வியாழன், 23 டிசம்பர், 2010

TNEB apprentice

recession - என்னனு அப்போதைக்கு தெரியாது. ஆனா வேலை தேடிட்டு இருந்ததால opening இல்லாததற்கு அதான் காரணம்னு தெரியும். சென்னையில் வேலை தேடுவதை விட்டுட்டு பெங்களூருக்கு போகலாம்னு கெளம்பினேன். ஊருக்கு போயிட்டு சொல்லிட்டு போய்டலாம்னு (phone வசதி, எங்க ஊருக்கே அப்போதைக்கு வரல), நண்பன் பரமேஷ் கொடுத்த 3000 ரூபாய வாங்கிட்டு கெங்கவரம் வந்தேன். அண்ணனும் பெங்களூருல இருந்ததால, அண்ணன்கூட போகலாம்னு வீட்ல சொன்னாங்க. அண்ணனின் வருகைக்காக எதிர்பார்த்துட்டு இருந்தேன். ஆனா TNEB apprentice letter அதற்க்கு முன்னால் வந்துடுச்சு. ஒரு safety க்காக பதிவுபன்னி வச்சிருந்தேன். ஆனா அப்போதைக்கு எனக்கு போக புடிக்கல. electronics field-ல வேலைக்கு போகணும்னு இருந்தேன்.

அப்பா TNEB apprentice போயே ஆகனும்னு கண்டிப்பா சொல்லிட்டார்.  பெங்களூர்-ல  இருந்து வந்த எங்க அண்ணனும், இவன் சோம்பேறி, உனக்கு goverment வேலதான்  correct-அ இருக்கும்னு சொல்லிட்டான். நான் போகமாட்டேன், பெங்களூர்-ல என் friends இருக்காங்க, நான் கெளம்பறேன்னு சொல்லிட்டேன். எனக்காக இந்த ஒன்னு மட்டும் செய்யுனு கெஞ்சி கேட்டார் அப்பா. என்னால் என்னுடைய விருப்பத்தை அவர்களுக்கு விளக்கமுடியவில்லை. கிராமத்து அப்பா என்பதால் goverment வேலை, goverment சம்பளம், ... என்று அவர்கள் என்னைவிட உறுதியாக பேசிக்கொண்டிருந்தார்கள். எங்கிட்ட எல்லாம் கெஞ்சாதிங்க, உங்களுக்காக போறேன். ஆனா அடுத்த முறையிலிருந்து நீங்க எது சொன்னாலும் கேட்க்கமாட்டேனு அந்தமுறை மட்டும் சம்மதிச்சுட்டேன். 

விழுப்புரத்துல training. 1975 ரூபாய் staifund.ஒரு வருஷம் contract. நடுவுல வந்தா staifund-அ திரும்ப கொடுக்கனும். ஒரு வருசத்த நாலா பிரிச்சு, மொத மூனு மாசம், 110KV SS maintenance. அடுத்த மூனு மாசம், MRT. அடுத்த மூனு மாசம், line maintenance. கடைசி மூனு மாசம், transformer maintenance. staifund பணத்த என்ன பண்ணலாம்னு plan பன்ன ஆரம்பிச்சேன். முதல்ல நல்ல துணி வாங்கணும். at least ரெண்டு மாசத்துக்கு ஒரு set-ஆச்சு எடுக்கனும். apprentice முடிக்கற time-ல ஒரு reliance mobile phone வாங்கனும். (reliance CDMA mobile appothaikku 2500 ரூபாய்க்கு கொடுத்துட்டு இருந்தாங்க. post paid connection. நெறைய பேரு bill கட்டாமலே ரொம்ப மாசம் உபயோகிச்கிட்டு இருந்தாங்க.)

விழுப்புரம், எங்க ஊரிலிருந்து 50 KM இருக்கும். மழவன்தாங்கல்   போயிட்டு விழுப்புரம் போனால் 4+6 ரூபாய் ஆகும். செஞ்சி போயிட்டு போனால் 5+7 ரூபாய் ஆகும். காலையில் மோத பஸ்சுக்கு மழவன்தாங்கல் போயிட்டு, மழவன்தாங்கல் ஏரிக்கரையை கடந்து, திருவண்ணாமலை- விழுப்புரம் பஸ்ஸ புடிச்சு, விழுப்புரம் கூட்ரோடிலேயே இருந்த SS-கு சென்று apprentice letter-ஐ AE-டம் நீட்டினேன். AE, நூல் மீசை, அயன்பன்ன light colour pant shirt, உடம்புக்கு சம்பந்தம் இல்லாத அளவுக்கு பெரிய தொப்பை. தேவையானப்போது மட்டும் மூக்கு கண்ணாடி அணிவார், மற்ற நேரங்களில் எப்போதும் அவரிடமோ அல்லது அருகிலேயே இருக்கும் கண்ணாடி பௌச்சில் வைத்துக்கொள்வர். உன் கையெழுத்து நல்லா இருக்குமானு  கேட்டார். இல்ல sir-னு சொன்னேன். எந்த பதிலும் இல்லை. அங்கிருக்கும் மற்ற apperantice-ஓடு அறிமுகம் ஆகிக்கொண்டேன்.

11 மணி ஆனது. எல்லோரும் கிளம்ப ஆரம்பித்தார்கள். வா tea குடிக்க போகலாம்னு apprentice நண்பர்கள் சொல்ல, நானும் கெளம்பினேன். எதிரில் இருந்த tea கடைக்கு போனோம். கீழ்நிலை ஊழியர்கலும் அங்கு accountஇல்  தம்மு அடித்துக்கொண்டு, tea, வடை வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். tea வடை வாங்கி அரை மணி நேரத்தை போக்கிவிட்டு திரும்பினோம். AE யும், JE யும் வீட்டில் (அருகிலேயே இருக்கும் Quatres) tea அருந்திவிட்டு திரும்பி இருந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தை போக்கிவிட்டு, மதிய உணவுக்கு கெளம்பினோம். சில நண்பர்கள் உணவு எடுத்து வந்திருந்தனர். நானும் மற்றொரு நண்பனும் அருகில் இருந்த woodland hotel-க்கு  போய், vegetable பிரியாணி (10 ரூபாய்) வாங்கி சாப்டுட்டு வந்தோம்.

கொஞ்ச நேரம் apprentice நண்பர்களிடம் வேலை எப்படி இருக்கும் என விசாரிக்க ஆரம்பித்தேன். SS maintenance ஒன்னும் வேலை இருக்காது. ஒனக்கு hand writting நல்லா இருக்குமானு கேட்டாரா? ஆமாம். என்ன சொன்ன? நல்லா இருக்காதுன்னு சொன்னேன். அப்ப பிரச்சனயே இல்ல. joly-ஆ maintenance-ல போய் ஒக்காந்து இருந்துட்டு போய்டலாம். அடுத்து என்ன? MRT. அது நல்லா இருக்கும். வெளிய installation எல்லாம் போகனும். நெறய கத்துக்கலாம். அடுத்து? Lines. Lines-ஆ, நீ ITI-யா? இல்ல BE. BE- யா........?அதுல யாரையும் இதுவரைக்கும் போட்டதில்ல. அங்கதான் இருக்கு. ஓரமாக இருந்த அறையை காட்டிவிட்டு, எல்லோரும் காலயில வருவாங்க. அப்புறம் van-ல போய்டுவாங்க. அதப்பத்தி தெரியல. உனக்கு தெரியுமா? அருகில் இருந்தவினிடம் கேட்க்க. ம்ம்ஹும் என பதில் வந்தது. சரி கடைசியா? Transformer... சொல்லிமுடிப்பதற்குள், செம்ம வேலை இருக்கும். இவங்களுக்கே panishment-னா அதுலதான் போடுவாங்க. செம்ம வேலை இருக்கும். ஆனா காசு வராது. அதுக்குள்ள 3.30 PM ஆகிடுச்சு. tea வடை போயிட்டு, கொஞ்சம் நேரத்துல வீட்டுக்கு கெளம்பியாச்சு. முதல் நாளே Goverment office-ல் இருந்தோம் என்பதை உணர, இல்லை உறுதி செய்துகொள்ள முடிந்தது.

காலையில 5 மணிக்கு எழுந்து, கெணத்துல குளிச்சுட்டு, வீட்ல சாப்டுட்டு, மழவந்தாங்கல்  வழியா office போயிட்டு, வரும்போது செஞ்சி வழியா ஊருக்கு திருப்புவேன். ஒரு நாளைக்கு ஒரு ஊரு line maintenance இருக்கும். காலயில 10 மணிக்கு கையெழுத்து போட்டுட்டு, shutdownபன்ன  line feeding transformer முன்னாடி உக்காந்து மொக்கை போட்டுட்டு, 3.30 மணிக்கு கெளம்பி வந்துடுவோம். நடுவுல wireman மேல போய் transformer-அ தொடச்சிட்டு, connection , oil எல்லாம் இருக்கான்னு check பன்னிட்டு வருவார். 30 நிமிஷ வேல. கையெழுத்து நல்லா இருந்தா, office-லயே ஏற்கனவே எழுதி இருக்கிற letter-அ பார்த்து date, ஊரு மட்டும் மாத்தி letter எழுதி, AE-கிட்ட sign வாங்கி file-ல pin பன்ற வேலை இருந்திருக்கும். வெளியலையே பரவா இல்ல.

பரமேஷ் கொடுத்த பணத்துல இருந்து 500 ரூபாய மோத மாசம் செலவுக்கு எடுத்துக்கிட்டேன். மீதி மாமா பையன் fees கட்ட பணம்கேட்டானு 2500 ரூபாய கொடுத்துட்டேன். வேலை தேடும் நேரத்தில், பல நேரம் அவன் தங்கி இருக்கும் college hostel-அ தங்கி இருக்கேன். அதனால அவனுக்கு நான் நண்பனிடம் பணம் வாங்கிட்டு வந்தது தெரியும். நானும் ஒரு வருஷம் முடிஞ்சு banglore போகும்போது வாங்கிக்கலாம்னு கொடுத்துட்டேன்.

முதல் மாசம் staifund வந்தது. 25 ரூபாய் change கொடுத்துட்டு, stamp paper-இல் கையெழத்துப்போட்டுட்டு, 2000 ரூபாய் வாங்கினேன். முதல்ல என்ன வாங்கலாம்? துணிதான் எடுக்கனும். என்னோட தோற்றத்த பார்த்து எவனும் engneering படிச்சவன்னு சொன்னா, நம்பவேமாட்டாங்க. நல்லா dress-அ போட்டாவது கொஞ்சம் நம்பவைப்போம். வீட்டுக்கு போனேன். அப்பாகிட்ட staifund இன்னக்கி கொடுத்தாங்கன்னு சொன்னேன். அப்பா எவ்வளவு கொடுத்தாங்கன்னு கேட்க்க? நான் 1975னு  சொன்னேன். வீட்ல கொஞ்சம் செலவு இருக்கு, உனக்கு செலவுக்கு எடுத்துகிட்டு மீதி கொடுப்பானு கேட்க்க, எனக்கு புரியவில்லை. 500 ரூபாய எடுத்துகிட்டு, மீதிய அப்பாவிடம் கொடுத்தேன். என்னிடம், கேட்பதைவிட அதிகம் பணம் கொடுக்கவேண்டும் என நினைப்பவர். இதுவரைக்கும், ஏழ்மையில் இருந்தும் நான் அதை உணரும்படியாக என்னை வைத்ததில்லை. கேட்கமலேயே தேவை அறிந்து பணம் கொடுப்பார். நான்தான் அப்பாவின் வருமானத்தை மீறி செலவாகிகொண்டிருக்கிறது என தெரிந்து கஞ்சனாக இருப்பேன்.  நான் தவறாக செலவு செய்பவன் எனவும் நினைத்து இருக்கமாட்டார்.


வேலை தேடனும்னு நெனைச்சிட்டு இருந்த எனக்கு வீட்டை பத்தி யோசிக்க மறந்திருந்தேன். நானும் அண்ணனும் BE graduate. தம்பி BTech படிச்சுட்டு இருந்தான். 5 ஏக்கர்ல விவசாயமும் ஒரு சின்ன தோப்பையும் வச்சு ஒருத்தர படிக்க வைக்கறதே கஷ்டம். அம்மாவிடம் வீட்டின் நிலவரம் கேட்டேன். ஆசையாக கட்டிய வீடு(கடைகள்) விற்கப்பட்டது தெரியும். அதோடு மேலும் 3 acre நிலம் விற்கப்பட்டு இருந்தது. அப்பாவின் நேர்மையின் பேரில் கிடைத்த ஏகப்பட்ட கடன். அண்ணன் அவன் செலவுக்கு ஏற்ப ஒரு சின்ன company-ல் வேலை செய்துக்கொண்டிருந்தான். கடன் - வட்டி, நாட்கள் கடக்க கடக்க நம்பிக்கை இழந்து வந்த கடன்காரர்கள், தம்பியின் படிப்பு, வீட்டு செலவு என அனைத்தையும் அப்போதுதான் முழுமையாக அம்மாவிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். அந்த வாரமே மாமாவிடம் 2500 ரூபாய கேட்டு நின்னேன். அவருடைய கஷ்டம் அவரால் அப்போது கொடுக்க முடியவில்லை.

மதியானம் woodland - vegetable பிரியாணியை cut பன்னிட்டு, வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துப்போக ஆரம்பித்தேன். திரும்பி வருவதும் மழவந்தாங்கல்  வழியாக வர ஆரம்பித்தேன்.

பஸ்ஸில் எப்போதும் ஊரு பெயர் சொல்லி ticket எடுப்பேன். பிறகு அமைதியாக, பணத்தை மட்டும் நீட்டினால் போதும், conductor ticket கொடுத்துட்டு மீதியை கொடுத்துடுவார். வீட்டின் முன்னாடியே bus stop. நான் கொஞ்சம் late செஞ்சாலும் எனக்காக கொஞ்சம் bus காத்திருந்தது. பார்வைக்கு என்னவோ, தினமும் காலையில் வேலைக்கு போறவன் மாதிரி கெளம்பினாலும் அங்கு சென்று வெட்டியாக நாளை கடத்திவிட்டுத்தான் வந்தேன்.

சிறுது நாளில் அம்மாவின் கஷ்டத்தைக்கண்டு காலையில் பழைய சாதம் சாப்பிட்டுவிட்டு மதியம் woodlands-vegetable பிரியாணி என மாற்றிக்கொண்டேன். பின் என் செலவை குறைக்க நல்லாப்பாளையம் சென்று சித்தி வீட்டில் தங்கினேன். அங்கிருந்து விழுப்புரத்துக்கு 5 ரூபாய் மட்டும்தான். சாந்தி சித்தி - அவுங்க அம்மா எப்படி வச்சிருக்கும் தெரியுமானு எனக்காக பயந்துக்கொண்டே சமைப்பார்கள். சின்னம்மா வீட்டு சாப்பாடு எந்த அளவிற்கும் குறைந்ததல்ல. மதிய சாப்பாடு கட்டி தருவார்கள். தம்பி கரிகாலனும் எனக்காக நெறைய செய்வான் (தினமும் காலையில் bus ஏத்திவிடுவதிலிருந்து). என்னைவிட பல வயது சிறியவன் என்பதால் கரிகாலனிடம் நிறைய பேசியதில்லை. எனக்காக அவர்கள் செய்வது எனக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது. இருந்தும் சின்னாம்மா, கரிகாலனுக்காக கொஞ்ச வாரம் அங்கிருந்து சென்றுக்கொண்டிருந்தேன்.

