார் என தெரியவில்லை. பெரியப்பா என்னிடம் வசதியை தவிர மற்ற அனைத்தையும் நல்லபடியாக சொல்லிவிட்டு ஏன் அப்படி சொன்னார் என தெரியவில்லை. அவர்களை இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிவிட்டுவிட்டேன் என நினைக்கிறேன். மற்றவர்கள் support  தேவை இல்லை, என் விருப்பம்தான் என்னுடைய முடிவு என வாதிட்டேன்.


நிறைய convincing statements - நானும் சிலவற்றை மிகைபடுத்தி சொல்லியிருந்தேன், என் விருப்பம் நிறைவேற.
நிறைய  examples - examples மேல வெறுப்புவரும்படியாக இருவரும் examples சொல்லியிருப்போம். கருமம், ஒரே விஷயத்தை நல்லதாக சொல்வதற்கும், கேட்டதாக சொல்வதற்கும் examples இருக்கிறது. என்ன செய்ய?
நிறைய probability - என் அண்ணனிடம் பேசி ஜெயிக்கமுடியவில்லை. probability அதிகம் இருக்கும் நல்ல ஆட்டு மந்தையில் நுழைய விரும்பவில்லை.
என் பாதை நான் போட்டதாக இருக்கவேண்டும். அதில் கஷ்டம் (உண்மையில் அந்த அளவிற்கு மோசமான option இல்லை) வந்தாலும் அதை சந்தோசமாக ஏற்றுக்கொள்ள. அடுத்தவர்கள் பாதையில் (including my well wishers) வரும் சந்தோஷம் உண்மையில் எனக்கு சொந்தமானதில்லை. அதை அனுபவிக்கவும் எனக்கு விருப்பம் இல்லை.

பெற்றோர்கள் வந்தார்கள். புதிதாக ஒன்றும் இல்லை. அதே sentiment, அதே dialog உடன் கூடிய arguments. Repeat செய்ய வேண்டாம் என நினைக்கிறேன். அனைவரும் முடிவெடுத்துவிட்டு பேசிக்கொண்டிருக்கிறோம். எதிர் இருப்பவரின் கருத்தை யாரும் கேட்கவில்லை, convince செய்வதை மட்டுமே குறிக்கோளாக இருந்தது. அவர்கள் பக்கம் இருக்கும் நியாயம் என்னவென்றே புரியவே இல்லை. இதில் காலவிரயம் மட்டுமே ஆவதை உணர முடிந்தது.

அப்பாவின் கெஞ்சல், அம்மாவின் அழகை, அண்ணனின் ஆக்ரோசம் என மும்முனை தாக்குதல், என் முடிவில் strong -ஆக இருக்க அனுமதிக்கவில்லை. எனக்கெதிரான முடிவுகளை என் நலனுக்காகவே எடுப்பதாக என்னும் அளவுக்கு அதிகமான அன்பு. இந்த ஒரு விஷயம் என் வீட்டில் எத்தனை பேரை கேட்ட செயலை செய்ய தூண்டியிருக்கிறது. அனைத்தும் மாறக்கூடியதே. இன்னும் சிலகாலங்கள் காத்திருப்போம் அவர்களின் மாற்றத்திற்காக என தோன்றியது.  சரி, நான் மறந்துவிடுகிறேன் என்று சொன்னதும், என் பெற்றோர்களின் சந்தோசம் வெளிப்படையாக உணர முடிந்தது.

நான் வேண்டாம் என்றதும், பரவா இல்லை என சொல்லமாட்டார்களா என தோன்றிய எனக்கு ஏமாற்றம். அதற்க்கு பதிலாக, உனக்கு என்ன தொழில் ஆரம்பிக்கணும்னு சொல்லு என, முன்பு மறுப்பு தெரிவித்த சிலவற்றை இப்போது offer ஆக கொடுத்தனர். Bad compensation at bad time. அடிப்படையில் சில மாற்றங்களை கேட்கலாம் என தோன்றியது. என் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டது மூன்று. 1. கீழே (வசதி, ஜாதி குறைவாக) இருப்பவர்களை  குறைவாக எண்ணாதீர்கள். 2. என்னை நம்பாமலோ / முட்டாளாகவோ நினைக்காதிர்கள். என் உடன் இருப்பவர்களை தப்பாக நினைக்காதிர்கள், நீங்கள் சொல்லியே கேட்க்காத நான், அவர்கள் சொல்லி கண்டிப்பாக கேட்கமாட்டேன். 3. logic  இல்லாமல் sentimental blackmail செய்யாதிர்கள். என் அண்ணனும், இம்மூன்று விசயத்திலும் அடிபட்டிருந்ததால் என்னை ஆமோதித்தான். எனக்குத்தான் அதிகம் பார்க்கிறான்? அவர்களும் சரி என்றனர். எந்த அளவிற்கு புரிந்துகொண்டார்கள் என்பது தெரியவில்லை. உண்மையில் புரிந்துக்கொண்டிருந்தால், அந்த பெண்ணையே பார்க்கலாம் என்று சொல்லியிறுப்பார்கள்.

தம்பி, business பேசிட்டு வந்திருக்கிற, என கோபமானான். அவன் கோபத்தில் நியாயம் இருக்கிறது. சிலவற்றை எதிர்கொள்ளத்தேரியாத கோழைதான் நான். எனக்காக ஒருநாள் இரவு முழுவதும் கூட என் பெற்றோர்களிடம் சண்டை போட்டிருக்கிறான் அவன். போருக்கு அவனை அழைத்துசென்று, விட்டுவிட்டு ஓடி இருந்தால் கூட பரவாயில்லை. நோக்கத்தை விட்டுவிட்டு, எதிர் அணியுடன் deal  பேசி முடித்திருக்கிறேன்.

பெண் வீட்டிலும் சொல்லிவிட்டு, அவர்களிடம் எனக்கு பிடித்திருந்த simplicity, இருப்பதை மறைக்காமல் காமித்துக்கொல்வது என்பதையெல்லாம் மாற்றிக்கொள்ள சொன்னேன். என் பெரியப்பா சொன்னமாதிரி திருமணம் ஆகும்வரை ஒரு flat-ல் வாடகைக்கு இருந்துக்கொண்டு கோடம்பாக்கத்தில் சொந்தவீடு இருக்கிறது. renovation செய்யனும்னு சொல்லுங்க என்றேன். advice பண்ணாத மூடிட்டு போனு சொல்லாம, ஏமாற்றத்துடன் feedback கேட்டுக்கொண்டார்கள். என் குற்ற உணர்ச்சி மேலும் அதிகமானது. என்ன செய்வது? உணமையை எதிர்கொல்வதைவிட, பொய்மையை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.

மற்றொன்று, Adjustable person க்கு அடுத்தவர்கள் எப்போதும் கொடுக்கும் பரிசு last/least preference. அப்புறம் எப்படி அந்த நிலையிலேயே வெகுகாலம் இருப்பது என தெரியவில்லை. எனக்கிருந்த ஒரே (தம்பியின்) support யும் இழந்துவிட்டேன். என் பெற்றோரும் சரி, அண்ணனும் சரி, இப்போது கேட்டாலும் உன் விருப்பம்தான் என சொல்வார்கள். ஆனால் என் விருப்பம் அவர்களுடைய விருப்பமாகத்தான் இருக்கவேண்டும். சிலவற்றை படிக்கலாம், வாய் கிழிய பேசலாம், இப்படி எழுதலாம். ஆனால் வாழ்வில் நடைமுறை படுத்துவது என்பது சிரமமான ஒன்று. 

