சனி, 4 டிசம்பர், 2010

காத்தி

எங்கம்மா வழக்கத்துக்கு மாறாக காலங்காத்தால எழுப்பி வெளியப்போயிட்டு பல்ல தேச்சிக்குனு சீக்கிரமா குளிக்க வாங்கனு எழுப்பிவிட்டாங்க. நாங்க மூணு பெரும் சேர்ந்து மூணு பக்கமும் மூடி வச்சிருந்த எங்கப்பா கெளம்பிப்போயிருக்க, அரை தூக்கத்தில் ரமேஷும் (அண்ணனும் -பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன்) சீத்தாவும் (தம்பியும் -அவனையும் பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன்) எழுந்தாச்சானு உறுதி செஞ்சிக்குனு பாயிலிருந்து எழுந்தேன். தோப்புக்கு மூவரும் கெளம்பினோம்.லேசான குளுரு. அப்பப்ப மழை பெஞ்சி சேறு, சகதி. தோட்டத்து பக்கமா நாலு எட்டு வச்சா பின்னாடியே தோப்பு. அந்த சின்ன தூரத்திலையும் வெளியப்போய் லேசான மழையில கால்வாசி கரைஞ்சு நாத்தம். காலை கொஞ்சம் மோடா இருக்கற எடத்துல எட்டி எட்டி வச்சுகுனு முடிஞ்ச அளவுக்கு எதிலையும் படாம முன்னேறினோம். எங்க ஊரில் மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து மற்ற இடங்களை பிரித்து காண்பிப்பது இந்த வளையம்தான். நாங்க வழியிலோ ஊரின் ஓரமோ போறதில்ல. ஏன்னா, இதை எல்லாம் தாண்டி, நடக்கறது எவ்வளவு கஷ்டம்னு எங்களுக்கு தெரியும்.  அதுவும் இல்லாம வழிலயே போன கட்டி வந்துடும்னு ஒரு நல்ல மூட நம்பிக்கை. 

வேலி ஓரம் நீலமா வளந்து இருக்கும் பல்லி குச்சிய மூணா ஒடிச்சு, ரமேஷுக்கும் சீத்தாவுக்கும் கொடுத்துட்டு நானும் ஒன்ன வாயில வச்சுக்குனு, தாங்கல் கரையை நோக்கி நடந்தோம். தாங்கல் ஓரமா இருக்குற களத்தின் ஓரமா வெளியப்போயிட்டு , தாங்கலிலேயே கழிவிட்டு, வீட்டுக்கு திரும்பினோம். வீடு, தண்ணி ஊத்தி கழுவி வச்சிருந்தாங்க. எங்கம்மா குளிச்சுட்டு, மஞ்சா எல்லாம் பூசி நல்லா மங்களகரமா இருந்தாங்க. எங்கப்பாவும் குளிச்சுட்டு நல்லா தொவைச்ச வெள்ளை வேட்டி சட்டைய போட்டுட்டு நின்னுட்டு இருந்தாங்க. எங்கம்மா, எவ்வளவு நேரமா? வாங்கனு மூணு பேரையும் குளுப்பாட்டி விட, தொவட்டிக்குனு நல்ல துணியா போட்டுக்குனு சாப்பட ஒக்கந்தோம். இட்லி - இட்லி எப்பவாவது விசேசம் அப்பத்தான் இருக்கும்.

காலை சாப்பாட்ட முடிச்சுட்டு, விளையாட்டு நெனப்புல வேகமா வாசல் வழியா தெருவுக்கு ஓடினேன். ஓடி வந்த வேகத்தில் சானிய மேதிசுட்டு, அய்யனு சொல்லிக்கினே தெருப்பக்கம் போட்டு இருக்குற கருங்கல்ல காலை தொடச்சிக்கிட்டு இருந்தேன்.   ஸ்ரீதர் பூசனி பூவ மேரிச்சிட்டான் எம்மானு ஒரு சத்தம் கேட்டது. சாணியோட பூசணி பூவு நசிஞ்சி கல்லுல பாக்கும்பொதுதான் சானிய மட்டும் மெரிக்கலன்னு தெரியும். மெரிச்ச எடத்துல கோலம் வேற கொஞ்சம் கலைஞ்சு இருந்தது. இன்னக்கி காலயிலயே அடிதான்னு நெனச்சேன். இங்கவா, கண்ண பின்னாடியா வச்சிக்குனு இருக்கற, முன்னாடி பாத்து நடக்க மாட்டியா? உள்ளப்போய்  கால கழுவு. நல்ல நாளா இருக்கணும். அதான் கோவத்த அம்மா அடக்கிட்டாங்க. சானிய மெதிச்ச காலின் பகுதி தரையில படாம கொஞ்சம் நோன்டிக்குனே தோட்டம் பக்கம்போய்  காலை தேச்சு கழிவிட்டு திரும்பினேன், தண்ணிய யாரு ஊத்துவா? - அம்மா கேட்க்க, தண்ணி கொஞ்சம் எடுத்து தரைய கழுவிட்டு, தலைய குனிஞ்சுட்டு,  அம்மா இருக்கற எடம் வரைக்கும் பொறுமையா நடந்து வந்துட்டு, அப்புறம் வேகமா ஓடிவிட்டேன்.