ஒரே timing-ல் bus ஏறுவது, வருவது என்பதால், அதே time-க்கு  வரும் ஒரு அழகான பெண்ணை (STD booth-ல் வேலை செய்துக்கொண்டிருந்தாங்க) bus பயணத்தில் பார்த்துக்கொண்டிருப்பேன். அந்த வயதில் ஒரே பெண்ணை அதிகமாக சந்திக்கும்படி இருக்கக்கூடாது என நெனைக்கறேன். என்னுடைய நல்ல நேரம் என்னுடைய கூச்சசுபாவத்தால் நேரில் சென்று பேசியதில்லை.

SS maintenance - சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை. அடுத்து MRT வந்தேன். வெளியில் installation போவோம். apprentice-ஐ அருகில் இருந்து பார்க்க மட்டும் விடுவார்கள். என்ன செய்கிறார்கள் என்பது தெரியாது. திரும்பி வரும்போது, செல்லும் ஊரிலிருந்து, எங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள இடத்தில் இறங்கி அப்படியே வீட்டுக்கு சென்றுவிடுவேன். இதிலிருந்து நல்லாப்பாளையம் போவதைவிட்டு திரும்பவும் கெங்கவரம் போக ஆரம்பித்தேன். என் உடல்வாகு அலைவதர்க்கோ, பொருட்களை தூக்குவதர்க்கோ ஏதுவாக இல்லை என்பதால் unofficial-ஆக accoounts-கு அனுப்பப்பட்டேன்.

அமைதியான ஒரு accounter-இடம் சேர்த்துவிட்டார்கள். அவர் ஒரு பெரிய notebook எடுத்து அதில் உள்ள employee-கு loan கணக்கிடுதலை   சொல்லித்தந்தார். ஒரு நீளமான கோடுபோட்ட pepper-ல்  - வட்டி விகிதத்தை வைத்து, மாதம் எவ்வளவு வட்டி வருகிறது என பார்த்து, அசலுடன் கூட்டி, அதிலிருந்து EMI கழித்து, ஒவ்வொரு மாதத்திற்கும் எழுதி, இப்போதைக்கு எவ்வளவு என பார்க்க வேண்டும். உயர் அதிகாரியின் loan மட்டும் கணக்கு பார்ப்போம். கீழ்நிலை ஊழியகள் வருவார்கள். tea வடை வாங்கி தந்து loan கணக்குப்பார்க்க சொல்வார்கள். பலர் loan முடிந்தும் கட்டிக்கொண்டு இருந்திருப்பார்கள். accounter, தம்பிக்கும் tea வாங்கி கொடுங்கன்னு சொல்வார். வேண்டாம் என்று சொல்ல அரசு ஊழியர்கள் தர்மம் ஒத்துக்கொள்ளாது. எனக்கும் tea வடை செலவு மிச்சமானது. மதிய உணவு அருகில் இருந்த mess-ல் 10 ரூபாயுக்கு ஒரு varity rice-ம் வடையும். main office-ல் accounts department இருந்தது. கூட்ரோட்டில் இருந்து 2 KM இருக்கும் (2 ரூபாய் ticket / share auto charge). நடந்துதான்  போய்வருவேன்.

ஒரு நாளைக்கு 4 loan கணக்கு பார்த்தால் போதும். ஒரு வாரத்தில் bore அடிக்க ஆரம்பித்தது. interview-க்கு prepare பன்னியிருந்த analytical skill-ஐ வைத்து formula derive பன்னினேன். formula மூலம் 5 நிமிஷ வேலை ஆனது. accounter-இடம் சொன்னேன். அவர் அதன் மேல் நம்பிக்கை இல்லாமல், அதை உபயோகிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஏற்க்கனவே போட்டுவைத்திருந்த 4 loan கணக்கை, இந்த formula-வை வைத்துப்போட்டுக்காமித்து இரண்டும் ஒரே answer வருவதை காமித்தேன். நம்ப ஆரம்பித்தார். கடைசியில் நான் derive பன்ன formula கூட்டுவட்டியின் formula. அது ஏற்க்கனவே நம் கணித book-ல் இருந்தது.

வேலை சுலபமானது. வாரத்திற்கு 2 நாள் போவதை நிறுத்திக்கொண்டேன். வாரம் ஒருமுறை MRT office-ல் அந்த வாரத்திற்கு மொத்தமாக கையெழத்து போடப்போவேன். மற்ற நாள் accounts போயிட்டு முடிந்தவரை loan கணக்கை முடித்துவிட்டு வருவேன். accounter-உம் வேலை முடிந்துவிடுவதால் வராத நாட்களைப்பற்றி கேட்பதில்லை.

தம்பிக்கு hostel fees,  செலவுக்கு 1500 ரூபாய் courier-ல் letter-உடன் வைத்து அனுப்ப அப்பா சொல்லியிருந்தார். அனுப்பிவிட்டு சில நாட்களில் தம்பியின் hostel-க்கு  விழுப்புரத்தில் இருந்து phone செய்து தம்பியிடம் கேட்டேன். தம்பி letter மட்டும்தான்  இருந்தது, பணத்தை எடுத்துவிட்டார்கள் என சொன்னான். ஒரு சில நொடிகளில் அந்த 1500 ரூபாயை வைத்து என்ன என்ன பன்னியிருக்கலாம் என வேகமாக ஓடியது. பதில் வராததால் தம்பி தொடர ஆரம்பித்தான். போன முறை அப்பா அனுப்பும்போதே இதுபோல்தான் எடுத்துவிட்டார்கள் அதனால்தான் courier-ல் அனுப்பவேண்டாம் என சொல்லிருந்தேன். எனக்கு தெரியாது. அப்பாவிடம் சொன்னாயா? என அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே கேட்டேன். இல்லை. சொன்னா கஷ்டப்படுவாங்கனு courier-ல அனுப்ப வேண்டாம்னு மட்டும் சொன்னேன் என்றான். இரட்டை நஷ்டம் ஆனதை  எண்ணி மனது பாலமாகியது. தம்பி - நண்பனிடம் வாங்கி கட்டிக்கொள்கிறேன், அப்பாவிடம் இனிமேல் courier-ல் அனுப்பவேண்டம்னு சொல்லு என்றான்.

ஏழ்மை விதியை மீறுவதற்கு விதிவிலக்கல்ல. அதே நேரத்தில் தேவையற்ற இடத்தில் over sentiment இருக்கக்கூடாது. முடிந்துவிட்டதை ஒன்றும் மாற்றமுடியாது என்றாலும் பல நாட்கள் 3000 ரூபாயில் என்ன என்ன வாங்கிருக்கலாம் என bus பயணத்தில் பலமுறை யோசித்திருப்பேன்.

அடுத்து lines. அதிகமாக 11KV/22KV power line-ல் போயிட்டு, line-ல் அடிக்கும் மரம் வெட்டிவிட்டு வருவார்கள். AE போனவுடனே சொல்லிவிட்டார். எதுக்கு உன்னை போட்டாங்கனு தெரியலன்னு. கொஞ்ச நாள் office-லேயே உட்கார்ந்து இருந்தேன். பிறகு எங்கள் ஊர் பக்கம் போகும்போது அவர்களுடன் வண்டியில் போயிட்டு மரம் வெட்டுவதை பார்த்துவிட்டு வீட்டுக்கு போக ஆரம்பித்தேன். அங்கு எல்லோரும் கூடுதலாக ஒரு business வைத்திருந்தார்கள். mutual undrstanding-ல் ஒருவர் மாற்றி ஒருவர் ஆபீசுக்கு வரமாட்டார்கள்.


(TNEB ஊழியர்கள் குறிப்பாக மழைக்காலங்களில் எப்போது வேலை இருந்தாலும், நள்ளிரவில்கூட  வேலைக்கு வருவார்கள். மற்றபடி, மற்ற அரசு ஊழியர்கள் போல, OT-ன் போது அதிகமாக பார்க்கலாம். அரசியல் கூட்டம் நடக்கும்போது அதிகம் பார்க்கலாம். அரசியல் வாதிகளிடம் இருந்து திருட்டு connection-க்கு தனி கவனிப்பு, பிரியாணியுடன் வரும். பண விசயத்தில், ஒன்று கடன் கொடுப்பவராக  (வட்டிக்கு) இருப்பார்கள் அல்லது கடன் வாங்கியவராக இருப்பார்கள்.)


van-ல் போகும்போது ஒரு sex படம் கேட்ட மாதிரி இருக்கும். வீட்டுக்கு wiring வேலை போகும்போது அல்லது line-ல் மரம் வெட்ட போகும்போது பெண்களை correct பன்ன கதை, ஏதும் கிடைக்கவில்லை என்றால் அடுத்தவன் வீட்டில் எத்தனை முறை உறவுகொண்டாய் என கிண்டல் அல்லது அவருக்கு தெரிந்த பெண்ணின் உடலமைப்பு அல்லது உடல் மாற்றத்தைப்பற்றி   பேசிக்கொண்டு போவார்கள்.

போகும் இடங்களில் உள்ள விவசாயிகள், அவர்கள் நிலத்தில் விளையும் காய்கறிகளை இலவசமாக தருவார்கள். அப்போதுதான் fault வந்தால் உடனே பார்ப்பார்கள்.

அப்பா அந்த மாத சம்பளத்தில் தோப்புக்கு வேலி வாங்கிவந்து போட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு என்னுடைய தேவை தெரியாமல் போயிருக்கலாம் என நெனைக்கறேன். நான் துணிகூட வாங்காமல் உங்களிடம் கொடுத்துக்கொண்டிருக்கிறேன், நீங்க இப்படி வேலிவாங்கிவந்து போட்டுக்குனு இருக்கறிங்கலே, நீங்க strict-ஆன ஆளா இருந்தாகூட பரவாயில்ல. வரவங்க எல்லாம் உங்கள கேட்காமலேயே, உங்க முன்னாடியே தோப்புக்கு போய் அவன்  அவனுக்கு வேண்டியது எடுத்துக்கிட்டு போவாங்க, வேலி தேவையான்னு கேட்டேன். இல்லப்பா கண்ணுக்கு தெரியாம போறத தடுக்கலாம் இல்லையானு சொன்னார். அதுவும் இல்லாம வேலி போட்டிருந்தா, குத்தகை பணம் கொஞ்சம் அதிகமா கேட்கலாம். அடுத்த மாசம் துணி எடுக்க போலாம்னு சொன்னார்.

அடுத்து tranformer maintenance. 11KV/230V பழுதான transformer-கள் பழுது பார்பதற்காக வரிசையில் இருக்கும். பல கிலோ எடை கொண்ட அதை எடுத்து, திறந்து, oil-ஐ வெளியேற்றிவிட்டு, coil கட்டி, புது oil போட்டு, check பன்னிட்டு close செய்ய வேண்டும். அந்த oil-ல் வேலை செய்வதற்கு, ஒரு set துணி எடுத்துவந்து அங்கேயே வைத்துவிட்டோம். அங்கிருந்து கொசப்பாளயத்தில் உள்ள பெரியம்மா வீட்டிற்க்கு செல்ல ஆரம்பித்தேன். கொசப்பாளயத்திர்க்கும் 5 ரூபாய்தான். 

வழக்கம்போல அங்கேயும் bus-ல் சூரப்பட்டு பெண் (higher secondary school பெண்) ஒன்றை பார்த்துக்கொண்டிருப்பேன். பெரியம்மாவும் சின்னம்மா போலவே பயங்கரமாக கவனிப்பார்கள். அண்ணன் சுதாகரும் கரிகாலனை போலவே எனக்காக நெறைய செய்வான். என்னைவிட ஒரு வயதுதான் பெரியவன் என்பதால் சுதாகரிடம் நிறைய பேச முடிந்தது. இருவரும் கொல்லையில் உள்ள பாறையில் இரவு ஆறு மணிக்குமேல் உட்க்கார்ந்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்போம். ஒரு நாள் அந்த கொல்லையிலேயே விளைந்த மொசக்காயை  இரவு வெவிச்சு அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்தோம். ஒரு நாள் இரவு பணம்கிழங்கு வெவிச்சு சாப்பிட்டோம். மறக்கமுடியாத சுவையான அனுபவம், என்னுடைய எழுத்துக்களால் சரியாக சொல்லமுடியவில்லை.

அந்த மாத சம்பளத்தை எடுத்துக்கொண்டு ஒரு நாள் பாண்டிச்சேரிக்கு அப்பா துணி எடுக்க அழைத்து சென்றார். துணி எடுத்துக்கொண்டு, அங்கு வேலை செய்துக்கொண்டிருந்த குப்பன் அண்ணன் வீட்டுக்கு போனோம். குப்பன் அண்ணன் ஒரு நாள் தங்கிவிட்டு போகலாம்னு சொன்னார். பீச்சுக்கு போகலாம், படத்துக்கு போகலாம்னு கேட்க்க ஆரம்பித்துவிட்டார். வரும்போது jacki chaan போஸ்டரை பார்த்த ஜாபகம் வந்தது (police story). படம் மட்டும் அண்ணனுக்காக பார்த்துவிட்டு கேளம்பிவிடலாம் என தோன்றியது. நானும் படத்துக்கு போகலாம்னு கூப்பிட்டேன். english படமாக இருந்தாலும் அப்பா எனக்காக வந்தார். படம் துவங்குவதற்கு முன்னதாகவே (love bite) என்ற சீன் படத்தின் trailer போட்டுவிட்டார்கள். அப்பாவையும் அண்ணனையும் அருகில் வைத்துக்கொண்டு, என் தலை கீழே தொங்கிக்கொண்டிருந்தது.  லேசாக trailer-ஐ பார்க்க என் கண்கள், புருவத்தை தொட்டுக்கொண்டு இருந்தது. (சீன் படம் பார்த்தும் ரொம்ப மாதம் ஆயிருந்தது). என் கழுத்தே ஜெயித்துகொண்டிருந்தது. Jackie chaan படம் சிறிது நேரமே ஓடியது, இடைவேளை விட்டுவிட்டார்கள். அப்பா இடைவேளைவிட்டதும் கேளம்பலாம் என சொல்ல, மறுப்பின்றி மூவரும் வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தோம். அண்ணன் மெதுவாக, தம்பி இந்த மாதிரி படம் பாக்கனும்னா முதல்லயே சொல்லவேண்டியதுதான. அப்பாவ ஊருக்கு அனுப்பிட்டு நாளைக்கு போகலாம்னு சொன்னார். அவரிடம் நான் புரிய வைப்பதற்குள் எனக்கு அருகில் அப்பாவை வைத்துக்கொண்டு சங்கடம் ஆகிவிட்டது. அது சீன் படம் ஓட்டும் theatter-ஆக இருந்திருக்ககூடும் என நெனைக்கிறேன்.ஒரு வழியாக வீட்டுக்கு கிளம்புகிறோம் என சொல்லிவிட்டு அப்பாவுடன் வீட்டுக்கு ஊமையாக வந்து சேர்ந்தேன்.