தொடரும் ...

சனி, 14 ஜூலை, 2012

பெண் தேடல் - II

அடுத்த ஒரு மாதம் போனது. அந்த அளவிற்கு எந்த பெண்ணும் எனக்கு பிடிக்கவில்லை. என் மனதிலும் அந்த பெண் பதிந்துவிட்டாள் போல. அந்த பெண்ணின் profile -ஐ வேறொரு matrimonial site ல் பார்க்க, மனம்  மற்றொரு முயற்சி செய்யலாம் என தோன்றியது. என் அண்ணனும், பெற்றோர்களும் முழுவதுமாக பேசவே விடமாட்டார்கள். அவர்களுக்கு பிடிக்காத விசயமாக இருந்தால், ஆரம்பித்தவுடனேயே, negative-ஆக பேசி, வாயை மூடிவிடுவார்கள். அதனால் அண்ணனுக்கு email மூலம் சொல்லலாம் என compose செய்ய ஆரம்பிதேன். முடிக்கும் தருவாயில், தம்பியிடம் இருந்து call வந்தது. அவன் வீட்டில் பேசிவிட்டதாகவும், அந்த பெண் வீட்டில் எப்போது பெண் பார்க்கவரலாம் என கேட்டு வீட்டுக்கு சொல் என்று. பெற்றோர்களுடன் அதிகம் பேசி சொதப்பவேண்டாம் எனவும் அறிவுருத்தினான். தம்பி, எப்படி? வாய்ப்பே இல்ல. இதுக்குதான் தம்பி இருக்கணும்னு சொல்றது.

அண்ணன் மூலமான approach-ஐ கைவிட்டுவிட்டு, அடுத்த நாள் வீட்டுக்கு call செய்து, தம்பி சொன்னான். ரெண்டாவது முறை போகிறோம், நன்றாக முடிவு செய்துக்கொண்டு சொல்லுங்கள் என்றேன். உங்க விரும்பம்தான்ப்பா என்றார் அப்பா. மற்றொருமுறை உறுதிசெய்துக்கொண்டு பெண்வீட்டாரிடம் கூறி நாளை முடிவுசெய்தேன். அவர்கள் முதலில் சிறிது யோசித்தாலும், பின்னர் என்னைப்பற்றி விசாரித்திருந்ததால் சரி என்றனர். நானும், முதலில் அதிகம் யோசிப்பது பொதுவான ஒரு விஷயம்தான், நம்பிவந்தவர்களிடம் மோசமாக நடந்துகொள்ளும் அளவிற்கு என் பெற்றோர்கள் மோசமானவர்கள் அல்ல என பயத்தை தெளியவைத்தேன். என் வீட்டில் சரியென்று சொல்லிட்டாங்க என்றதும், அப்பா,கோபப்படாமல் அண்ணனிடம் பேசு என்று phone -ஐ அண்ணனிடம் கொடுத்தார். அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்தான் போல.

இரண்டாவது முறை போவது சரியிருக்காது வேண்டாம் என்றான். இதில் என்ன இருக்கு, நானும் கெஞ்சி கேட்கல. நான் எதையும் விட்டுகொடுத்தும் கேட்கவில்லை. அண்ணனுக்கு இரண்டாவது approach என்பது மோசமான ஒன்று என பிடிவாதமாக இருந்தான். 'second approach' இந்த ஒரு வார்த்தைதான் என் எதிர்காலத்தை எழுதப்போகிறது என்பதுபோலவே பேசினான். reconsideration, second  approach இரண்டும் எப்படி எடுத்துகொள்கிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கும் என வாதிட்டேன். அதே நேரத்தில் ஒரு முடிவுதான் என் வாழ்க்கையையே மாற்றும் என எந்த முடிவையும் நான் இதுவரை நம்புவதில்லை. அண்ணனிடம் என் பேச்சு பலனில்லாமல் போனது. இதை பற்றி இனி என்னிடம் பேசவேண்டாம் என்றான். நானும் சரி என கூறி, எதிர்ப்பு குறைந்தால் போதும் என விட்டுவிட்டேன். பெற்றோர்கள், என் விருப்பம்தான் என கூறி வருவதாக ஒப்புக்கொண்டார்கள்.

எப்போதும் இயல்பாக இருக்கவேண்டும் என என்னும் நான், ஒரு விஷேசத்திர்க்காக அழகுபடுத்துவது, புதுத்துணி அணிவது என்பதை எல்லாம் தவிர்த்துவந்தேன். பலர் சொல்லியும் கேட்காத நான், இந்தமுறை, அது என்னவோ, சரியாக தோன்றியது. அனைவரும் சொல்வதுபோல், மிகைபடுத்தி காமிக்காமல், இருப்பதை ஒழுங்காக காமிக்கும் அளவிற்காவது இருக்கவேண்டும் என ஒப்புக்கொள்ள தோன்றியது.  ஒரு நாள் முன்னரே facial செய்துக்கொண்டு, புது உடைகள் வாங்கிக்கொண்டு  தயாரானேன்.

என் பெற்றோர்கள், பெரியப்பா மற்றும் மாமா எங்கள் ஊரிலிருந்து சென்னை வந்தார்கள். நானும் என் நண்பரின் குடும்பமும் சேர்ந்து, பெண் வீட்டுக்கு சிறிது முன் அவர்களுடன் இணைந்து ஒருவழியாக பெண் வீட்டை சென்றடைந்தோம். 30 வருட பழைய, சிறிய வீடு. என் கொள்கையை சொதித்துப்பார்பதற்க்காகவே  இருப்பதுபோல் இருந்தது. தயக்கத்தை வெளிகாட்டிக்கொள்ளாமல் உள்ளே சென்றோம். பெண், snacks, ஜூஸ், டீ என வழக்கமான வரவேற்ப்பு.

சில நிமிடத்தில், என் அப்பா என்னை வெளியே அழைத்து வந்து, என் மேல் நம்பிக்கை இல்லாமல் ஏற்க்கனவே இங்கு வந்திருக்கியா? அந்த பெண்ணோடு பேசி இருக்கியா? என்றார். இல்லை என்றேன். உன்ன ஏன் இப்படி கொரைச்சு நினைச்சுக்கிற, இவ்வளவு சின்ன வீட்ல பார்க்கனுமா? என்றார். நடுவில் எழுந்துவந்ததே நாகரிகமில்லாத செயலாக நினைத்துக்கொண்டிருந்த அந்த வேளையில், இந்த மாதிரி கேள்விகள் கோபத்தை தூண்டியது. 