சாயங்காலம் ஆனதும், வீட்ல படைக்கற வேல வேகமா நடந்துக்கொண்டு இருந்தது. வழக்கமான சாப்பாடு கூட இன்னும் கொஞ்சம் அதிகமான உண்ணும் பொருட்கள் செஞ்சிவச்சிருந்தாங்க. ஆனா படைக்கறவரைக்கும் காத்திருந்துதான்  சாப்படனும்னு சொல்லிட்டாங்க. அஞ்சிபெரும் பக்தியா நடுவீட்டில் இருக்கும் போட்டா, காலாண்டர், ஒரு சின்ன செலை சாமிக்கு முன்னாடி பக்தியோட நின்னுட்டு இருந்தோம். அம்மா எல்லாத்தையும் தயாரா வச்சுட்டு, நகர்ந்துட்டாங்க. அப்பா கல்புரத்த கொளுத்தி மூணு சுத்து காமிச்சுட்டு, தேங்கவ கர்புரதுல லேசா காமிச்சுட்டு, வெளிய வந்து வாசல்ல இருக்கும் கல்லுல தேங்கா  தண்ணி கிழ சொட்டாம ஒடைச்சு எடுத்துட்டு வந்து, சாமிக்கு முன்னாடி ஒரு பெரிய கோடு போடற மாதிரி உத்தனார். நாங்களும் அப்பா பின்னாடியே போயிட்டுவந்து, எல்லோரும் கண்ண மூடி வேண்டிக்குட்டு கல்புரம் நிக்கரவரைக்கும் அமைதியா காத்திருந்தோம் . கர்புரம் நின்ன உடனே ஒருமுறை பெருசா குமுட்டுட்டு, திருநீறு எடுத்து நெத்தியில வச்சிகுனு, சாப்பட ஒக்காந்தோம். நடுவுல வச்ச பெரிய இலைய அப்பாவுக்கு வச்சுட்டு, சின்ன சின்ன இலையில எங்களுக்கும் சாப்பாடு போட்டாங்க. எல்லாரும் சாட்டதுக்கு அப்புறம் அப்பாவுடைய இலையில எங்கம்மா சாப்பிட்டுட்டு வந்தாங்க.

அகல் விளக்கு வீட்ல எங்க எங்க வைக்க முடியுமோ அங்க எல்லாம் அகல் விளக்கு வச்சு, தோட்டத்துல வெளஞ்ச பஞ்சால திரி திரிச்சு வச்சு, நல்லஎண்ணை ஊத்தி அம்மாவோட சேர்ந்து வெளக்கு பத்தவைச்சோம். எமா அதுல திரி உள்ள போகுது, இதுல எண்ணை இல்லன்னு வெளக்க அணையாம பத்த வச்சுக்குன்னு இருந்தோம்.

தெருவுல பசங்க காத்தி சுத்த ஆரம்பிச்சு இருந்தாங்க. ஊருல எல்லா தெருவும் நெருப்பு பொறி வட்ட வட்டமா கொட்டிக்குட்டு இருந்தது. காத்தி சுத்தறது ஒரு போட்டியா பண்ணிக்குனு இருந்தாங்க.