ஒருமுறை அம்மாவிற்கு கண்ணாடி மாற்றுவதற்கு அப்பாவும் அம்மாவும் TNEB office-க்கு எதிரில் இருக்கும் கண் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். நான் ஆயில் படிந்த துணியுடன் வேலை செய்துக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு பதறிப்போய், அப்பா - இதுபோல் இருக்கும் என தெரியாதுப்பா, வந்துடு என்றார். ஒரு மாசம்தான் முடிந்துவிடும், இல்லனா staifund எல்லாம் திரும்ப கொடுக்கணும்னு சொன்னேன். அப்பா பரவாஇல்லை வந்துடு என்றார். நான் ஒரு மாசம் தான, நீங்க கெளம்புங்க என அனுப்ப்பிவைத்தேன்.
 
transformer maintenance-ன்  போது, மதிய உணவருந்திவிட்டு, லேசாக இடிந்த, ஆளில்லாத qatres-ல் ஒரு மணிநேரம் சீட்டுக்கட்டு விளயாடுவோம். பாயிண்ட் வைத்து, பணம் வைத்து அல்ல. நாட்கள் கடந்தன. ஒரு வழியாக உருப்படியாக ஏதும் தெரிந்துகொள்ளாமல் apprentice முடிந்தது. நான் சோம்பேறிதான் என்றாலும் புதிதாக ஏதாவது தெரிந்துகொள்ள முடியும் என்றிருக்கிறவரை சுறுசுறுப்பான வேலைக்காரன் என்ற நம்பிக்கை வந்தது. Goverment வேலையே இனி எதிர்பாக்ககூடாது, நல்ல வேலைக்கு போய்விடவேண்டும் என்ற எண்ணத்தில் experiance certificate ஏதும் வாங்கவில்லை.

கடைசியில் பாண்டியில் எடுத்த ஒரு செட்டு புது துணிமட்டும் apprentice முடிவில் என்னிடம் இருந்தது . மாமாவிடம் சென்று 2500 ரூபாயை கேட்டேன். அவரால் அப்போதும் கொடுக்கமுடியவில்லை. இதற்க்கிடையில் எங்க ஊரு பெண் ஒன்றை அடிக்கடி பார்க்க அவள் மேல் ஒரு ஈர்ப்பு வந்தது. அந்த வயதில் வேலையில்லாமல் இருக்ககூடாது, அப்படி இருந்தாலும் ஒரே பெண்ணை அடிக்கடி பார்க்ககூடாது என நினைக்கிறேன். காதலா இருக்குமோ, எப்படி சொல்வது, என்ன சொல்வாள், எப்படி சம்மதிக்கவைப்பது... என இது போல எண்ணங்களே அதிகம் வந்தது. மற்ற அத்தியாவசிய பிரச்சனைகளை யோசிப்பதைவிட. ஓரிரு மாதத்தில் அண்ணன் வந்து அவன் வேலை செய்த company-லேயே வேலை இருப்பதாக அழைத்து சென்றான். ஒரு set புதிய துணியுடன் சில பழைய துணிகளை polithene cover-ல் எடுத்துக்கொண்டு, கையில் 500 ரூபாயுடன் அண்ணனுடன் banglore சென்றேன்.

நான் இந்த காலங்களில், சில ரூபாய்க்காக பல தூரம் நடந்திருக்கிறேன். பொய் (உண்மையில் எனக்கு புதியது) சொல்லி இருக்கிறேன். பட்டினி இருந்திருக்கிறேன். அதேபோல் என் பாட்டிக்கு (அம்மாவின் அம்மா) வெத்தல பாக்கு வாங்க 5 ரூபாய் கேட்டுகூட கொடுக்காமல் இருந்திருக்கிறேன். அவர்கள் இறந்தபோதுதான் என் கஞ்சத்தனத்தை நினைத்து வெகு நேரம் அழுதுக்கொண்டிருந்தேன். அதுதான் நான் முதல் முறை சாவுக்காக அழுதது. நான் நல்ல நேரத்திற்காக காத்திருந்தேன். என் பாட்டியின் வயது அவரை காத்திருக்கவிடவில்லை. சிலவற்றிர்க்காக சேமிப்பை விளக்கி, கஞ்சனாக இருப்பதை தவிர்த்து சேமிப்பாலனாக மட்டும் மாற முயற்சித்தேன்.

சனி, 4 டிசம்பர், 2010

காத்தி

எங்கம்மா வழக்கத்துக்கு மாறாக காலங்காத்தால எழுப்பி வெளியப்போயிட்டு பல்ல தேச்சிக்குனு சீக்கிரமா குளிக்க வாங்கனு எழுப்பிவிட்டாங்க. நாங்க மூணு பெரும் சேர்ந்து மூணு பக்கமும் மூடி வச்சிருந்த எங்கப்பா கெளம்பிப்போயிருக்க, அரை தூக்கத்தில் ரமேஷும் (அண்ணனும் -பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன்) சீத்தாவும் (தம்பியும் -அவனையும் பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன்) எழுந்தாச்சானு உறுதி செஞ்சிக்குனு பாயிலிருந்து எழுந்தேன். தோப்புக்கு மூவரும் கெளம்பினோம்.லேசான குளுரு. அப்பப்ப மழை பெஞ்சி சேறு, சகதி. தோட்டத்து பக்கமா நாலு எட்டு வச்சா பின்னாடியே தோப்பு. அந்த சின்ன தூரத்திலையும் வெளியப்போய் லேசான மழையில கால்வாசி கரைஞ்சு நாத்தம். காலை கொஞ்சம் மோடா இருக்கற எடத்துல எட்டி எட்டி வச்சுகுனு முடிஞ்ச அளவுக்கு எதிலையும் படாம முன்னேறினோம். எங்க ஊரில் மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து மற்ற இடங்களை பிரித்து காண்பிப்பது இந்த வளையம்தான். நாங்க வழியிலோ ஊரின் ஓரமோ போறதில்ல. ஏன்னா, இதை எல்லாம் தாண்டி, நடக்கறது எவ்வளவு கஷ்டம்னு எங்களுக்கு தெரியும்.  அதுவும் இல்லாம வழிலயே போன கட்டி வந்துடும்னு ஒரு நல்ல மூட நம்பிக்கை. 

வேலி ஓரம் நீலமா வளந்து இருக்கும் பல்லி குச்சிய மூணா ஒடிச்சு, ரமேஷுக்கும் சீத்தாவுக்கும் கொடுத்துட்டு நானும் ஒன்ன வாயில வச்சுக்குனு, தாங்கல் கரையை நோக்கி நடந்தோம். தாங்கல் ஓரமா இருக்குற களத்தின் ஓரமா வெளியப்போயிட்டு , தாங்கலிலேயே கழிவிட்டு, வீட்டுக்கு திரும்பினோம். வீடு, தண்ணி ஊத்தி கழுவி வச்சிருந்தாங்க. எங்கம்மா குளிச்சுட்டு, மஞ்சா எல்லாம் பூசி நல்லா மங்களகரமா இருந்தாங்க. எங்கப்பாவும் குளிச்சுட்டு நல்லா தொவைச்ச வெள்ளை வேட்டி சட்டைய போட்டுட்டு நின்னுட்டு இருந்தாங்க. எங்கம்மா, எவ்வளவு நேரமா? வாங்கனு மூணு பேரையும் குளுப்பாட்டி விட, தொவட்டிக்குனு நல்ல துணியா போட்டுக்குனு சாப்பட ஒக்கந்தோம். இட்லி - இட்லி எப்பவாவது விசேசம் அப்பத்தான் இருக்கும்.

காலை சாப்பாட்ட முடிச்சுட்டு, விளையாட்டு நெனப்புல வேகமா வாசல் வழியா தெருவுக்கு ஓடினேன். ஓடி வந்த வேகத்தில் சானிய மேதிசுட்டு, அய்யனு சொல்லிக்கினே தெருப்பக்கம் போட்டு இருக்குற கருங்கல்ல காலை தொடச்சிக்கிட்டு இருந்தேன்.   ஸ்ரீதர் பூசனி பூவ மேரிச்சிட்டான் எம்மானு ஒரு சத்தம் கேட்டது. சாணியோட பூசணி பூவு நசிஞ்சி கல்லுல பாக்கும்பொதுதான் சானிய மட்டும் மெரிக்கலன்னு தெரியும். மெரிச்ச எடத்துல கோலம் வேற கொஞ்சம் கலைஞ்சு இருந்தது. இன்னக்கி காலயிலயே அடிதான்னு நெனச்சேன். இங்கவா, கண்ண பின்னாடியா வச்சிக்குனு இருக்கற, முன்னாடி பாத்து நடக்க மாட்டியா? உள்ளப்போய்  கால கழுவு. நல்ல நாளா இருக்கணும். அதான் கோவத்த அம்மா அடக்கிட்டாங்க. சானிய மெதிச்ச காலின் பகுதி தரையில படாம கொஞ்சம் நோன்டிக்குனே தோட்டம் பக்கம்போய்  காலை தேச்சு கழிவிட்டு திரும்பினேன், தண்ணிய யாரு ஊத்துவா? - அம்மா கேட்க்க, தண்ணி கொஞ்சம் எடுத்து தரைய கழுவிட்டு, தலைய குனிஞ்சுட்டு,  அம்மா இருக்கற எடம் வரைக்கும் பொறுமையா நடந்து வந்துட்டு, அப்புறம் வேகமா ஓடிவிட்டேன்.

சாயங்காலம் ஆனதும், வீட்ல படைக்கற வேல வேகமா நடந்துக்கொண்டு இருந்தது. வழக்கமான சாப்பாடு கூட இன்னும் கொஞ்சம் அதிகமான உண்ணும் பொருட்கள் செஞ்சிவச்சிருந்தாங்க. ஆனா படைக்கறவரைக்கும் காத்திருந்துதான்  சாப்படனும்னு சொல்லிட்டாங்க. அஞ்சிபெரும் பக்தியா நடுவீட்டில் இருக்கும் போட்டா, காலாண்டர், ஒரு சின்ன செலை சாமிக்கு முன்னாடி பக்தியோட நின்னுட்டு இருந்தோம். அம்மா எல்லாத்தையும் தயாரா வச்சுட்டு, நகர்ந்துட்டாங்க. அப்பா கல்புரத்த கொளுத்தி மூணு சுத்து காமிச்சுட்டு, தேங்கவ கர்புரதுல லேசா காமிச்சுட்டு, வெளிய வந்து வாசல்ல இருக்கும் கல்லுல தேங்கா  தண்ணி கிழ சொட்டாம ஒடைச்சு எடுத்துட்டு வந்து, சாமிக்கு முன்னாடி ஒரு பெரிய கோடு போடற மாதிரி உத்தனார். நாங்களும் அப்பா பின்னாடியே போயிட்டுவந்து, எல்லோரும் கண்ண மூடி வேண்டிக்குட்டு கல்புரம் நிக்கரவரைக்கும் அமைதியா காத்திருந்தோம் . கர்புரம் நின்ன உடனே ஒருமுறை பெருசா குமுட்டுட்டு, திருநீறு எடுத்து நெத்தியில வச்சிகுனு, சாப்பட ஒக்காந்தோம். நடுவுல வச்ச பெரிய இலைய அப்பாவுக்கு வச்சுட்டு, சின்ன சின்ன இலையில எங்களுக்கும் சாப்பாடு போட்டாங்க. எல்லாரும் சாட்டதுக்கு அப்புறம் அப்பாவுடைய இலையில எங்கம்மா சாப்பிட்டுட்டு வந்தாங்க.

அகல் விளக்கு வீட்ல எங்க எங்க வைக்க முடியுமோ அங்க எல்லாம் அகல் விளக்கு வச்சு, தோட்டத்துல வெளஞ்ச பஞ்சால திரி திரிச்சு வச்சு, நல்லஎண்ணை ஊத்தி அம்மாவோட சேர்ந்து வெளக்கு பத்தவைச்சோம். எமா அதுல திரி உள்ள போகுது, இதுல எண்ணை இல்லன்னு வெளக்க அணையாம பத்த வச்சுக்குன்னு இருந்தோம்.

தெருவுல பசங்க காத்தி சுத்த ஆரம்பிச்சு இருந்தாங்க. ஊருல எல்லா தெருவும் நெருப்பு பொறி வட்ட வட்டமா கொட்டிக்குட்டு இருந்தது. காத்தி சுத்தறது ஒரு போட்டியா பண்ணிக்குனு இருந்தாங்க.

ஓரமா நின்னுகுனு பாத்துக்குனு இருந்த என்னை, ஆறுமுக அண்ணன் வந்து அவர்கூட நிக்கவச்சு, ஒடகுடாதுன்னு சொல்லிட்டு, அவர் காலுக்கு ஒட்டி நிக்கவச்சுக்குன்னு , ஒரு கைய தோள் வழியா முன்னாடி விட்டு என் நெஞ்சிக்கு குறுக்கால அழுத்தி புடுச்சுக்குனு, காத்திய இன்னொரு கையாள சுத்துனாரு. காத்தி பொறி என் கண் முன் அறை வட்டம் அடிச்சுட்டு அடிச்சுட்டு போனது. அடுத்து நானு நானுனு மூணு பேரும் சுத்திட்டு, வீட்டு திண்ணையில ஓரமா நின்னு வேடிக்கை பாக்கப்போய்ட்டோம். சிலர் காத்திய சுத்திக்குனே தெரு தெருவாக காமிச்சுக்குனு வந்தாங்க.

ஒரு சில வருசத்துக்கு பிறகு,

காத்திக்கு முன்னாடியே , ஆறுமுக அண்ணனும் எங்கப்பாவும் எப்படி காத்தி செய்யறதுன்னு சொல்லிகொடுத்தாங்க. அடுப்பு கரிய நல்லா இடுச்சி, அறை அடி அகலம், ரெண்டு அடி நீளம் துணியின் நடுவுல நீளத்துக்கும் பொடியாப்போட்டு ரெண்டு பக்கமும் மடிச்சுவிட்டு , அழகா உருட்டி ஒரு சின்ன சணலாலக்  கட்டி, மூணு எருக்கன் குச்சிக்கு நடுவுல வச்சு, எருக்கன் குச்சியின் ரெண்டு முனையையும் நல்லா கட்டி, ஒரு முனியில கை நீட்டுக்கு ஒரு கையிறக்கட்டி  கொடுத்தாங்க.

அடுத்த நாள் காத்தி.
காலயில எழுந்திருக்கறது, மத்தது எல்லாம் அதேதான், குளியல் மட்டும் பம்ப் செட்ல.
சாப்டுட்டு தெரு பக்கம் வெளியில வந்தா, வாசல்ல அதே கோலம், அதே சாணி, அதே பூசணி பூ. கொஞ்சம் ஒதுங்கி ஓடியாச்சு.

அதே போல ராத்திரி படைச்ச உடனே சாட்டுட்டு, அடுப்புல இருந்து கொஞ்சம் நெருப்பு துண்ட காத்தியிலப்போட்டு கனிய வச்சு, நெருப்பு துண்ட கீழ கொட்டிட்டு, வெளிய போயிட்டு லேசா சுத்தி பார்த்தேன். நெருப்பு பொறி லேசா என்னை சுத்தி வட்டமடிக்க ஆரம்பிச்சது. சுத்த சுத்த அதிகமாயிட்டே போக, சந்தோசத்துக்கு நடுவில் பயம் சிறிது எட்டிப்பார்த்தது. நடுவுல நிறுத்த முயற்சித்தேன். காத்தி கயிறுடன் என்னை ஒரு சுத்து சுத்திடுச்சு. நெருப்பு பொறி மேலப்பட்டு நல்ல சட்டியில ஊது வத்தியால ஓட்டைகள் போட்டா மாதிரி ஆயிடுச்சு. முதல் முறை தப்பு வரத்தான செய்யும்.

ஒரு சில வருசத்துக்கு பிறகு,

அடுப்பு கரியவிட மலாட்ட தொலும்புல கரிப்பன்னா நல்லா வரும்னு பக்கத்து வீட்டு குப்பன் சொன்னான். வீட்ல இருந்து மலாட்ட தொலும்பு எடுத்துவந்து மோதல் முறை, கொளுத்தி சாம்பல் ஆக்கிட்டோம்., அடுத்த முறை குப்பனயே கூட்டுகுனு வந்து தொலும்பு எரியாம நெருப்ப கனிய வச்சே கரியாக்கிட்டோம். இந்த முறை காத்தி சுத்தும்போது நல்லா பொறி வந்துச்சு.

ஒரு சில வருசத்துக்கு பிறகு,

பக்கத்து வீட்டு ரவி பனம் புடுக்குல காத்தி செஞ்சா சுப்பரா இருக்கும்னு சொன்னான். ரவி - நீ மட்டும் என்கூட வா, நான் உனக்கு ஓடுச்சுத்தரேன். கெணத்துல குளிக்கபோகும்போது ஆம்பள பன மரம் எங்க இருக்குன்னு பார்த்து, ஏறி, பனம் புடுக்கு ஓடுச்சி எடுத்துட்டு வந்தோம். ஒரு குழிய வெட்டி, அதுல முதல்ல கொஞ்சம் நெருப்பு போட்டு அதுக்கப்புறம் பனம் புடுக்க வச்சு மேல பச்சை மண்ணை வச்சு பூசிட்டு, எல்லாம் கரி ஆனதுக்கப்புறம் எடுத்து அரைச்சு காத்திக்கட்டனோம். ஓனான் குச்சிக்கு பதிலா பனம் மட்ட உபயோகித்தோம். இன்னும் நல்லா வந்துச்சு.

ஒரு சில வருசத்துக்கு பிறகு,

காலயில எழுந்திருக்கறது, மத்தது எல்லாம் அதேதான்.
காலயில சாப்டுட்டு வெளிய வந்தா, நல்லா சானிய தெரு வாசபடியில தெளிச்சு, அழகா கோலம்போட்டு, நடுவுல கையளவு சானிய உருட்டி, பூசணி இலையில வச்சு, அதுக்கு மேல பூசணி பூவ சொருகி வச்சிருந்தாங்க. 

எப்பவும்போல ராத்திரி அகல் விளக்கு வெளிச்சம், காத்திப்  பொறி வலயம் எல்லாம் நல்லா இருந்துச்சு . ஒரு சில வீட்ட தவிர மத்த வீட்ல எல்லாம் ஒத்த பல்புதான் இருக்கும். தெரு விளக்கும் எங்காவுது ஒரு எடத்துலதான் எரியும். அப்படி இருந்த கிராமம், இப்ப இன்னும் எல்லா வீட்லயும் அகல் விளக்கு வெளிச்சம், காத்தி சுத்தற நெருப்பு பொறி வலயம் எல்லாம் பாத்தாதான் தீப ஒளித் திருவிழாவோட அழகு தெரிந்தது.

என் சிறு வயது என்னை இதுவரைக்கும் இப்படி நின்னு இத்திருவிழாவின் அழகை ரசிக்க  நேரம் ஒதுக்கியதில்லை. விளயாட்டு மனப்பான்மையும் போட்டி மனப்பான்மையும் என்னை வெளியிலிருந்து பார்த்து ரசிக்க மறுத்துவிட்டது. சிறு வயதில் வேடிக்கை பார்ப்பது கேவலமான விசயமாகவேறு தெரிந்தது. போட்டியாலனாக இருப்பது மட்டும்தான் பெருமையாக இருந்தது.

சில வருசத்துக்கு பிறகு,

காத்தி சுத்தறது எல்லாம் மறந்துவிட்டார்கள். படைக்கறது. சாப்படறது. TV பாக்கறது. திருவண்ணாமலை தீபத்துக்கு கூட்டம் கூட்டமா போகறதுன்னு மாறியிருந்தார்கள். ஒரு சில அகல் விளக்கு மட்டும் அங்காங்கே பார்க்க முடிந்தது. பூசணி பூவை காணோம். சாணி தெளித்த வாசலை பாக்க முடியல.காத்திய காணோம்.மின்சாரம் இருளை போக்கியதுடன் தீபத்தின் ஒளியை ரசித்த மனிதர்களையும் மாற்றிவிட்டது. தீபத்தை ஓரிடத்தில் வைத்து  அங்கு குவிய ஆரம்பித்துவிட்டர்கள்.

நெருப்பு, நீர், காற்று, நிலம், ஆகாயம், ஒளி, ஒலி, .... என அனைத்தையும் தெய்வமாக்கி பாதுகாத்தவர்கள், ஒவ்வொன்றுக்கும் திருவிழா கொண்டாடி நன்றி தெரிவித்தவர்கள், தூரம் நின்று ரசித்தவர்கள் நம் முன்னோர்கள்.

அறிவியலின் வளர்ச்சி, முன்னோர்களின் நல்ல நம்பிக்கைகளை மூட நம்பிக்கையாக மாற்றிக்கொண்டு வருகிறது. ஆனால் இக்காலதிர்க்கேற்ற சரியான மாற்று முறையை கொடுக்காமல் - உண்மையான ரசனையை கெடுத்து, விளம்பரமாக்கி, வியாபாரமாக்கி, இயற்கையை பாதுகாக்க முடியாமல் தவிக்கிறது.

சனி, 23 அக்டோபர், 2010

குளியல்

FYI: இது என்னுடைய வாழ்க்கையின் பதிவே தவிர மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இதில் ஒன்றும் இல்லை. மாற்றங்கள் நிறைந்த என் வாழ்வில் என்னுடைய தினசரி குளியல்  முறையிலும்  மாற்றம் இருந்தது. அதை ஒரு பதிவாக இங்கு செய்துள்ளேன்.

என் தாத்தாவிர்க்கு ரெண்டு ஆண் வாரிசு என்பதால், எங்கள் வீட்டின் அமைப்பு - நீளமான ஓட்டு வீட்டை நடுவில் ஒரு பாதை போட்டு இரண்டாக பிரித்து வைத்திருப்பார்கள். பின்னால் கொஞ்சம் தாழ்வாரம் விட்டு மதில் சுவர் வைத்து முடித்திருப்பார்கள். இந்த தாழ்வாரத்தின் ஒரு பாதிதான் எங்களின் திறந்தவெளி குளியல் பகுதி. 

குழந்தையில் அனைவரையும் போல் என்னுடைய அழுகைக்கு நடுவில் குளியலுடன் என் உருவத்தை ஒழுங்குபடுத்த முயர்ச்சிப்பார்கள். சிறிது வளர்ந்ததும், எங்கள் மூவரையும் குளுப்பாட்டிவிடுவது என் அம்மாவிற்கு காலையில் கூடுதல் வேலையாக ஆனது. எனக்கு குளிப்பது என்பது அதைவிட பெரிய வேலையாக தோன்றும்.

தாழ்வாரத்தில் எங்களை ஒவ்வொருவராக எங்கள் அம்மா குளிப்பாட்டிவிடுவார்கள். எங்க அண்ணன் கொஞ்சம்
perfect-ஆன ஆள். முதலில் குளிச்சிடுவான். நான் எப்படியாவது ஏமாத்தி தம்பிய தள்ளிவிட்டுட்டு கடைசியில் செல்வேன். என் அம்மா ஒவ்வொருத்தராக குளுப்பாட்டி 'போய் துவட்டிக்கோ-னு' அனுப்பிவிட்டுட்டு அடுத்த ஆளை இழுத்து தண்ணீர் ஊற்றி உடம்பை தேய்த்து குளுப்பாட்டிவிட ஆரம்பிப்பார்கள். கேரகமாட்டம் சுத்த வேண்டியது, எவ்வளவு அழுக்கு பாரு. இனிமே மண்ணுல எங்காவது ஆடுங்க அப்புறம் சொல்றேன் -னு திட்டிக்கொண்டே குளுப்பாட்டி விடுவாங்க. புடுச்சி பச்சை தண்ணிய ஊத்தும்போதே ஜில்லுனு இருக்கும், அம்மா உடம்பை தேய்க்கறது அதுக்குமேல இருக்கும். வலிக்கறமாதிரி, இஷ்-னு ஒரு சத்தம் வந்துச்சினா 'இனிமேல் வெளியில விளையாடாம இருப்பியா?-னு  அவுங்க சொல்றது, விளையாட போனதுக்குத்தான் இப்ப பண்றாங்கனு அந்த வயசுலயே புரியும். அதுக்காகவே வலிய வெளில காட்டிக்காம எப்ப விடுவாங்கனு எதிர்பார்த்துட்டு இருப்பேன். விட்டவுடனே, தம்பி துவட்டிட்டு வச்ச துண்டை வாங்கி உடம்ப துவட்டிட்டு போய்டுவேன்.

தலைக்கு புலி மார்க் சீகக்காய்தான் போட்டு தேய்ப்பாங்க, எப்போதாவது ஒரு முறை என்பதால் தலை தேய்ந்துவிடும் அளவுக்கு தேய்ப்பாங்க. அதிகமா, சீக்காயும் யாருடைய சாவுக்காவதுப்போயிட்டு வந்து தலைக்கு குளிக்கரதுக்காக வாங்கியிருப்பாங்க.

பள்ளிகூடம்  சேர்ந்ததற்கு அப்புறம் கூட படிக்கறவங்களோட சேர்ந்து மோட்டார் பைப்ல  குளிக்க ஆரம்பிச்சோம். தண்ணி மோட்டாரல வேகமா ஊத்தணும். இல்லனா ஒருத்தன் பைப்ப கொஞ்சம் மூடி வேகமா அடிக்கச்சொல்லி அதுக்கு முன்னாடிப்போய் நெஞ்ச நிமித்தி காமிக்கறது, முதுக காமிக்கறது, தலைய காமிக்கறது,... னு போய்க்கிட்டே இருக்கும். எவ்வளவு நேரம் தொடந்து நிக்கறதுன்னு போட்டியா  இருக்கும். டேய் பைப்ப மூடாத, ப்லாஞ்சில  தண்ணி ஒழுவுதுன்னு மொட்டோர்காரன் திட்டுவான். மோட்டோரல குளிக்க போனதிலிருந்து நண்டு வலை மண்ணு இல்லனா மீந்த மலர் சோப்பு தான் எங்களுடைய சீக்காய். 

ஹை ஸ்கூல் பசங்க வருவானுங்க, கெனத்து கரையின் நுனியில் நின்னு தண்ணி மட்டத்த பாத்துட்டு  மோட்டர் இறைக்குது வேற கேனறு போலாம்னு கேளம்பிடுவானுங்க. பாத்து குளிங்கடா கெணத்து  பக்கம் போகக்கூடாதுனு வேற மெரட்டிட்டு போவானுங்க.

ஐந்தாம் வகுப்பு முழு ஆண்டு லீவுல நீச்சல் கத்துக்க ஆறுமுகன் அண்ணன்கூட எங்க அப்பா எங்க மூணு பேரையும் அனுப்பிவைச்சாங்க. நாங்க மூணு பெரும் ஆறுமுக அண்ணனும் மிலிட்டரிகாரமூட்டு கேனறுக்கு நடக்க ஆரம்பிச்சோம். ஊரிலிருந்து கொஞ்சம் தூரம் கழனியில நடந்தது போனா அந்த கேனறு வந்துவிடும். போகும்போது, நான் பசங்க நீச்சல் அடிக்கரத பாத்து இருக்கிறேன். சும்மா கைய கால ஆட்டிட்டு நீச்சல் அடிப்பானுங்க, கஷ்ட்டம்லாம் இல்ல. கொஞ்சம் கத்துக்குணா போதும் மேல இருந்து குதிக்கலாம். சொரவானம், பல்டி எல்லாம் போடலாம். என்னனா? ஆறுமுக அண்ணன், ஊம்னு மட்டும் சொல்லிட்டு அமைதியா வந்துக்குனு இருந்தார். மூன்று பேருக்கு எப்படி நீச்சல் சொல்லிக்கொடுப்பதுனு யோசனையில்  வந்திருப்பார்னு நெனைக்கிறேன். காத்திலேயே கை காலை ஆட்டி நீச்சல் அடித்துக்கொண்டு கெனத்துக்குப்போய் சேர்ந்தோம். 

சூராக்கரையில் இடுப்பளவு தண்ணி  இருந்தது ,அண்ணன் கிணற்றுக்குள் இறங்கி சூராக்கரையில் நின்றுக்கொண்டார் நாங்களும் துணியை அவிழ்த்து வச்சிட்டு மேல் கரையில் நின்றுக்கொண்டிருந்தோம்.  மொத நாளே, நான் சொல்ல சொல்ல மேல இருந்து ஒவ்வொருத்தனா குதிங்க என்றார் . எப்படி நீச்சல் அடிப்பது? என்று பேசிக்கொண்டு வந்தது எல்லாம் ஒரு நொடியில் ஓடி மறைந்து, குதிச்சு உள்ள போய்ட்டா? இவ்வளவு தூரத்திலேருந்து குதிக்கறோம், அண்ணன் புடிக்கரதுக்குள்ள அவ்வளவு ஆழமாச்சி உள்ள போய்டுவோமோ? தண்ணிவேற ஜில்லுனு இருக்கும், ... என கேள்விகள் பலமுறை வேற வேற மாதிரி வந்து போனது. கால்கள் பயந்து கிணத்தின் கரையில இருந்து கொஞ்சம் தள்ளி நின்றது. அண்ணன் - பயப்படாதிங்க ஒருத்தொருதனா குதிங்க (அழுத்தமாக ) எவனுமே குதிக்க வர மாட்டேங்குறான், இவரு ஒருத்தொருதனா குதிங்கனு சொல்றாரு? ஸ்ரீதர், நீ குதி - என்றார்.வீட்லயே கடைசியா தான் நான் குளிப்பேன், நம்பள ஏன் முதல்ல குதிக்க சொல்றாரு? பயத்தில், மனசுல கேள்விகள் வேகமாக ஓடிக்கொண்டே இருக்க (சில கேள்விகள் பலமுறை).  பயம் அண்ணனின் பேச்சை கேக்க மறுத்தாலும் அம்மா குளிப்பாட்டி விடுவது, நீச்சல் தெரிஞ்சவங்க கெணத்துல போடற ஆட்டம், நீச்சல் தெரியாததால நண்பர்கள் கூட்டத்திலிருந்து பல நேரங்களில் ஒதுக்கப்பட்டது எல்லாம் சேர்ந்து என்னை கெணத்துக்குள் தள்ளியது.

ஒரு வழியாக கேனற்றில் குதித்தேன். கேனற்றில் குதித்த சில நொடிகளில் தண்ணி மட்டத்துக்கு மேல வந்திருந்தேன். புதிதாக சுவாசத்தை காண்பதை போல் என் மூக்கும் வாயும்  வேகமாக சுவசித்துக்கொண்டிருந்தது. அதுல முக்காவாசி, காத்துக்கு பதிலாக தண்ணி வாயிலும் மூக்கிலும் போனது. கை கால்கள் உதைத்துக்கொண்டு இருந்தன.  பயம் கண்ணு ரெண்டையும் பிதுக்கியது. சில நொடிகள் தண்ணிக்கு மேல இருந்திருப்பேன். என் உடல் தண்ணியுள்ள போக ஆரம்பித்தது  சூராக்கரையில் இருந்த அண்ணன் எட்டி என் கையை பிடித்து இழுத்து படிக்கட்டில் ஒக்கார வைத்தார். படிக்கட்டில் ஒக்காந்து கக்கி கக்கி குடித்த தண்ணியை கொஞ்சம் வெளியில் துப்பிக்கொண்டே வெறும் காற்றை மட்டும் வேகமாக சுவாசித்துக்கொண்டிருந்தேன்.

அடுத்து எங்க அண்ணன். ரமேஷ் நீ குதி என்று அண்ணன் சொல்ல, அதே தயக்கத்துடன் ஒரு கையை சூராக்கரையில் இருக்கும் அண்ணனை நீட்டி தொட்டுக்கொண்டே தண்ணீயில குதித்தான்.  அவனையும் படியில் அமர வைத்துவிட்டு, கரை ஓரம் குதிக்காத, நடுவுல குதிக்கனும்னு சொல்லிக்கொண்டே ஆறுமுக அண்ணன் கெணத்துக்கு நடுவே நீச்சல் அடித்துக்கொண்டு சென்றார்.  அவர் நீச்சல் அடிப்பதை பார்த்ததும், ஈஸியா தான இருக்குது ஏன் முடிய மாட்டேங்குது என தோன்றியது. சீத்தா நீ குதி. இப்ப  தம்பியும் குதித்தான். மூணு பேருக்கும் புதுசு என்பதால் அண்ணனும் தம்பியும் தண்ணீ  குடித்துவிட்டே கரை ஏறினர்.   

அதே விடுமுறையில் வந்த என் மாமா பசங்க ராஜா & செந்தில் எங்ககூட நீச்சல் பழக வந்தாங்க
. அவர்களுக்கும் அதே ஆரம்பம். ராஜா தைரியமானவன், குதிக்க சொன்னவுடனே குதித்துவிட்டான். மேலே வராமலேயே உள்ளே சென்றுவிட்டான். அண்ணன் உள்ளே முழுகி அண்ணா கயிறை பிடித்து இழுத்துவர கயிறு அறுந்து திரும்ப உள்ளே சென்ற அவன் தலை முடியை பிடித்து மேலே தூக்கிவந்து போட்டார். அதன் பிறகு அவனை நீச்சல் பழகும்வரை குதிக்க சொன்னதே இல்லை. எங்களுக்கு நாம்ப எப்படி மேல வந்தோம்னு சந்தேகமாகவே இருந்தது.

அடுத்தக்கட்டமாக ஆறுமுக அண்ணன் இரு கைகளை தண்ணி மட்டத்தில் நீட்டிக்கொண்டு, ஒவ்வொருவரா  கையின் மேல் படுத்துக்கொண்டு நீச்சல் அடிக்க செய்தார் . அண்ணன் கொஞ்சம் கையை லூஸ்விட்டு பார்ப்பார். தடுமாற ஆரம்பித்தவுடன் தூக்கிக்கொள்வார். கையில் இருக்கும்வரை நீச்சல் கத்துக்கனமாதிரி இருக்கும். விடும்போதுதான் இன்னும் பழகனும்னு தெரியும். அடுத்தக்கட்டமாக கரையிலிருந்து கொஞ்சம் உள்ளே அனுப்புவார், திணறும்போது படியில் தூக்கிக்கொண்டுவந்து போட்டுவிடுவார். சிறிது சிறிதாக பழகி சூராக்  கரையின் ஒரு பக்கத்தில் இருந்து மறு முனைக்குப்போக பழகிவிட்டோம்.

நீச்சல் பழகியானது.
ஆறுமுக அண்ணனை விட்டுட்டு நாங்கள் மட்டும் கிணத்துக்கு செல்ல ஆரம்பித்தோம். கரண்ட் கொட்டாவிலுருந்து குதிப்பது, பக்கத்துல இருக்கிற மரத்திலிருந்து  குதிப்பது, சொராவனம் அடிப்பது, பல்டி அடிப்பது, தன்னிக்குள்ளவே செல்வது, ஆழமாக போவது, நீச்சல் அடிக்காமலே மிதப்பது,... என எல்லாத்தியும் பண்ணி பார்த்தானது. அதுக்கப்புறம் கெணத்துல விளையாட்டு. விடுமுறை நாட்களில் கொரைஞ்சது 2 மணி நேரமாவது விளையாடுவோம். கண்கள் சிவந்து புகை போவதுபோல் இருக்கும். இதற்கிடையில் குளியலும் மறைந்திருந்தது .

கெனத்துக்கு போனதும், முதலில் நீ குதி, நீ குதி என குளிருக்கு பயந்து கொண்டு மெதுவாக கெணத்துக்குள் தள்ளி விடுவது போல் தள்ளி விட்டுக்கொண்டு இருப்போம். தள்ளப்பட்டவனும் கரையின் நுனிக்கு சென்று திரும்பி ஏன் நீ குதியான்னு சொல்லிக்கொண்டே இவனை தள்ளுவான். எவனாவது தைரியமாக குதித்தவுடன், இல்லனா அடுத்தவனால் தள்ளிவிடப்பட்டவுடன், அவன் மத்தவங்களையும் தள்ளிவிட்டு, தண்ணிரை மேல அடிச்சு எல்லோரும் களத்துல ஏறங்கிடுவோம்.  திரும்ப திரும்ப குதிச்சு குதிச்சு  கெணத்துல அலை அடிக்க ஆரம்பிச்சுடும். சந்துகளில் உள்ள தண்ணி பாம்பு வெளியேவந்தால் அது மேலேயே குதிச்சு அது மயக்கமானவுடன் கொன்னுட்டு பிறகு விளையாட்டை ஆரம்பிப்போம்

 கிணத்துக்கு போகும் போதே - பாம்பு இருக்கும் கெனரா பாருடி, இன்னக்கி ஒன்னையாவது சாவடிக்கனும்னு ஒருவன் சொல்லுவான். அய்யே அந்த கெணறு வேணாம் சீத்தா மேலயே பாத்துட்டு வந்து அவுட் அடிசுடுவான்னு ஒருவன் சொல்லுவான். பரவாஇல்ல போய் கலக்கிவிட்டுக்க்கலாம்னு  ஒருவன் சொல்லுவான். கடைசியா பாம்பு இல்லனா ஒரு தவக்கலையாவது கொன்னுட்டு, அழுக்கான தண்ணி இல்லனா சேத்த கலக்கிவிட்டு எங்க விளையாட்ட ஆரம்பிப்போம். இதுபோல கெணத்து தண்ணிய கேடுத்துவிட்டுட்டு விளையாடின கெனத்துக்காரன்வேற திட்டுவான் இல்லனா துணிய தூக்கிட்டுப்போய்டுவான். ஒரு முறை குளிக்காம இருப்பதற்காக கெணத்து படியில போடப்பட்டிருந்த முல்லை கொளுத்தி இருக்கிறோம். சில முறை பாலிதின் கவர்ல கல்லைக்கட்டி  புட் வால்வுல கட்டிவிட்டு வந்திருக்கிறோம்.

பொம்பளைங்க துணி தொவச்சிட்டு இருந்தா, ஒருத்தன அனுப்பி எப்ப  முடிப்பாங்கனு கேட்கச்சொல்வோம். அக்கா எப்ப முடிப்பிங்க? இர்ரா கொஞ்ச நேரம். துணிய அலசனும். அலசிட்டு குளிச்சிட்டு எழுந்துடறேன். அவன் - இன்னும் கொஞ்சம் நேரந்தானாம். துணி தொவச்சு ஒரே சோப்பா ஆக்கி வச்சிருக்காங்க. அங்கதான் மோட்டார் எரைக்குதில்ல? அங்க போய் தொவைக்கலாம் இல்ல? போலம்பிக்கொண்டே கொஞ்சம் நேரம் பாப்போம்னு மத்தவங்ககிட்ட சொல்வான். யாருடா அது? மோட்டுதெரு அக்காடா? கொஞ்சம் நேரத்தில், இந்த முறை நீ கேட்டுட்டுவாடா அது எங்க தெரு அக்காடா. நீயே போய் கேட்டுட்டு வா. அவனே போய் - அக்கா முடிஞ்சுதா? இர்ரா கொஞ்சம் நேரத்துல முடிச்சுடறேன். - கொஞ்சம் எரிச்சலாக. இன்னும் கொஞ்ச துணி தானாண்டா .... ஏமாற்ற குரலில் எங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே. இந்த பொம்பளைங்க இப்படித்தான் அன்னக்குண்டான் நெறைய துணி எடுத்துட்டுவந்து  ஒரு மணிநேரத்துக்கு தொவைச்சிட்டு இருப்பாங்க. கொஞ்ச நேரத்தில் அவுங்க குளிச்சிட்டு வந்தாலும் வராட்டாலும் நாங்கப்போய்  மேல இருந்து குதிக்க ஆரம்பிச்சிடுவோம். ஐய பசங்களா இதுவ, எமனுங்க எப்படி குதிக்குது பாருங்க. படிக்கட்டு பக்கம் வந்திங்க அடிதான். திட்டிகிட்டே அவுங்க வேலைய வேகமா பாத்துட்டு கெளம்பிடுவாங்க. நாங்களும் அந்த பக்கமா போவதிங்கடானு சொல்லிக்கிட்டு இங்க விளையாட்ட ஆரம்பிச்சிடுவோம்.

கிணத்துக்குப்போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம், வீட்ல குளிக்கரத கேவலமா நெனைப்போம். மொட்டார்லனா கொஞ்சம் பரவாஇல்ல, ஒதுக்கலாம். வீடு, மோட்டார், கேனருனு போயிட்டேருந்த என்னுடைய குளியல் ...

என் ஒன்பதாம் வகுப்புக்காக  திண்டிவனம் St' Ann's hostel லில் நானும் எங்க தம்பியும் (
ஆறாவது) சேர்க்கப்பட்டோம். மொத மாடியில் உள்ள ஒரு பெரிய வரண்டாவில் வரிசையாக படுத்துக்கொண்டிருப்போம். 5 :30 மணிக்கு காலையில வார்டன் வந்து கதவ குச்சியால் தட்டுவான். அந்த சத்ததிலேயே எழுந்து வாயில பரேஷ் வச்சுக்கிட்டு மக்கு, சோப்பு (Lifebouy சோப்பு-  பைண்டிங் நுலால ரெண்டா வெட்டி தம்பிக்கு பாதி எனக்கு பாதி) ஜட்டியையும் துக்கிட்டு கீழ போகணும். அங்கேயே படுத்திருப்பவர்களுக்கு அடி விழுந்துகொண்டேப்போகும். 5 நிமிஷத்துல பல்ல வெலக்கிட்டு, கிரௌன்ட்ல லைன் நின்னு exercise பண்ணனும். அதுக்கப்புறம் க்ரௌண்ட ரவுண்டு அடிக்கணும். வார்டன் நல்ல மூடுல இருந்தா உடனே குளிக்க அனுப்பிடுவாரு. இல்லனா வட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சின்னதாகிட்டேப்  போகும். நடுவுல இருக்கற வார்டன் கோலால ஒரு சுத்து சுத்துவாரு, திரும்ப வட்டம் பெரிசாகிடும். ஒரு நேரத்துல்ல ரெண்டு பேரும் ஒரு ஒப்பந்தத்துக்குவந்து குளிக்கப்போவோம். வரிசையாக இருக்கும் தொட்டியில் அவுங்க அவுங்க வகுப்புக்கான தொட்டியில் குளிச்சிட்டு 5 நிமிஷதுல்ல கேளம்பிடனும்.

என்னதான் பேஸ்ட், பிரஷ், சோப்பு, ஜட்டி, மக்குன்னு புதுசு புதுசா இந்த 10 நிமிஷ வேலைக்கு உபயோகிச்சாலும் கெணத்துல குளிச்சமாதிரி  வராது. குளிக்கற தொட்டியிலதான்  சாப்பாட்டு தட்டையும் கழுவுவோம். ஞாயித்து கிழமதான் தொட்டிய கழுவுவோம் எனபதால் சோறு தொட்டியில பிரிஞ்சு மெதங்கிட்டு இருக்கும். மோட்டாரையும் ராத்திரிக்கேப்போட்டு  தண்ணி நிரப்பி வச்சுடுவாங்க. அஞ்சு மணிக்கு நல்ல குளிரா வேற இருக்கும். . குளிக்கும்போது மோட்டார் போட்டாலும்12th அண்ணன்க தொட்டியிலதான் புது தண்ணி ஊத்தும். பல குளிர் காலங்கள்ல ஜட்டிய மட்டும் நெனச்சிட்டு வார்டன் சேச்கிங்ல இருந்து தப்பிச்சு போய்டுவேன். அங்க நெறைய பேருக்கு செரங்கே வந்துடும். குளிக்காம எமாத்தரதால வருதா, அந்த தண்ணியில குளிச்சதால வருதானே சொல்ல முடியாது. சாயுங்காலம் விளையாடிட்டு இன்னொரு முறை வேற குளிப்போம். ஊருல நல்ல தண்ணிய கலக்கி விட்டுட்டு குளிச்சிருந்தாலும், இந்த தண்ணிய பாத்தாலுமே குளிக்க தோனாது.
இதனால ஊருக்குப்போனால், கெணத்துல படிக்கு கீழ தண்ணி இருந்தாலும் எப்படியாவது உள்ள இறங்கி குளிப்போம். 

நானும் 12th படிச்சு கொஞ்சம் நல்ல தண்ணியிலையும் hostel ல குளிச்சு, Amrita institute, கோயம்புத்தூர் collage hostel-அ சேர்ந்தேன். திறந்தவேளியிலேயே  குளிச்சுட்டு இருந்த என் குளியல் முழுவதுமாக ஒரு சிறிய அறைக்குள் அடைத்துவிட்டார்கள். shool hostel-ல காலயில எழுப்பி கொடும பண்ணி  குளிக்க வச்சதால, காலையில் குளியல் புடிக்காம போனது.  8 மணிக்கு மேலஎழுந்திருக்கறது. மூஞ்ச மட்டும் கழுவிட்டு collage போய்டுவேன். ரெண்டு நாளைக்கு ஒருமுறை எப்பவாவது குளிச்சுடுவேன். அதிகமா நைட்லதான் இருக்கும். பசங்க கிண்டல் பண்ணாலும் கண்டுக்கமாட்டேன். கொஞ்சம் சுத்தமா வாடான்னு அட்வைஸ் பண்ணாலும், நான் ஒன்னும் அழகானவனும் இல்ல குளிக்காததால ஒன்னும் பெருசா மாற்றம் தெரியாதுன்னு விட்டுடுவேன். ஒருமுறை என் நண்பன் குளிக்கும்போது எட்டி பார்த்துவிட்டு , என்னடா பாத்ரூம்ல ஜட்டி போட்டுட்டு குளிச்சிட்டு இருக்கனு கேட்க்க. பழகிடுச்சினு சொல்லிட்டு வந்தவுடன், அடுத்த முறை ஜட்டி போடாம குளிச்சு பார்க்கனும்னு தோனுச்சு. ஜட்டி போடாம குளிக்க முயற்சித்து முயற்சித்து என் energyதான் waste-அ போச்சு.

ஒரு முறை எட்டிமடையில நைட் பரோட்டா சாப்ட்டுட்டு, முடி வெட்டிட்டு வந்தா, VCD-ல படம் போட்டுட்டாங்க. சினிமா பிரியன் என்பதால் ரெண்டு படமும் முடிய நைட் ரெண்டு மணி ஆகிடுச்சு. நண்பன் என்னடா குளிக்கமலே தூங்கிடுவியானு நக்கலாக கேட்டான். முடிவேட்டிட்டு எல்லாம் குளிக்காம இருக்கமாட்டேன் -னு சொல்லிட்டு பாத்ரூம் போனேன். குளிரா இருந்துச்சு, திரும்பி போனா நல்லா இருக்காது, குளிசிடுவோம்னு குளிக்க ஆயுத்தமானேன் . முகத்துக்கு சோப்பு போட்டுட்டு கண்ணை தெறந்தா ஒன்னுமே தெரியல. ஒரு செகண்ட்ல கண்ணு தெரியலியே என்ன பண்றதுன்னு பயத்தில் பல கேள்விகள் வேகமா ஓடிக்கொண்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமாக என் கண்ணு இருட்டுக்கு பழக்கமனாதும், திரும்ப கண் கிடைத்த சந்தோசம். சில நொடிகளில் கரண்ட்-ம்  வந்தது.

college முடிஞ்சு ராயப்பேட்டை mansion-இல் தங்கி வேலை தேடும்போது , காலையில் ஒரு பக்கெட் தண்ணீர் வரும்.
அதை புடிச்சு வச்சு அதிலயே எல்லாத்தையும் பண்ணிக்கணும். அதுக்கப்புறம் அவசரம்னாகூட puplic toilet-அ தேடித்தான் ஓடனும்.

கொஞ்ச மாசத்திலேயே நண்பர்களுடன் ரூம்
/ flat-னு தங்கமறுபடியும், பாத்ரூம், புதுசா shower,....

கடல்ல குளிக்கணும் என்பதற்காக திருவான்மையூர் பீச்சில் ஒரு முறை அழுக்கு அலைகளுக்கு இடையில் குளித்துவிட்டு, அந்த அழுக்கை நண்பனின் பாத்ரூமில் கழுவிவிட்டோம்.
கல்லாறு அழுக்கு தண்ணீரில் நண்பர்களுடன் ஒருமுறை, மூங்கில் துறைப்பட்டு ஆற்றில் எரா பிடித்துக்கொண்டு கொஞ்ச நாள், திருக்கோவிலூர் ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டு சில நாட்கள் குளித்திருக்கிறேன்.

இப்பவும் என்னுடைய முதல் option கிணறு, அப்புறம் மோட்டார், அப்புறந்தான் பாத்ரூம்....
ஊருக்கு போனா பக்கத்து வீட்டு சின்ன பசங்களோட கிணற்றுக்கு குளிக்கபோவேன்.  பசங்க கொஞ்சம் வித்தியாசம் வித்தியாசமாக குதிச்சு காமிப்பாங்க, நீச்சல் அடிச்சு காமிப்பாங்க, தண்ணிரில் கல்லை போட்டுட்டு கொஞ்சம் நேரம் கழித்து எடுத்துட்டு வந்து காமிப்பாங்க. கொஞ்சம் பெரியவனா இருக்கிறவன், டாய் அண்ணன் குளிக்கட்டும் படிக்கட்டாண்ட போகாத / படிக்கட்டில் இருக்கும் அண்ணன் துணிய ஈரமாக்கிடாத,... னு மேரட்டிகிட்டே இருப்பான். டாய் சின்ன பசங்க அப்படிதான் இருப்பாங்க மேரட்டாதனு சொன்னா. இல்லனா-னு ஆரம்பிச்சு எதாச்சு சொல்வான். அது எல்லாம் ஒன்னும் ஆகிடாது அவங்க விளையாடட்டும், மிரட்டாத.

எப்போதாவது பொம்பளைங்க குளிச்சிட்டு இருந்தாங்கனா, டாய் பொம்பள துணி மேல இருக்கு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவோம். இருங்கனா எவ்வளவு நேரம் ஆகும்னு கேட்டுட்டுவரேன். அக்கா எவ்வளவு நேரம் அகும்க்கா? ஏன்டா வேற கெணத்துல எங்கயாவது போய் குளிங்களான். எங்ககிட்ட வந்து, அணா இவங்க எல்லாம் அவ்வளவு சீக்கிரத்துல எழுந்திருக்க மாட்டங்க. அதுக்கெல்லாம் ஒரு டெக்னிக் இருக்கு, நீங்க கொஞ்ச நேரம் இங்கயே வெயிட் பண்ணுங்க. டாய் வாங்கடா. என்னோடு வந்த சின்ன பசங்க எல்லோரும் துணிய அவுத்து போட்டுட்டு கிணற்றை நோக்கி போனார்கள். ஒரே வித்தியாசம் இப்போது,  கொஞ்சம் பசங்க ஜட்டி போட்டு இருந்தாங்க.

புதன், 2 ஜூன், 2010

சமூகம் - I

ஒவ்வொரு உயிரினமும் தனித் தனியாக வாழ்ந்துக்கொண்டு இருந்த காலம் அது. பழம், செடி, கொடிகளே அதிகமான உயிரினங்களின் உணவாக இருந்தது. பெரும்பாலான நேரங்களில் இந்த உணவுக்கு பஞ்சம் இருந்ததில்லை என்பதால் உணவுக்கான சண்டை உயிரினங்களிடையே உருவாகவில்லை. மற்ற உயிரினத்தைப் பார்க்கும்போது உருவிதமான பயம் மட்டும் இருந்தது. அதனால் சில சந்தர்ப்பங்களில் சண்டை உருவானது. அதிக நேரங்களில் ஒரு விதமான பயம் கலந்த எதிர்ப்புடன் இரு உயிரினங்களும் விலகிச்சென்றுவிடும்.

உடலுறவுக்கூட இதுபோல் எதேச்சையான சண்டையில் ஆரம்பித்து உடலுறவுடன் முடியும். அனால் அது எந்த விதமான உணர்வு பரிமாற்றம் என்று இருவருக்கும் விளங்காமலேயே பிரிந்துவிடும். பெரும்பாலும் ஒரே வகையான உயிரினங்களால் மட்டுமே இந்த உணர்வை பகிர்ந்துக்கொள்ள முடிந்தது. அதன் பிறகு அந்த உயிரினங்கள் உறவுகொண்ட உயிரினத்தைப் பார்க்க விரும்புவதுமில்லை. இரண்டும் வெவ்வேறு திசையில் விலகிச் சென்றுவிடும். குட்டியை ஈனுவதின் பின்னணி அனைத்து உயிரினத்திற்கும் ஒரு புதிராவகவே இருந்தது.

ஒரு கட்டத்தில் தனியாக அனுபவித்துக்கொண்டிருந்த உணர்வுகளை மற்ற உயிர்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்பின. அதே இனத்தைச் சேர்ந்த உயிரினத்துடன் மட்டுமே தன்னுடைய உணர்வுகளை சிறப்பாக பகிர்ந்துகொள்ள முடியும் என்பதை உணர ஆரம்பித்தன. ஒரே வகையான உயிரினங்கள் ஒன்றுகூட ஆரம்பித்தன. ஒன்று சேர்ந்ததால் புதுவித உணர்வுகளும் உணரப்பட்டது. ஓசை மற்றும் தழுவுதல் மூலம் உணர்வுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது. உணர்வுகளை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்த உயிரினங்கள் உணவையும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தன.

இந்த ஒத்த வகையான உயிரினங்களின் ஒன்றுகூடல், தன் இனத்துக்கென ஒரு பாதுகாப்பான, வசதியான மற்றும் நிரந்தரமான இடத்தை ஆக்கரமித்துக்கொள்ளத் தூண்டியது. அதே நேரத்தில் மற்ற உயிரினங்களை நிரந்தர எதிரியாக பார்க்கக் காரணமானது. பலமான மற்ற வகை உயிரினங்களிடம் இருந்து விலகியும் அல்லது அதனை ஒன்று சேர்ந்து கொள்ளவும் ஆரம்பித்தன. பலம் குறைந்த உயிரினங்கள் துரத்தியடிக்கப்பட்டன. கொல்லப்பட்ட சில உயிரினங்களை உண்ணவும் ஆரம்பித்தன.

மற்ற உயிரினகளைப் போலவே, ஒரு வகையான உடல் அமைப்புக்கொண்ட மனிதர்கள் பலசாலியாகவும் கம்பிரமாகவும் இருந்தன. மற்ற இன உயிரினங்களை ஒன்றாக எதிர்கொண்டாலும், ஒன்றாக வாழத்தொடங்கிய மனிதருக்குள் சில போட்டி இருந்க்கத்தான் செய்தது. தன் கூட்டத்திற்குள் பலத்தை நிரூபிப்பது, தன்னை மற்றவைகளிடம் இருந்து மிகைபடுத்திக்கொள்வது என உள் போராட்டங்கள் தோன்றின. பலம் மட்டுமே உயர்ந்தவர்களை தீர்மானித்தது. இயற்கையின் சதியால், மற்றோர் வகையான உடல் அமைப்புக்கொண்ட மனிதர்கள் பலமும் கம்பீரமும் குறைவாகவே இருந்தது. உறுப்புகளை தவிர, வேறு சில உணர்வுகள், செயல்களும் ஒத்து இருந்ததால், உடலுறுப்பைவைத்து (உடல் அமைப்பு) ஆண் பெண் என உள் இன பிரிவு உருவானது.

பெண்களால் இயலாத காலங்களில், அவர்களின் உடல்நிலையையும் அடுத்த வாரிசை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மனதில்கொண்டு பெண்களுக்கு இக்காலங்களில் சில சலுகைகள் வழங்கப்பட்டது. சலுகையின் அனுபவிக்க ஆரம்பித்த சிலரால் அதிலிருந்து விடுபட இயலவில்லை. உணவு சேகரிக்கவோ பாதுகாப்பு பணியிலோ ஈடுபடுவதை பெண்கள் குறைத்துக்கொள்ள ஆரம்பித்தனர். குழந்தையை வளர்ப்பது அல்லது தங்கும் இடத்தை அலங்கரிப்பது ஆண்களின் கலைப்பாற்றுவது என புது வேலைகளை உருவாக்கி அதைச் செய்ய ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணினம் உடலளவில் பலவீனம் அடைய ஆரம்பித்தது. உணவு சேகரிப்பதும் பாதுகாப்பும் இன்றியமையாத வேலை என்பதால் இதில் ஈடுபட்ட ஆண்களின் கை ஓங்க ஆரம்பித்தது. சலுகைகளால் சோம்பேரிகலான பெண்களால் உரிமையை பெறுவதில் சிரமமானது .

சலுகைகள் கிடைத்தாலும் பெண்களால் ஆண்களை மீறி ஏதும் செய்யமுடியவில்லை. பெண்களின்புரம் இருந்து புலம்பலும் ஆண்களை சபிக்கும் பழக்கமும் அதிகரிக்க ஆரம்பித்தது. வெகுச் சில ஆண்களே சிறிது செவி சாய்த்தனர். பெரும்பாலான ஆண்கள் அதை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. உணவு செகரிக்கும்போதும் பாதுகாப்புப் பணியின்போதும் எதேச்சையான சில மரணங்கள் நிகழ, சபிக்கப்பட்டதால் இறந்தான் என பெண்தரப்பினர் பேச ஆரம்பித்தனர். பலசாலிகளின் மேல் பொறாமைக்கொண்ட சில ஆண்களும் அதனை ஆமோதிக்க ஆரம்பித்தனர்.

உடல் பலம்கொண்ட ஆண்களை அறியாமையை புகுத்தி கட்டுப்படுத்த ஆரம்பித்தனர். பெண்கள் மட்டுமே குழந்தையை ஈன்றேடுததால், ஆக்கத் தெரிந்தவர்களுக்கு அழிக்கவும் தெரியும் என்ற கூற்று உருவாக்கப்பட்டது. ஆண்களின் இயலாமையால் சபிக்கப்பட்டவர்களாக கருதப்பட்டார்கள். பலசாலி ஆண்களால் சில நேரங்களில் துன்பத்தை / அவமானத்தை சந்தித்த பெண்கள், அறியாமையை பயன்படுத்தி ஆணினத்தை ஆள ஆரம்பித்தனர்.

பெண்களும் சில ஆண்களும் (பலவீனமான, ஆரம்பக்காலங்களில் ஒதுக்கப்பட்ட, அவமானப் படுத்தப்பட்ட ஆண்கள்) ஒன்று சேர்ந்து ஆண்களுக்கான கட்டுப்பாடுகளை இயற்ற ஆரம்பித்தனர். பெண்களுக்கென இருப்பிடம் தனியாக உருவாக்கப்பட்டது. அங்கு ஆண்களுக்கான அனுமதி வரையறுக்கப்பட்டது. உணவு சேகரித்தலில் இருந்து காவல், இருப்பிட வேலை வரை ஆண்கள் பார்க்கத் தொடங்கினர். ஆண்களை அறியாமையைக்கொண்டு தள்ளிவைத்தாலும், ஆண்களுடன் பெண்கள் கொள்ளும் உடலுறவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பல பெண்கள் ஈரின செர்க்கையையே பெரிதும் விரும்பினர். கட்டுப்பாட்டின் மூலம் இலை வைத்து மறைத்தாலும் அதன் ஈர்ப்பு அதிகமாகிக்கொண்டுதான் போனது. ஆண்களும் பெண்களுடன் கொள்ளும் உறவை பாக்யமாகக்கருதினர். இதனால் குழந்தை பிறப்பின் ரகசியம் அறிய வாய்ப்பில்லாமலே போனது.

பெண்களின் சொகுசான வாழ்க்கையால் அவர்களின் உடல் மென்மை அடையத் தொடங்கியது. கம்பீரமான உடல்வாகு மட்டுமே அழகென கருதியிருந்த மனிதர்கள் மென்மையான மேனியின் அழகை அறிய ஆரம்பித்தனர். பெண்ணினதிர்க்கு மேலும் அழகூட்ட நினைத்த பெண்கள் பெண் குழந்தை இருப்பிடதுக்குல்லேயே மேலும் கவனிப்புடன் வளர்த்தனர். ஆண் குழந்தையை ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆண் குழந்தைகள் வளர வளர அவர்களின் திறமைக்கு ஏற்ப, இருப்பிட வேலை அல்லது பாதுகாப்பு அல்லது உணவு சேகரித்தல் போன்ற வேலைக்கு பிரித்து அனுப்பப்பட்டனர்.