பொறுமையாக சிறிது தூராம் அழைத்து சென்று, நான் இங்க வீட்டோட மாப்பிளையா இருக்கப்போரதில்ல. பெண்ணை பாருங்க, குடும்பத்து பழக்கவழக்கத்துல எதாச்சு தப்பா தெரிந்தா சொல்லுங்க என்றேன். அவுங்க அப்பாவ பார்த்தா குடிக்கரவங்கபோல இருக்கு என்றார். அதை விசாரித்து சொல்கிறேன் என்றேன். பெரிய பெரிய இடமெல்லாம் தரன்னு சொல்றாங்க என வழக்கம்போல ஆரம்பித்தார். தயவுசெஞ்சு நிறுத்துங்க, ஒருவருசமா, கரகாட்டகாரன் கோவைசரளா மாதிரி, ஜப்பான்-ல ஜாக்கிஜான் குப்டாங்க, மிக்கேல் ஜாக்சன் குப்பிடாங்கனு, சொல்லிகிட்டேதான் இருக்கீங்க. எனக்கு முதல் முறை அவர்களை காக்கவைத்ததையே குற்ற உணர்ச்சியாக நினைத்துக்கொண்டிருந்தேன். இரண்டாவதுமுறை அதே தவறை அதே காரணங்களுக்காக செய்யவிரும்பவில்லை என்றேன்.

தயக்கத்துடன், அவளுடைய மாமாவிடம் அவருடைய அப்பாவைபற்றி விசாரித்துவிட்டு (அப்படி ஒன்றும் இல்லை) கிளம்பினோம்.  அப்பா, அண்ணனிடம் பேசி முடிவை சொல்கிறோம் என அவர்களுக்கு பதிலளித்தார். என் பெற்றோர்களும் மாமாவும் வீட்டுக்கு  அங்கிருந்தே கிளம்பினார்கள். எங்களோடு பெரியப்பா அவருடைய மகனை பார்த்துவிட்டு செல்ல வந்தார். பெரியப்பா பெண்ணின் சொந்த ஊரில் வேலை செய்தவர் என்பதால், இவரிடம்தான் விசாரித்து இருப்பார்கள் என யூகித்து அவரிடம் விசாரிக்க ஆரம்பித்தேன்.

உங்க அப்பாவுக்கு அவுங்க வசதிய பார்த்ததற்கு அப்புறம் இதில் சுத்தமா விருப்பமில்லை என்றார். சின்ன வீடாக இருந்தாலும் கோடம்பாக்கத்தில் அதன் மதிப்பு கொடிகளில் இருக்கும் என சொன்னார். உங்க அப்பா ஊருல பெருசா வீட்டகட்டிட்டு அதே மாதிரி city ல எதிர்பர்க்கறார். காலுக்கேத்த செருப்பா, செருப்புக்கேத்த காலானு நீங்கதான் முடிவுசெய்யனும்னு சொன்னார். எதிர்பாரதவிதமாக எனக்கு சாதகமாக பேசுவதை உணர்ந்தேன். அவர் முதலிலேயே நல்ல குடும்பம், வசதி குறைவு என்பதை சொல்லிருக்கிறார். இருந்தும், என்னுடைய வற்புறுத்தலுக்காகத்தான் வந்தார்கள் என்றார். என் அப்பா குடும்பமே நல்ல குடும்பம் இல்லை  என்பதுபோல் சொல்லியிருந்தார் என்றேன். என் அப்பா என்னிடமே விளியாடுகிறார் என இன்னும் சில விசயங்களில் இருந்து தெரியவந்தது. அவர் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டு, என்னை எப்படி சொன்னால் மாறிவிடுவேன் என சில மிகைபடுத்தலான வார்த்தைகள் / பொய்களை முயர்ச்சிசெய்திருக்கிறார்.

வழக்கம்போல பதில் இல்லாத அதே formula. வீட்டில் இருந்து எந்த பதிலும் இல்லை.  என்னால் ஒரு பெண்ணுக்காக வீட்டில் நேரடியாக பிச்சை எடுக்கமுடியவில்லை. தம்பி எனக்கு உதவினான். பயனில்லாமல் வேறுமாதிரியாக திரும்பியது. logic இல்லா, sentimental பதில்கள். அவர்கள் விருப்பத்திற்கு எதிராக பேசுபவர்கள் அனைவரையும் எதிரியாக பார்க்க, பேச ஆரம்பித்தார்கள் (தம்பியையும் சேர்த்து). என்னை விபரம்தேரியாதவன் (சுயபுத்தி இல்லாதவன்), மற்றவர்கள் என்னை மாற்றிவிட்டார்கள் என கருதினர். என்னால் பிறர் பெயர் எங்கள் வீட்டில் கேட்டுபோவதை விரும்பவில்லை. நானே எனக்காக பேசலாம் என முடிவெடுத்தேன்.

தொடரும் ...

வெள்ளி, 13 ஜூலை, 2012

பெண் தேடல் - I

அண்ணனை மாற்றி, கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ள வைத்துவிடலாம் என்ற எண்ணம் முற்றிலும் தேய்ந்துபோக, வீடுகட்டும் வேலை ஓரளவிற்கு முடிந்துபோக, ஒரு வழியாக எனக்கு பெண் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். எங்காவது தெரியாத இடத்தில் பார்த்து மாட்டிக்கொள்ளவேண்டாம் என தெரிந்த இடங்களில் விசாரிக்க ஆரம்பித்தார்கள். எங்களுக்கு தெரிஞ்ச இடத்தில், ஏதும் இல்லையென சொல்லாமல், வழக்கம் போல, நல்ல இடமெல்லாம் இருந்துச்சு, இப்பதான் முடிஞ்சுது என்ற பதில் பலரிடம் இருந்து வந்தது. தெரிஞ்சவங்களுக்கு தெரிஞ்சவங்க என மூனு நாலு level  வரைக்கும்போய்ட்டு அதே பதிலுடன் திரும்பிவந்தது. வீட்டில் எதாச்சு காதல் செய்ய வேண்டியதுதானே, தேடர வேளை குரைஞ்சிருக்கும் என்றார்கள். என்ன பண்றது நல்ல பிள்ளையாகவே வளந்துட்டேன் என பதில் கூறி சமாளித்தேன்.

அடுத்த கட்டமாக, matrimonial site, சங்கங்கள் என பதிவு செய்துவைத்தோம். இருவரின் விருப்பத்திற்கு பிறகு, பெண்ணைப்பற்றி விசாரித்து முடிவுசெய்துக்கொள்ளலாம் என. அனைவரும் தேடலில் ஈடுபட்டதால், என்னுடைய விருப்பத்தை கேட்டனர். முதல் முறையாக இதைப்பற்றி பேசுவதால், உண்மையில் வெட்கப்பட வேண்டிய இடம்தான். வெட்கத்தோடு, பொண்ணு ஒல்லியாக, நிறம் கருப்பா இருந்தாலும் கலையாக, ஏதாவது degree படித்து இருக்கவேண்டும். மற்றபடி? மற்றபடி ஏதும் இல்லை. ஜாதகம், வசதி, வரதட்ச்சணை ??? ஜாதகம் - எனக்கு நம்பிக்கை இல்லை. வசதி - பெண் வீட்டாரின் வசதியை நம்பி நான் இல்லை. வரதட்ச்சணை  - எதுவும் வேண்டாம், எடுத்துவந்தால் அவர்கள் எடுத்துவந்தது என்ற எண்ணம் எப்போதும் இருக்ககூடாது. என் விருப்பம்தான் கடைசி முடிவு என அழுத்தமாக அனைவரும் சொன்னார்கள். சுலபமாக முடிந்துவிடும் போல என நினைத்தேன்.

ஆயிரக்கணக்கில் பெண்கள், matrimonial site -ல் பதிந்து இருக்க, எனக்கு பிடித்த பெண்களுக்கெல்லாம் விருப்பத்தை தெரிவித்து அனுப்பினேன். வேலை தேடுவதுபோல் - அடிக்கடி profile update செய்யவேண்டும். ஓரளவிற்கு பொருந்தினாலும் interest அனுப்பி பார்க்கவேண்டும். சில பெண்கள் எத்தனை பேர் interest  வருகிறது என பார்ப்பார்கள் போல. 3 or  4 மாதம் ஆகியும் பதில் வராது. reject ஆச்சு பண்ணலாம் இல்லன்னு தோன்றும். தினமும் இரவில் matrimonial website களில் பெண் தேடுவது ஒரு நல்ல வேலைதான்.

எனக்கும் சில interest வந்தன. எனக்கு பிடிக்காததால் உடனே மறுப்பு பதில் அனுப்பினேன். எனக்கும் அதுபோல் பல மறுப்பு பதில் வந்தன. முதலில் கஷ்டமாக இருந்தாலும் நிறைய rejection  வர வர பழகிவிட்டது. நல்ல சம்பளம் இருந்தாலும், வயது 30+, அண்ணன் பிரம்மச்சாரி, கிராமத்து பூர்விகம், average person ஆகியவை என்னை மறுப்பதற்கு முக்கிய பங்கு வகித்தன. சிலவற்றை மறைக்கலாம் (மாற்றலாம் அல்ல) என சிலர் கூறியும் அதில் எனக்கு விருப்பம் இல்லை. அப்பா இத காரணமாவச்சு, அண்ணனை திருமணம் செய்துக்கொள்ள சொல் என்றார். நீங்ககூட படிக்கலன்னு சில பேர் வேண்டாம்னு சொல்றாங்க. அதுக்காக உங்கள இந்த வயசுல படிக்க சொல்லமுடியுமா? என பதில் அளித்தேன். கெட்ட பழக்கமாக இல்லாத நிலையில், நம்மை மாற்றுபவர்களும் வேண்டாம், நமக்காக அவர்களை மாற்றிக்கொள்பவர்களும் வேண்டாம் என இருந்தேன்.

எனக்கும் பெண் வீட்டாருக்கும் பிடித்தாற்போல் இரண்டு profile வீட்டுக்கு எடுத்து சென்றேன். போட்டோ, வசதி இவைகளைபார்த்தே எங்கள் வீட்டில் சில நிமிடங்களில் மறுத்துவிட்டார்கள். என் விருப்பம் என்பது ஒப்புக்கு சொல்லப்பட்டது என்பது அப்போதுதான் உணர ஆரம்பித்தேன்.

என் பெற்றோர்களுக்கு பெருத்த எதிர்பார்ப்பு இருப்பதாக தெரிந்தது. ஒரு நல்ல இடத்திலிருந்து பெண்ணை பார்க்கவேண்டும் என்று. இங்கு 'நல்ல' என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. வரதட்ச்சனை எதிர்பார்க்காதவர்களாக இருந்தாலும், பெண் வீட்டார் பணக்காரர்களாக, பண்பானவர்களாக    இருக்கவேண்டும் என எண்ணினார்கள். எங்க அம்மாவுக்கு இந்த எதிர்பார்ப்புக்கு பின் எந்த கதையும் இல்லை. எங்க அப்பாவிற்கு, அவரின் பணக்கார எதிரிக்கு இருந்த ஒரே பெண்ணை என் அண்ணனுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அண்ணனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதால் அதற்க்கான முயற்ச்சி செய்ய முடியாமலே போனது. அந்த ஆசைக்கு தகுதியானவர்தான் எனகாட்டிக்கொள்ள, எனக்கும் அதே அளவிற்கான குடும்பத்தில் பெண், அதே மாதிரி நல்ல நிறத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். என் அம்மாவும் பெரிய இடத்தில் இருந்து வந்ததால், அவர்களுக்கு இணையாக தன்னை உயர்த்திக்கொள்ள போராடி இந்த நிலைமைக்கு வந்தார். அதனால் பெரிய இடத்தில் திருமணம் செய்துக்கொண்டால் நானும் அடுத்த level -கு போராடுவேன் என அவருக்கு நம்பிக்கை. அண்ணனுக்கு அனைத்தும் இருக்கும் இடத்தில் பெண் பார்த்தால் எனக்கு அவர்களால் எந்த கூடுதல் பளுவும் வராது என நம்பிக்கை. என் தம்பிக்கு என்னுடைய விருப்பத்தை தவிர எந்த புதிய திணிப்பும் கொடுக்க விரும்பவில்லை.

லவ் பண்ணியா, உனக்கு புடிச்சா போதும் என பேசிவிட்டு, இப்ப கருப்பா இருக்கு, வசதியா இல்ல, அப்பா நல்ல வேலையில இல்ல, தூரமா இருக்கு, வீட்ல எல்லாம் பொண்ணா இருக்குன்னு, ...    சில எதிர்பார்ப்புக்கள் வீட்டோட மாப்பிளைக்கு பார்ப்பதுபோல் இருந்தது. (என்னுடைய எதிர்பார்ப்பு பெண்ணை பற்றி மட்டும் இருந்தது.) வீட்டில் சிறு சண்டைக்கு பிறகு, இனிமேல் நீங்களே எல்லாவற்றையும் பார்த்துவிட்டு  சொல்லுங்கள் என்றேன். என்னுடைய தொலை பேசி எண்ணை எடுத்துவிட்டு அண்ணனுடைய எண்ணை பதிவு செய்தேன். சில மாதங்களுக்கு பின், எங்களுக்கு என்னப்பா தெரியுது, நீயே பாரேன் என்று பெற்றோர்கள் சொல்ல. தம்பி வெளிநாட்டில் இருக்க, அண்ணன் வேலை பளுவில் இருக்க, சில நிபந்தனைகளுடன் திரும்பவும் நான் பார்க்க ஆரம்பிதேன்.  எனக்கு பிடித்த  profile (appearance , படிப்பு) தொலைபேசி எண்களை பெற்றோர்களிடம் கொடுத்தேன். அவர்கள் விசாரித்துவிட்டு (வசதி, ஜாதகம்) எனக்கு முடிவுசொல்வார்கள் .

அதில் ஒரு profile  இரு வீட்டாருக்கும்  பிடித்திருக்க என்னிடம் வந்தது. நானும் அவர்களுடைய மற்ற விவரங்களையும் கணினியில் சேகரித்துக்கொண்டு வீட்டில் கொடுத்தேன். அதனிடையே என்னுடைய நெருங்கிய நண்பரின் நண்பர் அந்த பெண்ணிற்கு 4+ வருடமாக manager அக இருப்பது தெரியவர, அவரிடமிருந்து பெண்ணை பற்றி நல்ல அபிப்ராயங்கள் வர, நானும் ஓரளவிற்கு மனதில் கற்பனை வளர்த்துக்கொண்டபிறகு, ஜாதகம் பொருந்தவில்லை, வேண்டாம் என வீட்டில் இருந்து செய்தி வந்தது. ஜாதகம் எனக்கு தேவை இல்லாதது, அதற்காக ஒரு நல்ல பெண்ணை தவிர்க்க விரும்பவில்லை என போராட, குரு பெயர்ச்சி வரும்வரை என்னை பெற்றோர்கள் காத்திருக்க சொன்னார்கள்.

இரண்டு வாரம், கொஞ்சம் அதிகமான காலமாக தெரிந்தது. இதனிடையே ஒரு நாள் வீட்டுக்கு போக அவர்கள் வேறு இரண்டு பெண்களின் photo என்னிடம் காட்டினார்கள். புரியாமல் அந்த பெண் என்ன ஆனது என கேட்டேன். அது வேண்டாம் என பதில் வந்தது. உடனே, அந்த பெண்ணின் அக்கா ஒரு கிருஸ்துவ பையனை காதிலித்து திருமணம் செய்துக்கொண்டார்கலாமே. ஏன் என்னிடம் இருந்து மறைத்தீர்கள் என என்னை கேட்டார்கள். எனக்கு தெரிந்த விஷயம், என் பெற்றோர்களுக்கு தெரியாது என்பது அப்போதுதான் எனக்கு தெரிந்தது. குடும்பத்தை பற்றி விசாரித்ததில், இருக்கும் ஒரே ஒரு அக்காவின் திருமணத்தை பற்றி விசாரிக்காமல் என்ன செய்தார்கள் என தெரியவில்லை. இப்ப எல்லாம் 4 வீட்டுக்கு ஒருத்தன் லவ் பண்றான், அதெல்லாம் பெருசில்ல. அப்படியே இருந்தாலும் அக்காவின் காதலுக்கு அவள் என்ன செய்வாள் என புரியவில்லை.

சில நிமிட சண்டைக்குபிறகு (அழுகை, செண்டிமெண்ட், மிரட்டல் என திரையில் பார்க்கும் அனைத்து வழிமுறைகளையும் என் பெற்றோர்கள் பயன்படுத்திவிட்டர்கள்),  நான் தெரியாத ஒரு பெண்ணிற்க்காக என் வீட்டில் போராடிக்கொண்டு இருக்கிறேன் என உணரமுடிந்தது. என்னை சமாதானப்படுத்திக்கொண்டு, தெரியாத பெண்ணிற்க்காக உங்களிடம் சண்டை போட விரும்பவில்லை. அக்கா லவ் பன்றதிலிருந்து, ஜாதகம் வரைக்கும் எல்லோரும் பார்க்கறத பார்க்கறிங்க. அதே நேரத்தில் லவ் பண்ணவேண்டியதுதான, உனக்கு பிடிச்சா சரிதான்- னு broadminded people போல நடிக்காதிங்கனு சொல்லிவிட்டு கோபத்தோடு நகர்ந்தேன். சென்னை போகும் முன் atleast பொண்னுவீட்டுக்காவது விபரம் சொல்லுங்க. அவுங்கலாவது உங்களுக்காக காத்திருக்காம அடுத்தத பார்ப்பாங்க என சொல்லிருந்தேன்.

ஒரு சில தினத்தில் பெண் வீட்டிலுருந்து என்ன ஆச்சுனு என்னிடம் தொலைபேசியில் கேட்டார்கள். அந்த பெண்ணை வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு எனக்கு மனதில்லை. நான் வீட்டில் இன்னும் கேட்க்கவில்லை என சொல்லிவிட்டு உடனே பெற்றோர்களிடம் ஏன்  சொல்லவில்லை? என கேட்டேன். ஏதும் சொல்லலைனா இந்த விசயத்துல புரிஞ்சுக்குவாங்கப்பா என்றார்கள். பொதுவான bad  assumption. தயவுசெஞ்சு சொல்லிடுங்கனு வெறுப்போடு பதிலளித்தேன்.

பெற்றோர்களிடமிருந்து பதற்றமான குரலில் phone வந்தது. அவுங்க கோபமா பேசறாங்கப்பா, எதாச்சு உன்ன பண்ணிடப்போராங்கனு. நடிக்காதிங்க, எனக்கே 15 நாள் காத்திருக்க சொல்லி பதில் இல்லையென்றால் கோபம் வரும். அதுவும் நீங்க மிகைப்படுத்தும் அளவிற்கு மோசமான ஆளுங்களா எனக்கு தெரியலன்னு அவர்களுக்கு phone செய்தேன். ஜாதகம் பிரச்சனை என்றால் முதலிலேயே தெரியம் இல்ல அப்பவே சொல்லிருக்கலாம் என்றனர். 15 நாள் வீண்தான என ஏமாற்றமான குரலில் சொன்னார்கள். வீட்டின் மேல் வெறுப்பு அதிகமானது.

வீட்டாரின் சோகம் பலரின் மூலமாக என்னிடம் வந்து சேர்ந்தது. சிலர் அறிவுரை கூறினார்கள். நான் என்ன தப்பா செஞ்சேன். அப்படியே இருந்தாலும் அவர்களுக்காக விட்டுகொடுத்துட்டுதான வந்தேன். தோல்வி என்னோடது, கொஞ்சமாவது feel நான் பண்ணனும். கொஞ்சம் நாள் விடுங்க நானே சரியாகிவிடுவேன் என பதிலளித்தேன்.

சிலர், ஜாதகம் ஒன்னும் பெருசில்ல இந்த காலத்துல என support  செய்தனர். உறவின சகோதரர் ஒருவர் அக்கா லவ் பண்ணதுக்கு வேண்டாம்னு சொல்றாங்க, கல்யாணத்திற்கு அப்புறம் அந்த பொண்ணுக்கு தங்கச்சி இருந்து, அவ லவ் பண்ணா divorce செய்ய சொல்லுவாங்களா என்றார். அத எங்க வீட்ல சொல்லுங்கன்னு ஆறுதல் அடைந்துக்கொண்டேன். ஜாதகம், ஜாதி, வசதி எல்லாம் பார்க்காம திருமணம் செய்துக்கொல்லனும்னு என் வாழ்க்கையில தெரிந்துகொண்ட சில நல்ல (எனக்கு) விஷயங்கள். இன்று என்னாலயே அதை செயல்படுத்தமுடியவில்லை எனும்போது அறிவிருந்தும் முட்டாளாக இருக்கவேண்டி இருக்கிறது. கோயில் மேடையில் செருப்பு அணிந்து நிற்கும் என் அண்ணனே ஜாதகம் பொருந்தவில்லை என பேசுகிறான். எல்லாமே என் நல்லதுக்குதான் என என் விருப்பத்திற்க்கு எதிராக என்னை நடக்க சொல்லும் பெற்றோர்கள். என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதிகம் தம்பியிடம்தான் பொலம்புவேன். அவன் suggest செய்த ஒன்று - பெற்றோர்களுக்காக காதலை தியாகம் செய்தவர்கள், காதலுக்காக பெற்றோர்களை தியாகம் செய்தவர்கள் - நீயா நானா நிகழ்ச்சி. உணர்வுபூர்வமான நிகழ்ச்சி. இவ்வளவு கதை எழுததேவை இல்லை, அதை பார்த்தாலே புரியும்.