ஓரமா நின்னுகுனு பாத்துக்குனு இருந்த என்னை, ஆறுமுக அண்ணன் வந்து அவர்கூட நிக்கவச்சு, ஒடகுடாதுன்னு சொல்லிட்டு, அவர் காலுக்கு ஒட்டி நிக்கவச்சுக்குன்னு , ஒரு கைய தோள் வழியா முன்னாடி விட்டு என் நெஞ்சிக்கு குறுக்கால அழுத்தி புடுச்சுக்குனு, காத்திய இன்னொரு கையாள சுத்துனாரு. காத்தி பொறி என் கண் முன் அறை வட்டம் அடிச்சுட்டு அடிச்சுட்டு போனது. அடுத்து நானு நானுனு மூணு பேரும் சுத்திட்டு, வீட்டு திண்ணையில ஓரமா நின்னு வேடிக்கை பாக்கப்போய்ட்டோம். சிலர் காத்திய சுத்திக்குனே தெரு தெருவாக காமிச்சுக்குனு வந்தாங்க.

ஒரு சில வருசத்துக்கு பிறகு,

காத்திக்கு முன்னாடியே , ஆறுமுக அண்ணனும் எங்கப்பாவும் எப்படி காத்தி செய்யறதுன்னு சொல்லிகொடுத்தாங்க. அடுப்பு கரிய நல்லா இடுச்சி, அறை அடி அகலம், ரெண்டு அடி நீளம் துணியின் நடுவுல நீளத்துக்கும் பொடியாப்போட்டு ரெண்டு பக்கமும் மடிச்சுவிட்டு , அழகா உருட்டி ஒரு சின்ன சணலாலக்  கட்டி, மூணு எருக்கன் குச்சிக்கு நடுவுல வச்சு, எருக்கன் குச்சியின் ரெண்டு முனையையும் நல்லா கட்டி, ஒரு முனியில கை நீட்டுக்கு ஒரு கையிறக்கட்டி  கொடுத்தாங்க.

அடுத்த நாள் காத்தி.
காலயில எழுந்திருக்கறது, மத்தது எல்லாம் அதேதான், குளியல் மட்டும் பம்ப் செட்ல.
சாப்டுட்டு தெரு பக்கம் வெளியில வந்தா, வாசல்ல அதே கோலம், அதே சாணி, அதே பூசணி பூ. கொஞ்சம் ஒதுங்கி ஓடியாச்சு.

அதே போல ராத்திரி படைச்ச உடனே சாட்டுட்டு, அடுப்புல இருந்து கொஞ்சம் நெருப்பு துண்ட காத்தியிலப்போட்டு கனிய வச்சு, நெருப்பு துண்ட கீழ கொட்டிட்டு, வெளிய போயிட்டு லேசா சுத்தி பார்த்தேன். நெருப்பு பொறி லேசா என்னை சுத்தி வட்டமடிக்க ஆரம்பிச்சது. சுத்த சுத்த அதிகமாயிட்டே போக, சந்தோசத்துக்கு நடுவில் பயம் சிறிது எட்டிப்பார்த்தது. நடுவுல நிறுத்த முயற்சித்தேன். காத்தி கயிறுடன் என்னை ஒரு சுத்து சுத்திடுச்சு. நெருப்பு பொறி மேலப்பட்டு நல்ல சட்டியில ஊது வத்தியால ஓட்டைகள் போட்டா மாதிரி ஆயிடுச்சு. முதல் முறை தப்பு வரத்தான செய்யும்.

ஒரு சில வருசத்துக்கு பிறகு,

அடுப்பு கரியவிட மலாட்ட தொலும்புல கரிப்பன்னா நல்லா வரும்னு பக்கத்து வீட்டு குப்பன் சொன்னான். வீட்ல இருந்து மலாட்ட தொலும்பு எடுத்துவந்து மோதல் முறை, கொளுத்தி சாம்பல் ஆக்கிட்டோம்., அடுத்த முறை குப்பனயே கூட்டுகுனு வந்து தொலும்பு எரியாம நெருப்ப கனிய வச்சே கரியாக்கிட்டோம். இந்த முறை காத்தி சுத்தும்போது நல்லா பொறி வந்துச்சு.