இது வரை பசிக்கும்போது உண்டும், தூக்கம் வரும் போது தூங்கியும் வாழ்ந்தவர்கள் வாழ்க்கையை வரைமுறைப்படுத்தி, வாழ்க்கையில் மேலும் புதிய பழக்கங்களை புகுத்த ஆரம்பித்தனர். அதிக காலங்களுக்கு இருக்கும்படி உணவு சேகரித்து வைக்கப்பட்டது. உணவு உறக்கத்திர்க்கான நேரம் ஒதுக்கப்பட்டது, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டது.... பெண்களை மகிழ்விப்பதை சில மூட ஆண்கள் பாக்யமாக கருதினர். இந்த நிழலில் ஆரம்பகாலங்களில் பெண்களுடன் கைகோர்த்த ஆண்களும் குளிர்காய ஆரம்பித்தனர். சில நேரங்களில் ஆண்கள் ஊனமுற்ற / விருப்பமற்ற பெண்களுடன் இச்சைக்கொள்ள நிர்பந்திக்கவும் பட்டார்கள்.

சில ஆண்கள் வரைமுறைகளை மீர ஆரம்பித்தனர், சிலர் பெண் ஆதிக்கத்துக்கு எதிராக போர்க் கோடி தூக்க ஆரம்பித்தனர். ஒரு சிலர் ஆண்களாலும் குழந்தையை ஈன முடியுமா என சில விபரீத ஆராய்ச்சிகளில் இறங்கினர். இருந்தும், ஆதிக்ககாரர்களின் தந்திரத்தால், மூட நம்பிக்கை மேல் நம்பிக்கைக்கொண்ட ஆண்களை வைத்தே அவர்களை அடக்கினர். கட்டுப்பாடுகள் அதிகரித்தது. தண்டனை சட்டங்கள் இயற்றப்பட்டது. அதே நேரத்தில் எதிர்ப்பும் எழுச்சியும் அதிகரித்தது. ஆண்களின் புரட்சி ஆரம்பமானது.

தொடரும்....

புதன், 24 மார்ச், 2010

சத்துணவு

சில மாதங்களுக்கு முன் நான் காமராஜர் படம் பார்த்தேன். அதில் அவர் ஆரம்பித்த மதிய உணவு திட்டம் என் பள்ளி நாட்களை நினைவூட்டியது.

எங்கள் ஊர் கேங்கவரம், செஞ்சிக்கு அருகில் உள்ள ஒரு சின்ன கிராமம். எங்கள் ஊரை ஒட்டி உள்ள கணக்கன்குப்பம் என்ற கிராமத்தில்தான் பள்ளிக்கூடம் உள்ளது. ஒன்று பஞ்சாயத்து இடை நிலை பள்ளி, எட்டாம் வகுப்பு வரை இருக்கும். இரண்டவது RC ஆரம்ப பள்ளி, ஐந்தாம் வகுப்பு வரை இருக்கும். அடுத்து லூர்து அன்னை நடுநிலை பள்ளி, ஆறாவது முதல் பத்தாவது வரை இருக்கும்.

எல்லா இடங்களை போலவே பஞ்சாயத்து பள்ளியில் கண்டிப்பு இல்லாமல் இருக்கும். RC மற்றும் லூர்து அன்னை பள்ளிகூடங்கள், கிருஸ்துவ சபையினரால் நடத்தபடுவது என்பதால் ஒழுக்கம், படிப்பு எல்லாவற்றிலும் கண்டிப்பாக இருப்பார்கள். RC பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதில் சில கட்டுபாடுகள் இருக்கும். கையால் தலையை சுற்றி காதை தொடுவதை தவிர, மாணவனுடைய பெற்றோர்கள் கொஞ்சம் படித்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது ஊர் பெரியாளின் / படித்தவர்களின் சிபாரிசு இருக்க வேண்டும். இங்கு படித்தவர்கள் என்பவர்கள் கையெழுத்து போடும் அளவுக்கு படித்தவர்களாக இருந்தால் போதும். இப்பள்ளியில் சேர்த்துகொள்ளப்படாத மாணவர்கள் பஞ்சாயத்து பள்ளியில் சேர்க்கபடுவார்கள்.

பஞ்சாயத்து பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை நீங்கள் மறந்தேவிடலாம். ஒரு சிலரை தவிர மற்ற பஞ்சாயத்து பள்ளி மாணவர்கள் தகுதி அற்றவர்களாகவே பள்ளியை விட்டு வெளியே வருவார்கள். இந்த மாணவர்கள் மதிய உணவுக்காகவும் வீட்டில் பெற்றோர்களால் கவனிக்க முடியாது என்பதாலும் இங்கே சேர்க்கப்படுவர்கள்.

என்னோட பெற்றோர்கள் எங்களை படிக்கவைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் என்பதால் நான் RC ஆரம்ப பள்ளியில் சேர்க்கப்பட்டேன். சேர்க்கப்பட்டேன் என்பதை விட அனுப்பப்பட்டேன் என்று சொல்லலாம். ஒரு நாள் ஒரு ஆசிரியர் (Paul) என் அப்பாவிடம் பொதுவான விஷயம் மற்றும் என் அண்ணனின் படிப்பு போன்றவற்றை பற்றி பேசி விட்டு என்னை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். என் அப்பா "இவன்தான் மதிக்க மாட்டேங்கறான். ஊர சுத்தி வந்துட்டு இருக்கறான்." னு சொல்ல. ஆசிரியர் "பையனக்கு வயசு என்ன இருக்கும், பள்ளிகூடத்துக்கு அனுப்பி வச்சுடுங்க" னு சொல்ல. அப்பா " நாலு வயசுதான் ஆகும்" னு சொல்ல. ஆசிரியர் "சும்மா அனுப்பிவிடுங்க நான் பாத்துக்கறேன்" னு சொல்ல. பள்ளியில் சேர்க்கபடாமலே பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டேன்.

எங்கள் வீட்டில் இருந்து வெளிவந்து வலது பக்கம் திரும்பி ரோட்டில் 100 மீட்டர் நடந்தால் ஒரு முருகர் கோவில் வரும். அங்கிருந்து வலது புறம் திரும்பி 100 மீட்டர் நடந்தால் கிறிஸ்துவ ஆலயம் ஒன்று இருக்கும். கோவிலையும் ஆலயத்தையும் இணைக்கும் வழி தடம் ஒரு நீர் நிலையின் (தாங்கல்) கரையை ஒட்டி அமைந்து இருக்கும். தாங்கல் கரையும் அந்த வழி தடம் ஓரமும் அந்த இடத்தை சுற்றி வசிக்கும் மக்களுக்கு காலை கடன் கழிக்கும் இடம். அந்த ஆலயத்தை ஒட்டி எங்கள் RC பள்ளிக்கூடம் அமைந்திருக்கும். அதுதான் எங்கள் பள்ளிக்கு செல்லும் வழக்கமான வழி.

சில மாதங்களுக்கு பிறகு அந்த ஆசிரியர் நான் ஒன்றாம் வகுப்புக்கு தகுதியானவன்தான் என்று நினைத்திருக்ககூடும். என் அப்பாவிடம் "பையன் எந்த மாதம் பிறந்தானு சொல்லுங்க ஒரு வருஷம் தள்ளி போட்டு சேர்த்துடலாம்" னு சொல்ல. ஒரு வருஷம் முன்னாடியே பிறந்தவன் போல பிறந்த தேதியை மாற்றி சேர்க்கப்பட்டேன்.

பள்ளிக்கு செல்லும் முன் வரை காலை உணவின் மீதி அல்லது கூழ் என்னுடைய மதிய உணவாக இருக்கும். மீதம் இருக்கும் நிலையில், முதலில் நாங்கள் மதிய உணவு சாப்பிடுவோம். இன்னும் மீதம் இருக்கும் நிலையில் என் பெற்றோர்ர்கள் சாப்பிடுவார்கள். பள்ளி செல்ல ஆரம்பித்த பிறகு மதிய உணவு என்பது பள்ளியில் மட்டுமே தரப்படுவது என்று நம்ப ஆரம்பித்துவிட்டேன். என்னுடைய பையில் புத்தகம், பலகை மற்றும் உணவு வாங்க தட்டு இது மூன்றும் இருக்கிறதா என்பதை சரிபார்த்த பிறகே பள்ளிக்கு செல்வேன்.

காலை இடைவேளையின் போதே சத்துணவு கூடம் அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் சேந்தி குடித்துவிட்டு, உணவு தயாரிக்க ஆரம்பித்து விட்டார்களா என்பதை ஒரு முறை தூரத்தில் நின்று (மாணவர்களுக்கு சத்துணவு கூடத்தில் அனுமதி இல்லாததால்) உறுதி செய்துகொள்வோம். சில நேரங்களில் சில திடமான மாணவர்கள் சமையலுக்கு தண்ணீரை கிணற்றில் இருந்து இறைத்து தருவார்கள். அவர்கள் திரும்பி வகுப்பறைக்கு வந்தவுடன் "நிறைய காய் வெட்டி வச்சிருக்காங்க. நானே 5 வாலி தண்ணி இழுத்து கொடுத்தேன். அவன் நாலு வாலி சேந்தி கொடுத்து இருப்பான். இன்னைக்கி சாதத்தில் நிறைய கொழம்பு கலந்து கொடுப்பாங்க. நீ வேனா பாரு" அடுத்தவன் "டாய் நான்தான் 5 நீ 4 வாலி தான்" என முனுமுனுப்பான சண்டைகள் போய்க்கொண்டு இருக்கும்.

மதியம் 12 மணிக்கு அடிக்கும் கோயில் மணி, மதிய உணவுக்கான நேரம் நெருங்கிவிட்டதை ஞாபகபடுத்திவிடும். கிராமம் என்பதால் மணி பர்ப்பதர்க்கான வசதி இருக்காது. இந்த கோவில் மணியும் பள்ளிக்கூட மணியும்தான் பெரும்பாலான கிராம மக்களுக்கும் மணிகாட்டி. 12:30 பள்ளிக்கூட மணிக்காக காத்துக்கொண்டு இருப்போம். ஆசிரியர்களும் 12 மணிக்கு மேல் கவனிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு கேள்வி பதில் அல்லது கதை சொல்வது என போய்க்கொண்டு இருக்கும்.

12:30 மணி அடித்ததும் மாணர்வகளை கட்டுப்படுத்த முடியாது என்பதை அறிந்த ஆசிரியர்களும் கட்டுபடுத்த மாட்டார்கள். அனைவரும் ஓடி சென்று உணவுக்கான வரிசையில் நிற்ப்போம். உணவை வாங்கிக்கொண்டு பள்ளியில் உள்ள வெப்ப மரங்களின் அடியில் உற்காந்து உணவருந்துவோம். காகங்களும் அதே நேரத்தில் எங்கிருந்தாலும் வந்து வெப்ப மரங்களில் குவிந்துவிடும். சிதறிய / மீர்ந்த உணவை அவைகள் தின்று பசி ஆற்றிக்கொள்ளும். ஆசிரியர்கள் உணவு வரிசையை கட்டுப்படுத்தவும் உணவு வீணாக்குபவர்களை தண்டிக்கவும் சுற்றிவந்துக்கொண்டு இருப்பார்கள். சாதத்தில் காய்கறி வந்தால் சந்தோஷத்தில் மனம் துள்ளும்.அதனை அனைவருடனும் காமித்து, அடுத்தவன் பொறாமைப்படுகிறான் என்பதை உறுதிசெய்துக்கொண்டுதான் சாப்பிடுவோம். எனக்கு பாதி என்று ஒருவன் கேட்பான். "நேத்து எனக்கு ரெண்டு வந்துச்சு" னு ஒருவன் சொல்லி சமாதானபட்டுக்கொள்வான்....

ஒருநாள் சத்துணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது ஒரு நண்பனின் தட்டில் காகத்தின் எச்சம் விழுந்துவிட்டது. அவன் அந்த பகுதி உணவை எடுத்து தரையில் வைத்துவிட்டு சாப்பாட்டை தொடர்ந்தான். அதனை கண்ட ஆசிரியர் அதட்டலுடன் அவனை நோக்கி வந்துக்கொண்டு இருந்தார். நண்பன் பயத்துடன் தட்டில் இருந்து எடுத்து தரையில் வைத்த உணவை ஒரு கையால் மறைக்க முற்பட்டுக்கொண்டிருந்தான். அருகில் வந்த ஆசிரியர் நண்பனிடம் " தட்டில் இருக்கும் உணவை கொட்டிவிட்டு சத்துணவு போடும் ஆயாவிடம் போய் வேற சோறு வங்கிக்கோ" என்று அனுப்பிவைத்தார். சத்துணவு ஆயாவிடம் போன நண்பன் நடந்ததை சொன்னான். சத்துணவு ஆயா "என்ன புள்ளப்பா நீ" என்று சொல்லிக்கொண்டே வழக்கத்துக்கு அதிகமாகவே உணவை அவன் தட்டில் இட்டார்கள். எப்போதும் கண்டிப்பாக இருப்பவர்கள் வழக்கத்துக்கு மாறாக நடந்துக்கொள்வதை அவனால் புரிந்துகொள்ள முடியாமல் சந்தோஷத்தில் திரும்பி வந்தான். ஒருவன் நான்தான் அப்பவே சொன்னேன் இல்ல அந்த வாத்தியார் நல்லவருனு. நண்பன் அந்த ஆயாவுந்தான் என சொல்ல.... எங்கள் உணவை தொடர்ந்தோம்.

ஞாயிற்றுக்கிழமை சத்துணவுகூடத்துக்கு விடுமுறை என்பதால் சனிக்கிழமை இரண்டு வகையான உணவு போடுவார்கள். 12 மணி மணி ஆலயத்தில் அடித்ததும் வீட்டில் இருந்து தட்டை எடுத்துக்கொண்டு செல்ல ஆயுதத்மாகிவிடுவோம். சத்துணவு தயாராகி இருந்தால் 12:30 க்கு
முன்னாடியே உணவு போட ஆரம்பித்துவிடுவார்கள். சனிக்கிழமை விடுமுறை என்பதால் உணவை வீட்டுக்கு எடுத்து வந்து வீட்டில் உண்ணுவோம். ஞாயிற்றுக்கிழமை நாங்களும் மதிய உணவுக்கு விடுமுறை விட்டுவிடுவோம். விளையாட்டு எங்கள் பசியை மறைத்துவிடும்.

ஒரு நாள் சனிக்கிழமை சத்துணவை வாங்கிக்கொண்டு கிருத்துவ ஆலயத்தை கடந்து தாங்கல் கரை ஓரம் உள்ள பாதையில் வந்துக்கொண்டு இருந்தேன். பாதையின் இருபுறமும் காலைக்கடன் சென்று நாச்தியாக இருக்கும் என்பதால் நடக்கும் வழி குறுகலாகவே இருக்கும். நானும் என் உணவை தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு வேகமாக நடந்தேன். என் எதிரில் சைக்கிளில் வந்த ஒருவன் வேகமாக என் மேல் ஏற்றி இருவரும் நிலை தடுமாறி விழுந்தோம். தவ்று அவனுடையது என்பதால் கூட்டம் கூடும் முன் அவன் எழுந்து சைக்கிளில் பறந்துவிட்டான். என் கண்ணீரின் வழியாக என் மதிய உணவு சிதறி கிடந்ததை பார்த்துக்கொண்டு மதிய உணவுக்கான வழி தெரியாமல் அழுதுக்கொண்டு இருந்தேன்.

என் நண்பன் ஒருவன் சத்துணவு ஆயாவிடம் கேள் திரும்ப தருவாங்க என்றான். இன்னொருவன் நண்பனுக்கு ரெண்டாவது முறையாக உணவு கிடைத்தது ஞாபகப்படுத்தினான். சத்துணவுகூடதுக்கு விரைந்தேன். சத்துணவுகூட அய்யாவிடம் நடந்ததை சொன்னேன். பதறிய பாட்டி எங்கே? என கேட்க, " தாங்கலான்ட போகும்போது வயத்துல வுட்டுட்டான் பாட்டி. சோறெல்லாம் அங்கயே கொட்டிக்குச்சு. அங்க ஒரே ..." என சொல்லிக்கொண்டிருக்கும் போதே என் சட்டையை துக்கி வயற்று வீக்கத்தை தெய்துவிட்டபடி " பாவி பய புள்ளைக்கு என்ன அச்சுனகுட பார்க்காம போயிருக்கான் பாரு"என்று சைக்கிள்காரனை திட்ட ஆரம்பித்தாள். அப்போது தான் நானும் என் வயிற்றில் பட்ட வாலியை உணர்ந்தேன். பாட்டி தட்டை கழுவி சாதம் போட்டு கொடுத்தாள். சாதத்தை சந்தோசமாக வாங்கிகொண்டு வீடு திரும்பினேன். நாண்பர்கள் ரெண்டாவது தடவையா சோறு போட்டங்களா, நான் தான் சொன்னன் இல்ல.... என்றனர்.

எங்கள் ஊர் மலையை ஒட்டி உள்ள லூர்து அன்னை உயர் நிலை பள்ளியில் நான் ஆறாம் வகுப்புக்கு சேர்ந்த பிறகு என் அம்மா எனக்கு மதிய உணவை ஒரு கப்பில் கொடுத்தனுப்ப ஆரம்பித்தனர். என் தந்தை இல்லாதவங்க சத்துணவு சாப்பிடட்டும் என்று விளக்கம் கொடுத்தார். என் அண்ணனும் அதே பள்ளியில்தான் படித்துக்கொண்டு இருந்தான். எனவே அவனோடுதான் மதிய உணவு சாப்பிட செல்வேன். அங்கு நிறைய பேர் மதிய உணவு வீட்டில் இருந்து கொண்டுவந்தார்கள். அப்போதுதான் தெரிந்தது RC பள்ளி ஊரினுள் அமைந்திருந்ததாலும் மதிய இடைவேளையும் அதிக நேரம் என்பதாலும் அங்கு படிக்கும்போது அவர்கள் மதியம் வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வருவார்கள் என்று. என் பெற்றோர்கள் மற்ற பிள்ளைகளை பார்த்து தாழ்வாக எண்ணக்கூடாது என்பதற்காக எனக்கு மதிய உணவு கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள். அண்ணனுடைய நண்பர்கள் வசதியானவர்கள் என்பதால் அனைவரும் வீடிலேருந்தே உணவு எடுத்து வருவார்கள். அவரவர் வசதிக்கேற்ப சாப்பாட்டு கப்பும் உணவும் இருக்கும். அங்கு சென்ற பிறகுதான் மதிய உணவை வைத்து அவரவர் வீட்டின் வசதியை பிரித்து பார்க்க முடியும் என்பதை உணர்ந்தேன்.

எனக்கும் சத்துணவுக்கும் இருந்த உறவு முறிய ஆரம்பித்தது. வெள்ளிக்கிழமைகளில் சத்துணவுடன் போடும் முட்டை என்னுடைய உறவை சற்று நீடித்தது. அன்று மட்டும் வரிசையில் நின்று முட்டையை மட்டும் வாங்கிக்கொண்டு வந்து வீட்டு சாப்பாட்டுடன் சாப்பிடுவேன். எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் (Michel bother) மதியம் தலைமை ஆசிரியர் அறையில் இருந்து தன்னுடைய அறைக்கு போகும் போது வழியில் தட்டை நீட்டும் அனைத்து மாணவர்கள் தட்டிலும் இருந்து கொஞ்சம் உணவு எடுத்து சாப்பிட்டுக்கொண்டே போவார். நானும் அந்த வரிசையில் என் உணவை நீட்ட வேண்டும் என என்னுவேனே தவிர அவருடைய சமத்துவத்தை புரிந்துகொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி அடையவில்லை.

என்னுடைய ஒன்பதாம் வகுப்பு st.Ann's உயர் நிலை பள்ளி, திண்டிவனத்தில் தொடர்ந்தது. திண்டிவனம், எங்கள் ஊரில் இருந்து 50 km
தொலைவில் இருக்கும் என்பதால் நான் விடுதியில் தங்கி படிக்க வேண்டியதாகிவிட்டது. மூன்று வேலையும் விடுதியில் உணவு என்பதால் சத்துணவுக்கும் எனக்கும் இருந்த உறவு முற்றிலுமாக முறிந்தது.

சத்துணவு மட்டும் அல்லாமல் இலவச ஆடை (uniform)- வருடா வருடம் பண்டிகை காலங்களில் வீட்டை தவிர உடைகள் கிடைக்கும் இன்னொறு இடம் எங்கள் RC பள்ளியில்.

காலணி - என் பள்ளி பருவத்தில் பள்ளியில் வாங்கிய இலவச காலணியை தவிர வேறு காலணியை என் கால்கள் பார்த்தது இல்லை.

RC ஆரம்ப பள்ளி கல்வியை மட்டும் எனக்கு இலவசமாக கொடுக்கவில்லை என்பதால் என்னுடைய இன்னொறு வீடாகவே அது தெரிந்தது. அந்த சூழலை உருவாக்கியவர் பெருந்தலைவர் காமராஜர். காமராஜர், கிராம கல்வி முன்னேற்றத்திற்காக வரி அதிகம் விதிக்க முடிவெடுக்கும்போது , பலரின் ஆதரவை இழக்க வேண்டி இருக்கும் என்ற அபிப்ராயங்கள் கோரப்பட்டது. பரவாஇல்லை, கொடுக்க முன்வருபவர்கள் கொடுக்கட்டும், ஏழை மக்களின் கல்விக்காக நான் வீதியில் இரங்கி கை எந்துகிறேன் என்பது அவரின் பதிலாக அப்போது இருந்தது. அன்று அவர் எடுத்த தீர்க்கமான முடிவுகள் சலுகைகளின் பலனை என்னை போல கிராமத்து மாணவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.

சலுகைகளின் பலன் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும் என எண்ணுபவன் நான். காமராஜரின் சலுகைகள் பல தலைமுறைகளை மாற்றி அமைத்துள்ளது.

ref : http://www.perunthalaivar.org/achievement/edu-achievement/

புதன், 17 பிப்ரவரி, 2010

கெங்கவரத்தில் ஒரு நாள்…..

(I like to share my friends experience about my native visit. Written by my friend (Balu))

பல நாள் கழித்து..பல மணி நேரத்தை, பலாச் சுளைக்கு இணையாகப், பயணித்ததை இங்கு பகிரிந்து கொள்ளப்போகிறேன்..

வெள்ளிக்கிழமை மாலை மணி ஐந்து.. அடித்துப் புடித்து கத்திப்பாராவை அடைந்து, ஒருவழியாக திருவண்ணாமலை பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.. கூட்டம் அதிகம் இல்லை.. உறங்குவதற்கு உத்தமமாக ஒரு இருக்கையை பிடித்து அமர்ந்தேன்..

மாலை நேரம்..சிவப்புச் சூரியன் ஓய்வெடுக்க ஒதுங்கிக் கொண்டு இருந்தான்.. இதயத்துக்கு இதமாக பண்பலை பாடல்களின் தாலாட்டு ஒருபுறம், அழகிய சாலையில், அதிவேக ஓட்டத்தில், மாலைக் காற்றின் மயக்கம் மறுபுறம், என்னை அரியாமல் எப்போதும் போல், நித்திரையில் நிதானத்தை இழந்தேன்.. ஓரு மணி நேரம் ஓடிப் போனது..

அடுத்த இரு மணி நேரம், பார்க்காத ஊரைப் பற்றி பல கற்பனைகளுடன் மெதுவாக நகர்ந்தது.. செஞ்சியில் இறங்கிவிட்டு எனது நண்பன் ஊருக்காக, அடுத்த பேருந்துக்கு மாறினேன். செஞ்சியில் என்னை சந்திப்பதாக வாக்கு கொடுத்து ஏமாற்றிய என் நண்பது மிது எரிச்சல் ஒருபுறம், நிற்க கூட இடம் கிடைக்காமல் உடம்பின் உலைச்சல் மறுபுரம், என எப்படியோ முக்கால் மணி பயணத்தை முடித்தேன்..

நல்ல வேலை.. தொலைபேசியின் உதவியால் திட்டத் திருத்த்ங்களை எனது நண்பனுக்கு தெரிவிக்க, அவன் சரியான நேரத்திற்கு வந்து காத்திருந்தான்.. பேருந்தில் இருந்து இறங்கும், என்னை கவனிக்காமல் பேருந்துக்குள் தொலவிக் கொண்டிருக்கையில், பல வருடங்களுக்கு முன் என்னை பார்த்து இருந்த அவன் தம்பி அடையாலம் கண்டு கொள்ள, பிறகு அப்படியே அவன் வீட்டை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தேம்….

மணி பத்து இருக்கும். நண்பனின் அம்மா சுடச்சுட சப்பாத்தி தயார் செய்தார்கள். தொட்டுக்க, தக்காளி வெங்காயம் பச்ச மிளகாய் சேர்த்து காரமாக கிராமத்து வாசனையில் வதக்கி வைத்திருந்தர்கள். ஒரு அரைமணி நேரத்துக்கு எதையும் சட்டைபண்ணாமல், கணக்கில்லாமல் காலிபண்ணினோம் சப்பாத்திகளை..

வந்த கலைப்புத்தீர, காத்தாடி இருந்தும் பயன்படுத்தாமல், அருமையான தூக்கம்..எழும்போது மணி எட்டு இருக்கும். உண்மையான பசும்பாலில், அருமையாக அமமா தாயாரித்து வைத்து இருந்த தேனீரை பருகி விட்டு, எனது நண்பனின் நண்பர்களுடன் மலையை நோக்கி எங்க்ள் பயணத்தைத் தொடங்கினோம்..

ஐந்து நிமிட நடைக்கு பிறகு பச்சை பசேல் வயலின் வரப்புகள் எங்களுக்கு சாலைகளாக மாறியது. காலை நேரத்து கதிரவன் ஓய்வெடுத்த கலைப்பால் மெதுவாக எழுந்து கொண்டு இருந்தான். இருந்தாலும் குலுமை காற்றின் முன் கதிரவனின் ஒளி காணமல் போனதால், அழகிய துன்பமாக இருந்தது, எங்கள் நடை…

கிட்டத்தட்ட பத்து நிமிடம், வயல்களை தாண்ட, மலை அடிவாரத்தை அடைந்தோம்.. பெரிய மலை இல்லை, சிறு சிறு குன்றுகள் என்றாலும், மனிதனிடம் மாட்டாத இயற்கை படைப்புகள். ஆட்கள் நடந்ததால் உருவான ஒத்தை அடிப்பாதை. வழி நெடுக்கிளும் முற்புதர்களும், பெயர் தெரியாத செடி கோடிகளும்.. அங்காங்கே ஊத்து நீர், பாதையை வழி மறித்தது..

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்து இருப்போம்.. போகும் வழி முழுவதையும் புகைப் படங்களாக என் புகைப் படக்கருவியில் பதித்தோம். நான் மட்டும் அல்ல, வந்த என் நண்பர்கள் அனைவரும், இயற்கையின் பாசங்கை, வித விதமான கோணங்களில், புகைப் படங்களாகப் பொருக்கினார்கள்…

அங்கு ஒரு பெரிய பாறை. ஏற முடியாது என என் நண்பன் சவால் விட.. சரி முயற்சி செய்து பார்ப்பது என முழு மூச்சில் இரங்கினேன். இரண்டு அடியில் நிலை தடுமாரி சருக்கி வில, நல்ல வேலை அடியெதுவும் புடிக்கவில்லை. வெறி அதிகமானவனாய் வெற்றியுடன் ஏறி அதை புகை படமாகவும் எடுத்துக் கொண்டேன்

காலக் கடிவாலத்தால், பயணத்தை சுருக்கிக் கொண்டு, வந்த வழியை திரும்ப கால் பதித்தோம், ஆனால் எதிர் திசையில். வரும் வழியில் வயளுக்கு நடுவில், கிணத்தில் குளியல். கிட்டத்தட்ட ஒரு பத்து அடி ஆழத்தில் தண்ணி இருந்தது. படி இருந்ததால் பிரச்சனை ஒன்றும் இல்லை.

வரும் போது கல்லுச்சந்தில் ஒடிய உடும்பும், தண்ணிக்குள் ஓடி ஒழிந்த தண்ணிப் பாம்பும் ஒருபுறம் அச்சத்தை உமிழ்ந்தது என்மனதில். இருப்பினும் பல ஆண்டு கழித்து கிணத்தில் குளிக்கும் சந்தர்ப்பம். வீணாக்க விரும்பவில்லை, வீணாக்கினோம் ஒரு மணி நேரத்தை தண்ணியில்…

வீட்டை அடைந்தவுடன் அருசி சாதத்துடன் மொச்சை குழம்பு. கூட காரமாய் அப்போதுதான் வதக்கி இறக்கிய மாங்காய் தொக்கு, வாழைக்காய் பொரியல், பீற்கங்காய் வறுவல், ரசம் என அனைத்தும்.. தனியாய் மாட்டிய என் நண்பனின் அத்தை மகனை கிண்டலும் கேலியுமாக முடித்தோம் மதிய உணவை..

பிறகு மாலை.. என் நண்பனின் மாமா வயளுக்கு நடைப் பயணம்.. அங்கு சூரிய ஒளி சுண்ட மறையும் வரை சும்மா அரட்டை அடித்து விட்டு வீடு திரும்பினோம்.. பல வருடங்களுக்கு பிறகு இருட்டில் விளக்கொளி இல்லாமல் நிதானத்தில் நடந்தேன் எண நினைக்கிறேன்..

இரவு, அரிசியுடன் முடக்கத்தான் கீரை கலந்து, இதுவரை பார்த்திரத பச்சை தோசை சுட்டதுடன், காரமாய் தக்காளி சட்னியும் அரைத்து வைத்து இருந்தர்கள் என் நண்பனின் அமமா அவர்கள்.. பிறகு இரவு உணவை இனிதே முடித்து விட்டு நான், எனது நண்பன், அவனுடைய மாமா பையன் மூவரும் மோட்டார் வாகனத்தில் அருகில் இருந்த நகரத்தில் இறக்கி என்னை விட, அங்கிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி பயணத்தைத் தொடர்ந்தேன்.

[Kindly forgive me for spelling mistakes. Due to tool I used for composing this, I couldn’t avoid spelling mistakes]


Ref:

http://naalai-namathe.blogspot.com
http://suvaiyaanasuvadukal.blogspot.com