தொடரும் ....

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

விபத்து


சென்னைக்கு மாற்றலாகி வந்தவுடன், நண்பர் பிரேம் அண்ணனின் வீட்டுக்கு அருகிலேயே, அவருடைய நண்பரின் வீட்டில் வாடகைக்கு தங்கினேன்.  பிரேமுடனேயே  அவருடைய splendor plus-இல் மடிப்பாக்கத்திலிருந்து தாம்பரம் அலுவலகத்திற்கு போய் வந்துக்கொண்டிருந்தேன். என்னிடம் இரு சக்கர வண்டி ஓட்டுவதற்கான license இல்லை. இதுவரையும் எடுக்கவில்லை. அவ்வப்போது உரிமையுடன் பிரேமின் வண்டி எடுத்து ட்டி பழகிக்கொண்டிருந்தேன்.
மடிப்பாக்கம்-கீழ்க்கட்டளை-க்ரோம்பேட்-தம்பரம் MEPZ, இதுதான் எங்களுடைய வழக்கமான வழி. அலுவலகத்தில் சில நல்ல விதிமுறைகள் இரு சக்கர ஓட்டுனர்களுக்கு இருந்தது. Helmet அணியாமல் உள்ளே போக முடியாது. கோடிடப்பட்ட parking slot. License சரிப்பார்ப்பதில் சில நடைமுறை படுத்துதல் பிரச்சனை இருந்ததால், ஹைதராபாத்-DLF-அலுவலகத்தில் இருப்பதுபோல் இங்கு license உள்ளவர்களை சரிபார்த்து, அவர்களுடைய வண்டியில் sticker ஒட்டி சரிபார்க்கவில்லை.

சில படித்த அறிவாளிகள், வழியிலேயே வண்டியை நிறுத்திவிட்டு சில நொடிகளை சேகரித்த்க்கொண்டு செல்வதை பார்த்து பிரேம் அவர்களுக்கு அறிவில்லாததுபோல் கோபப்பட்டு கேட்பார். சிலர் வண்டியை எடுத்து parking slot-க்குள் விட்டுவிட்டு செல்வார்கள். சிலர் இன்னும் வழி இருக்கிறது என லேசாக  தலையை bike-க்கு அந்தப்பும் எட்டி பார்த்துவிட்டு செல்வார்கள். ஒருமுறை ஒரு security இந்த படிக்காதவன்கிட்ட rules-ஐ சொல்லி தடுத்திடலாம். படிச்சவங்ககிட்ட ரொம்ப கஷ்டம் என பெருமூச்சுவிடுவதை பார்த்திருக்கிறேன். ஏன், ப்ரேமே பல நேரங்களில் mobile-இல் பேசிக்கொண்டு bike ஒட்டி செல்வார். அவரும், பேசிக்கொண்டிருந்தாலும் கவனாமகத்தான் வண்டி ஓட்டுவேன் என காரணம் சொல்லலாம்.

ஒரு நாள் கீழ்கட்டளை க்ரோம்பேட் 200ft ரோட்டில் வரும்போது எங்களுடைய வண்டியின் tyre வெடித்து, பிரேம் எப்படியோ balance செய்து கீழே விழாமல் வண்டியை நிறுத்தினார். அப்போது அவருக்கு புது வண்டி வாங்க வேண்டிய அவசியம் அதிகமானது. அவருடைய பிறந்த நாள் நெருக்கத்தில் இருந்ததால், எப்போதும் அவருடைய தேவையை அறிந்து பரிசு தரும் அவருடைய மனைவி வனிதா, இந்த முறை பைக் வாங்கிகொடுப்பது என முடிவேடுத்திருந்தார். பல யோசனைக்குப்பிறகு Hero Honda CBZ என முடிவானது.

சிலநாட்கள் அவரோடு கிளம்பமுடியாத நேரங்களில் அவர் விஜயின் (எங்கள் கம்பெனியில் வேலை செய்யும் மற்றொரு மடிப்பாக்கம் நண்பர்) வண்டியில் சென்றுவிட்டு அவருடைய வண்டியை (புது CBZ) எனக்கு கொடுத்துவிட்டு செல்வார். நானும் தனிமையில் பைக்கில் வர பழகிக்கொண்டேன். அனைவரையும்போல் புதிதாக வண்டி ஓட்டுபவன், காலியான ரோட்டில் வேகமாக ஓட்டுவது போல் நானும் 200ft ரோட்டில் வேகமாக வருகையில், ஒரு எருமை மாடு கீழே விழுந்துக்கிடந்தது. அருகில் வந்து சுதாரித்து ஒதுங்கி வண்டியை control-லுக்கு கொண்டு வந்தாலும், என் இதய துடிப்பை என்னுடைய control-க்கு வரவில்லை.


அடுத்த நாள் சிலரிடம் அதைப்பற்றி சொன்னதில், பலர் அறிவுரை கூறினர். அது மோசமான ரோடு பார்த்து போகனும். மாடு, நாயெல்லாம் cross பன்னும். திருடங்க அதிகம் இருப்பாங்க என. அதன் பிறகுதான் அலுவலகம் செல்லும்போது நான் இருபுறம் ரசித்த ஏரிகளின் இரவு நேர ஆபத்து தெரிந்தது. இருபுறமும் ஏரிகள் நிறைந்த அந்த ஏரிக்கரைகளில் போடும் குப்பைகளை நம்பி இருக்கும் நாய்கள், இரவில் எதற்க்கு ரோட்டில் இருக்கும் ஆபத்தை தெரிந்தும் குறுக்கும் நெடுக்கும் விளையாடுகிறது என தெரியவில்லை.  பகலில் அங்கு மேயும் எருமைகள் இரவில் இரவின் நிறத்திலேயே எமனை சுமந்துக்கொண்டு கடக்கின்றன.  ஆளில்லாத அந்த road இரவில் திருடர்கள் பழகுவதற்கு ஏதுவாக இருக்கும்.


அதிலுருந்து கொஞ்சம் ஜாக்கரதையாக செல்ல ஆரம்பித்தேன். வேகத்தை என்னுடைய control-க்குள் இருக்கும் அளவிற்கு குறைத்துக்கொண்டேன். இருந்தும், தெரிந்துகொள்ள வேண்டிய சில. நடந்து செல்லும் பலர், அவர்களுக்கு traffic rules இல்லை என, ரோட்டில் கடந்து/நடந்து செல்வர்கள். ரோட்டில் நடந்து செல்பவர்களுக்கு கூட License கொடுக்ககூடதா என தோன்றும். சிலர் indicator போட்டால் போதுமென மற்றவண்டியை பார்க்காமல் திடீரென வண்டியை திருப்புவான். இதெல்லாம் license பிரச்சனை  இல்லை என்பதைபோல். சிலர், சிக்னலும் traffic police-ம் இருந்தால்தான் traffic rules follow செய்யவேண்டும் என்பதுபோல், traffic police இல்லாத சிக்னலில் red விழுந்தாலும் பின்னாலிருந்து horn அடித்துக்கொண்டிருப்பான் / நம் வண்டியை இடித்தாலும் ஆச்சர்யபடுவதற்க்கில்லை.

மற்றொரு நாள் பிரேமுடன் வரும்போது ஒரு சிலர் நின்றிப்பதை பார்த்துவிட்டு, விபத்தாகத்தான் இருக்கும் என வண்டியை நிறுத்தி அவர்கள் அருகில் சென்றோம். எதிர்புறமாக வந்த ஒருவன் எறுமை மாட்டில் மோதி ரத்தம் வடிய எழுந்து, பைக்கை நோக்கி போய்க்கொண்டிருந்தான். அங்கு நின்றவர், அதிகமா ரத்தம் வருதுங்க, ambulance –கு call பண்ணட்டுமா என கேட்டார். இல்லங்க நான் பார்த்துக்கறேன்னு பதில் சொல்லிக்கொண்டே bike-ன் condition- சரி பார்த்துக்கொண்டிருந்தான். இல்ல பக்கத்துல மருத்தவமனைக்காவது கூப்பிட்டுட்டு போகட்டுமா என கேட்டார். இல்லைங்க இங்க பக்கத்துல hospital தெரியும் நான் போய்க்கறேனு சொல்லிட்டு, வண்டிய கெளப்பி போய்விட்டான். ப்ரேம், தண்ணி அடிச்சிருக்கான் அதான் police case ஆகுமோன்னு பயப்படரானு சொன்னார். அதுக்காக … 
வாங்க போலாம், அடிபட்டவனே கெளம்பிட்டான், நாம்ப ஏண்ணா இந்த ராத்திரியில விவாதிச்சிகிட்டு இருக்கறதுன்னு கெளம்பினோம்.

என்னுடைய வேலை பளு அதிகமானதால், நான் இரவில் தனியாக வருவது அதிகரித்தது. பிரேம் என்னிடம் எங்களுடைய (அவருடைய) வண்டியை கொடுத்துவிட்டு, விஜயோடு சென்றுவிடுவார். வழிப்பறியை தடுக்க, Vel’s college-ல் (200ft road-இல்) Check post புதிதாக வந்திருந்தது. என்னிடம் expiry ஆன LLR மட்டுமே இருந்தது. முதல் முறை மாட்டும் பொது, license இல்ல சார். Visa processing-கு கொடுத்திருக்கிறேன் sir-னு சொன்னேன். எந்த company-னு கேட்டு விடு என உயர் அதிகரி சொல்ல, இவனுங்க இப்படிதான் சார் ஏதாச்சி பொய் சொல்லுவாங்கனு முகத்தில் வேட்டு போட்டpolice சொன்னார். பரவா இல்ல விடுப்பா என்றார் உயர் அதிகாரி. அடுத்த முறை வேட்டுபோட்ட போலீசிடம் மாட்டினேன். உயர் அதிகாரி இல்லை. இவர் என்னையும் மறந்திருக்கணும். அதே பொய்யை சொன்னால் உபோயோகப்படாது என LLR தான் சார் இருக்கு என்றேன். LLR இருந்தா  பின்னாடி ஒரு ஆள் இருக்கனும்னு தெரியாதா என்றார். இல்ல சார்… புதிய பொய் சொல்லத்தெரியாமல் பொய் சொல்லிக்கொண்டிருந்தேன். இந்த ராத்திரியில் வண்டிய police station-க்கு தள்ளிட்டு போனா, வண்டிய எடுக்கவே நாலு நாள் ஆகும். என்ன சொல்ற என்றார். அவர் நம்பும்படி சொன்னாலும் விடாத போலீஸ் என புரிந்தது. அமைதியாக இருந்தேன். சரி 100 ரூபா குடுத்துட்டு போ என்றார். இப்படியாக சில நாட்களாக 100 ரூபாய் கொடுத்துவிட்டு போய்க்கொண்டிருந்தேன். சில நாட்க்களில் அந்த police குடியில் duty பார்த்துக்கொண்டிருப்பார். அதிகாரத்துடன் தவறு செய்பவர்களிடம் நாம் தவறு செய்யாமல் இருந்தாலே கேட்கமுடியாது. என்பதால் 100-ஐ கொடுத்துவிட்டு வழக்கம்போல் செல்வேன்.

ஒரு நாள் இரண்டு மணி இருக்கும், க்ரோம்பேட் சிக்னலை கடக்கும்போது. ஒரு ஆள் லுங்கி அணிந்து கீழே விழுந்துகிடப்பதை பார்த்து ஒதுங்கி வண்டியின் வேகத்தை குறைத்து கடக்கமுயன்றேன். என்னை விட கொஞ்சம் நல்ல software engineer, அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷன்-ல் இருந்த போலீசிடம், சார், ஒரு வண்டி அந்த ஆள அடிச்சுடிசுடிச்சு சார். விழுந்துட்டார் சார். என பதற்றத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார். போலீஸ் அவசரம் ஏதுமில்லாமல் பொறுமையாக அவனை நோக்கி நடந்தார். இது அவருக்கு புதிதில்லை என்பதால் அந்த பொறுமை என்று நெனைக்கிறேன். இதை கவனித்ததில், என் வண்டியின் வேகம் முற்றிலுமாக குறைந்திருந்தது. வண்டியில் வேகத்தை கூட்டி, வீட்டை நோக்கி பறந்தேன்.

வீட்டுக்கு சென்றதும் எனக்குள் கேள்வி பதில் ஓடத்தொடங்கியது. எவ்வளவு மனிதாபிமானம் மங்கிப்போய் இருக்கிறேன். வேகமாக வண்டிகள் வரும் அந்த சாலையில் அடிப்பட்டு விழுந்திருக்கும் ஒருவரை காப்பாற்ற எந்த முயர்ச்சியும் எடுக்காமல் எப்படி இயந்திரத்தனமாக என் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்? அவன் லுங்கி அணிந்திருந்ததால் குடித்துவிட்டு விழுந்தது போல் தெரிந்தது அதனால்தான். காப்பாற்ற போலீஸ் வந்துக்கொண்டிருந்தார் என்ற நம்பிக்கை, அதில்லாமல் license இல்லை என்ற பயம் அதனால்தான்- என எத்தனை காரணங்கள் சொன்னாலும் என்னுடைய அலட்சியம், சுயநலமான செயல் என்னை சில மணிநேரம் உறங்கவிடவில்லை. என்னுடைய இந்த சிலமணிநேர உறக்கமின்மையோடு நான் நிறுத்திக்கொள்ளாமல், என்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என எண்ணினேன்.

சில நாட்களில், நான், பிரேம், ரவி அண்ணன் (எங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் மற்றொரு வேளச்சேரி நண்பர்) ஒன்றாக கிளம்பினால், பிரேம் ரவியுடன் சென்று கைவேலியில் இறங்கிக்கொள்வார். நான் பிரேமின் வண்டியில் பின்தொடர்ந்து, அங்கிருந்து நானும் ப்ரேமும் மடிப்பாக்கம் செல்வோம். அவர்கள் எனக்கு முன்னாள் செல்வதால், வழியில் போலீஸ் புடித்துக்கொண்டிருந்தால் எனக்கு சொல்வார்கள். பிரேம் என்னுடிய (ப்ரேமுடைய) வண்டியை ஒட்டிக்கொள்வார்.
அன்று, வழக்கத்துக்கு மாறாக நான் சீக்கிரமாக கிளம்பினேன். எங்கள் (பிரேமின்)வண்டியின் insurance expiry ஆனதால் பிரேம் புதுப்பித்துக்கொண்டிருந்தார். பிரேமுக்காக காத்திருந்த சில நிமடங்களில் எனக்கு ஒரு சிறு வேலை வர அவர்கள், எனக்கு 5 நிமிடம் முன்னால் கிளம்பிவிட்டார்கள். அவர்களை கைவேலி போவதற்குள் புடிக்கவேண்டுமென வேகமாகக்கிளம்பினேன். 200ft road சில இடங்களில் புதிதாக போடப்பட்டிருந்தது. தெருவிளக்கு வெகு சில இடத்தில் மட்டுமே இருந்தது. ரோடு இடப்பட்ட இடத்தில் இன்னும் கூடுதல் வேகத்துடன் சென்றேன். அடுத்துவந்த Road crossing-இல் ஏரியில் இருந்து வந்த ஒரு எருமை குறுக்கிட, நான் அப்பலி செய்த brake சக்கரத்தின் சுழர்ச்சியைமட்டுமே கட்டுபடுதியது. வண்டிதேய்த்துக்கொண்டுபோக பிரேக்கை விட்டுவிட்டேன். மாட்டின் பின்தொடையில் வண்டி மோதி கீழே விழுந்தேன். (இந்த விபத்தை பலரால் முன்பே உகித்திருக்க முடிந்திருக்கும் என நெனைக்கறேன். என்னாலும் என்றைக்காவது இந்த மாதிரியான விபத்து வரலாம் என்று தெரிந்தும், கொஞ்சம் over confident அன்றைக்குத்தான் என யூகிக்க முடியவில்லை.)
எழுந்துபின்னால் வரும் வண்டிகள் என்னை மொதும் முன் ஓரமாக நின்று என் காயங்களை பார்த்தேன். எதிர்ப்பார்த்ததைவிட குறைவான காயங்களே. அந்த எருமையை காணவில்லை. என் மீது தெறித்திருந்த சாணம் மட்டும் நான் எருமை மீது மோதியதர்க்கு அடையாளமாக இருந்தது. கீழே கிடக்கும் வண்டியை தூக்கிக்கொன்டிருக்கும்போது ஒருவர் தன்னுடைய வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு எனக்கு உதவினார். என் (பிரேமின்) வண்டியின் doom அமுங்கி இருந்தது. எனக்காக காத்திருக்கும் பிரேமுக்கு போன் செய்து நடந்ததை சொல்லி வரசொன்னேன். auto-வில் அவர் வரும் வரை அந்த நல்ல நபர் கிளம்புங்கனு சொல்லியும் கேட்க்காமல் காத்திருந்து auto-வில் ஏற்றிவிட்டு சென்றார். வண்டியும் என்னை போல் காயங்களுடன் இருந்தாலும் ஓட்டிச்செல்லும் அளவிற்கு இருந்தது. பிரேம் வண்டியில் வர அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று எலும்புமுறிவு ஏதுமில்லை என்பதை உறுதிசெய்துக்கொண்டு, காயங்களை சுத்தம் செய்துக்கொண்டு, antiseptic, pain killer ஊசி போட்டுக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினோம்.

மறுநாள், என் software தொழிலுக்கு தேவையான இருகைகளிலும் காயம் என்பதால் ஊருக்குகிளம்பினேன். காயத்திற்கு அவரவர் ஒரு மருந்து சொன்னார்கள், open-அ இருக்கட்டும்னு சில பேர், கட்டு போடு என சில பேர். ஆளுக்கொரு காயத்தை அவர்களுக்கு கொடுத்து, பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லலாம் போல் இருந்தது. கடைசியாக open treatment with wakodane ointment என முடிவெடுத்தேன். சிலர் தினமும் எப்படி இருக்கு என கேட்டனர். படமா இது அடுத்த சீன்லயே சரியாக - என பதில் சொல்ல நினைத்தாலும் பரவாயில்லைங்க என்பேன். சிலர் அப்போதும் விடாமல் இந்த ointment போட்டு பாரேன் என்பார்கள். அவர்களுக்கு சொல்ல நினைத்த பதிலை சொல்லி முடித்துக்கொள்வேன்.

அம்மா -அந்த அண்ணன் வீட்ல சாப்பாடு எல்லாம் போடுவாங்கன்னு சொல்லுவ, அவுங்க வண்டிய போய் போட்டுட்டியே, அந்த aunty-கிட்ட sorry கேட்டியா என்றார்கள். ஆண்களைவிட பெண்கள் அடுத்தவர் ஏற்படுத்தும் நஷ்டத்தை எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதால், என் அம்மா அப்படி சொல்லியிருப்பார்கள் என நினைக்கிறேன். இல்ல போனதும் கேட்க்கிறேன் என்றேன். பிரேம் வீட்டுக்கு போனதும், Sorry - எப்படி கேட்பது என்று வார்த்தை frame செய்ய தெரியாமல், வனிதாவிடம், எங்க அம்மா சொன்னதை அப்படியே சொன்னேன். அவுங்க, என்னை aunty-னா சொன்னங்க என இயல்பான சிரிப்புடன் கேட்டார்கள். ஏமாற்றாமான reaction மேலும் குற்ற உணச்சியை அதிகப்படுத்தியது.

அலுவலகத்தில், பிரேமின் இடத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது என்ன பிரேம் இப்படி வண்டிய கொடுத்து பையன இப்படி ஆக்கிட்டியே
இவன நம்பியேல்லாம் வண்டி கொடுக்கிறிங்கலே? என கேலியான பேச்சுக்கள் நண்பர்களிடம் இருந்து வர
பிரேம் - உடம்ப பாருடானா, வண்டி என்னாச்சு, தப்பா நினைப்பங்கலானு போன்ல கேட்டுட்டு இருக்கான் என பதில்சொல்லிக்கொண்டிருந்தார். 
நான் - சரிங்கணா, என்னன்னா வண்டி வச்சுரிக்கிங்க, அடுத்து நல்ல திடமான வண்டியா வாங்குங்க. அடிச்சா மாடு கிழே விழனும். வால புடிச்சு தூக்கிபோட்டுட்டு போய்ட்டே இருக்கணும். 
அதுக்கு நீ போய் தெலுங்கு படம்தான் எடுக்கணும்னு பிரேம் பதிலளித்தார். ஒரு தெலுங்கு நண்பன் - ஏன் தமிழ் படம் எல்லாம் இல்லையா… 
 எவ்வளவு ஆகுதோ பில் போட்டு வாங்கிடுவ, இல்ல என ஒருவர் கேட்க்க…, 
ஆமாணா காயம் எல்லாம் சரியாகட்டும், மொத்தமா பில் போட்டு ப்ரேம்கிட்ட வாங்கிடலாம் என் அவருக்கு முன் நான் பதிலளித்தேன். 
டாய், வண்டிய சரிபண்றதுக்கு நீ கொடுக்கறத சொன்னேன்டா. இவன் கொடுத்தாலும் கொடுப்பான், ப்ரேமை பார்த்து ஒருவர்...