ஒரு சில வருசத்துக்கு பிறகு,

பக்கத்து வீட்டு ரவி பனம் புடுக்குல காத்தி செஞ்சா சுப்பரா இருக்கும்னு சொன்னான். ரவி - நீ மட்டும் என்கூட வா, நான் உனக்கு ஓடுச்சுத்தரேன். கெணத்துல குளிக்கபோகும்போது ஆம்பள பன மரம் எங்க இருக்குன்னு பார்த்து, ஏறி, பனம் புடுக்கு ஓடுச்சி எடுத்துட்டு வந்தோம். ஒரு குழிய வெட்டி, அதுல முதல்ல கொஞ்சம் நெருப்பு போட்டு அதுக்கப்புறம் பனம் புடுக்க வச்சு மேல பச்சை மண்ணை வச்சு பூசிட்டு, எல்லாம் கரி ஆனதுக்கப்புறம் எடுத்து அரைச்சு காத்திக்கட்டனோம். ஓனான் குச்சிக்கு பதிலா பனம் மட்ட உபயோகித்தோம். இன்னும் நல்லா வந்துச்சு.

ஒரு சில வருசத்துக்கு பிறகு,

காலயில எழுந்திருக்கறது, மத்தது எல்லாம் அதேதான்.
காலயில சாப்டுட்டு வெளிய வந்தா, நல்லா சானிய தெரு வாசபடியில தெளிச்சு, அழகா கோலம்போட்டு, நடுவுல கையளவு சானிய உருட்டி, பூசணி இலையில வச்சு, அதுக்கு மேல பூசணி பூவ சொருகி வச்சிருந்தாங்க. 

எப்பவும்போல ராத்திரி அகல் விளக்கு வெளிச்சம், காத்திப்  பொறி வலயம் எல்லாம் நல்லா இருந்துச்சு . ஒரு சில வீட்ட தவிர மத்த வீட்ல எல்லாம் ஒத்த பல்புதான் இருக்கும். தெரு விளக்கும் எங்காவுது ஒரு எடத்துலதான் எரியும். அப்படி இருந்த கிராமம், இப்ப இன்னும் எல்லா வீட்லயும் அகல் விளக்கு வெளிச்சம், காத்தி சுத்தற நெருப்பு பொறி வலயம் எல்லாம் பாத்தாதான் தீப ஒளித் திருவிழாவோட அழகு தெரிந்தது.

என் சிறு வயது என்னை இதுவரைக்கும் இப்படி நின்னு இத்திருவிழாவின் அழகை ரசிக்க  நேரம் ஒதுக்கியதில்லை. விளயாட்டு மனப்பான்மையும் போட்டி மனப்பான்மையும் என்னை வெளியிலிருந்து பார்த்து ரசிக்க மறுத்துவிட்டது. சிறு வயதில் வேடிக்கை பார்ப்பது கேவலமான விசயமாகவேறு தெரிந்தது. போட்டியாலனாக இருப்பது மட்டும்தான் பெருமையாக இருந்தது.

சில வருசத்துக்கு பிறகு,

காத்தி சுத்தறது எல்லாம் மறந்துவிட்டார்கள். படைக்கறது. சாப்படறது. TV பாக்கறது. திருவண்ணாமலை தீபத்துக்கு கூட்டம் கூட்டமா போகறதுன்னு மாறியிருந்தார்கள். ஒரு சில அகல் விளக்கு மட்டும் அங்காங்கே பார்க்க முடிந்தது. பூசணி பூவை காணோம். சாணி தெளித்த வாசலை பாக்க முடியல.காத்திய காணோம்.மின்சாரம் இருளை போக்கியதுடன் தீபத்தின் ஒளியை ரசித்த மனிதர்களையும் மாற்றிவிட்டது. தீபத்தை ஓரிடத்தில் வைத்து  அங்கு குவிய ஆரம்பித்துவிட்டர்கள்.

நெருப்பு, நீர், காற்று, நிலம், ஆகாயம், ஒளி, ஒலி, .... என அனைத்தையும் தெய்வமாக்கி பாதுகாத்தவர்கள், ஒவ்வொன்றுக்கும் திருவிழா கொண்டாடி நன்றி தெரிவித்தவர்கள், தூரம் நின்று ரசித்தவர்கள் நம் முன்னோர்கள்.

அறிவியலின் வளர்ச்சி, முன்னோர்களின் நல்ல நம்பிக்கைகளை மூட நம்பிக்கையாக மாற்றிக்கொண்டு வருகிறது. ஆனால் இக்காலதிர்க்கேற்ற சரியான மாற்று முறையை கொடுக்காமல் - உண்மையான ரசனையை கெடுத்து, விளம்பரமாக்கி, வியாபாரமாக்கி, இயற்கையை பாதுகாக்க முடியாமல் தவிக்கிறது.

கருத்துகள் இல்லை: